

சிறு வயதிலிருந்தே நான் குண்டு என்றும் கறுப்பு என்றும் அடையாளப்படுத்தப்பட்டே வளர்ந் தேன். இந்த அடையாளம் என்னை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்ணாக நான் வளர விதை போட்டது. பலர் முன்னால் பேச, நடனம் ஆட, நடந்து செல்ல, விளையாட என்று எல்லாவற்றுக்கும் பயந்தேன், தயங்கினேன். நான் பேசினால் என் தோற்றத்தைக் கொண்டே எடை போட்டு விடுவார்களோ, என் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விடுமோ, நான் ஆடினால் என்னைக் கிண்டல் செய்வார்களோ, நான் விளையாடினால், ‘இவளுக்கு எதற்கு இது?’ என்று கூறி பலர் சிரிப்பார்களோ என்றே என் பால்ய பருவம் கடந்துவிட்டது.
இந்தப் பயமும் தயக்கமும் தானாகத் தோன்றியவை அல்ல. பல நாள்கள் நான் எதிர்கொண்ட அவமானங்கள், நிராகரிப்புகளின் விளைவு. பள்ளியில் நடனம் ஆட பெயர் கொடுத்தால், ‘உன் உடம்பை வைத்துக்கொண்டு இந்தப் பாடலுக்கு ஆடுவது கடினம்’, ‘உன் நிறம் இந்த நடனத்திற்குப் பொருத்தமாக இல்லை’ என்பது போன்ற விமர்சனங்களைக் கேட்டு வளர்ந்தேன்.
பிறகு நான் வளர்ந்து கல்லூரி சென்று, என் தாழ்வு மனப்பான்மையை ஓரளவு மறந்து, நான் இருக்கும் விதத்தில் என்னை நேசிக்கக் கற்றுக்கொண்டேன். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வால், இப்படியெல்லாம்கூட ஒருவரை உடலின் அளவை, நிறத்தைக் கொண்டு புண்படுத்த முடியும் என்று அறிந்தேன். நானும் என் அம்மாவும் கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தோம். வரும் வழியில் யாரோ தூரத்து உறவினர் ஒருவர் என்று என் அம்மா ஒருவரிடம் பேசினார். அவரை நான் முன்பின் பார்த்ததில்லை. ஆனால், யார் மூலமாகவோ என்னைப் பற்றி அறிந்திருந்தார் அந்தப் பெண். என்னைப் பார்த்ததும் அவரிடம் இருந்து வந்த முதல் வரி, ‘உன் மகள் மிகவும் கறுப்பாக, பூசின மாதிரி இருப்பாள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இவள் அவ்வளவு கறுப்பாக இல்லையே” என்றார். கேட்டதும் எனக்கு சுரீர் என்றது. ஒருவரை முதலில் பார்த்ததும் நல்லவிதமாகப் பேசுகிறோம் என்று பேசுவதற்கு இதுதான் கிடைத்ததா? சாதாரணமான நலம் விசாரித்தலோடு ஆரம்பித்து இருக்கலாமே.
என்னைப் பற்றி அவரிடம் இப்படிக் கூறியவரைவிட, இவர் மேல்தான் கோபம் அதிகமாக வந்தது. என் பெயர், என்ன படிக்கிறாய் என்று எத்தனையோ கேள்விகள் உள்ளன. ஆனால் அவர் மனதில் தோன்றிய முதல் எண்ணம் என்னை பற்றி யாரோ கூறிய உருவக் கருத்துதான். பதில் எதுவும் கூற இயலாமல் ஒரு புன்னகையோடு நான் நகர்ந்து விட்டேன். வரும் வழியெல்லாம் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டு வந்தேன். வாழ்க்கை முழுதும் இந்த உடல் கேலியும் நிற கேலியும் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்குமா? இதற்கு முடிவே இல்லையா? இது போன்ற எவ்வளவு காயங்களில் இருந்தும் உளைச்சல்களில் இருந்தும் என்னை நான் மீட்டுக்கொண்டு வருவது? இதில் இருந்து விடுபட வழியில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். உதவுங்கள் தோழிகளே.
- தாரணி தேவி, தருமபுரி.
| நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள்.
|