

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் இந்த ஆண்டு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு சார்ந்து எண்ணற்ற படைப்புகளைப் படைத்திருக்கும் அ.கா.பெருமாளுக்கும் திருநங்கைகள் மரியாதையுடனும் சுயசார்புடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திவரும் செயற்பாட்டாளர் சுதாவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
அரசு, தனியார் அமைப்புகள் திருநர் நலத் திட்டங்களை முன்னெடுக்கும்போது, அதில் நிச்சயம் சுதாவின் ஆலோசனைகளும் கேட்கப்படும். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக, சமூகத்தில் திருநர் நலனை முன்னிறுத்தி இயங்கிவருபவர் சுதா. சென்னையில் ‘சகோதரன்’ அமைப்பில் பயணிக்கத் தொடங்கிய சுதா, தமிழகம் முழுவதும் திருநருக்கான களப்பணிகளைச் செய்துவருகிறார். பல மாநிலங்களில் திருநங்கைகள் அமைப்பைத் தொடங்கிடவும் சுதாவின் ஆலோசனையைக் கேட்கின்றனர்.
திருநங்கைகள் கலை நிகழ்ச்சிகளை சென்னை, டெல்லி எனப் பல இடங்களில் ஒருங்கிணைத்து நடத்தியவர் சுதா. மேடையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக நேர்த்தியாகச் செயல்படுவதில் திருநர் சமூகத்தைத் தாண்டியும் புகழ்பெற்றவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் திருநங்கை சுதா பெற்றிருக்கிறார்.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், காவல்துறை, மருத்துவர்கள், போக்குவரத்துத் துறை காவலர்கள் எனச் சமூகத்தின் பல நிலைகளில் இருப்பவர்களிடையேயும் திருநர் குறித்த புரிதலை ஏற்படுத்தி வருபவர். குடும்பத்தினரோடு சுமுகமாகப் பேசி குடும்ப அமைப்பிலிருந்து திருநங்கை, திருநம்பி ஆகியோரை வெளியேற்றாமல் பாதுகாக்கும் வழிகளையும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறும் திருநர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் சுதா செயல்பட்டுவருகிறார்.