தனலட்சுமியின் மீது முத்துப்பாண்டி வைத்திருந்தது காதலா?

தனலட்சுமியின் மீது முத்துப்பாண்டி வைத்திருந்தது காதலா?

Published on

காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் அதற்கு நேரெதிரான நச்சு, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவருகிறது. பொதுவாக மிகப் பெரிய வணிக வெற்றியையும் ‘கல்ட்’ அந்தஸ்தையும் பெற்றுவிட்ட வெகுஜனத் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும். அப்படி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த வில்லன் கதாபாத்திரங்களில் ‘கில்லி’ (2004) திரைப்படத்தின் முத்துப்பாண்டிக்கு (பிரகாஷ்ராஜ்) தனித்த இடம் உண்டு. வில்லன்கள் திரைப்படத்தில் நிகழ்த்தும் வில்லத்தனத்துக்காக ரசிக்கப்படுவதில் பிரச்சினை இல்லை. அது வெறும் கற்பனை. ஆனால், நிஜத்தில் அந்தக் கதாபாத்திரங்களின் கொடிய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படுவதும் புனிதப்படுத்தப் படுவதும் ஆபத்தானது. தன்னைவிட 20 வயது இளையவரான தனலட்சுமி (த்ரிஷா) மீது வன்முறை மிக்க இச்சை வைத்திருந்த முத்துப்பாண்டியின் பெயரில் இப்போது அந்த ஆபத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

விளையாட்டு மட்டும் அல்ல

முத்துப்பாண்டியையும் தனலட்சுமி மீதான அவரது விருப்பத்தையும் நினைவுபடுத்தும் வகையிலான ஒரு வீடியோ எடிட் சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் உலவியது. பிரகாஷ்ராஜ், த்ரிஷா இருவரும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு தமது பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இதையடுத்து முத்துப்பாண்டியின் ‘காதலை’ மேன்மையானதாகவும் உண்மையான தாகவும் சித்தரிக்கும் மீம்கள் சமூக ஊடகங் களில் ட்ரெண்டாகின. சிலர் பதிவுகளையும் எழுதியிருந்தனர். #Justice for Muthupandi' என்னும் ஹாஷ் டேக் உருவானது. சில இணையதளங்களில் இந்த ட்ரெண்ட் குறித்த கட்டுரையும் வெளியானது.

இதுபோன்ற பதிவுகள் விளையாட்டுத்தன மானவையாக மட்டும் இருக்கும்வரை பிரச்சினை இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் விளையாட்டுத்தனமாகத் தொடங்கும் பல விஷயங்கள் விளையாட்டாக மட்டுமே நீடிப்பதில்லை. அப்படியாக முத்துப்பாண்டி தனலட்சுமியைப் பின்தொடர்ந்தது, அவரைத் தனது உடைமையாகப் பாவித்தது, அவரை அடைவதற்காக அவருடைய அண்ணன்களைக் கொன்றது, பெற்றோரை அச்சுறுத்தியது என அனைத்தையும் நியாயப்படுத்தும் பதிவுகளையும் கருத்துகளையும் சிலர் வெளியிடத் தொடங்கினர். படத்தின் இடைவேளை காட்சியில் தனலட்சுமியின் மீது கத்தி வைக்கப்படும்போது அவருக்கு வலிக்குமே என்று முத்துப்பாண்டி பதறும் காட்சியையும் நினைவுபடுத்தி முத்துப்பாண்டி தனலட்சுமி மீது வைத்திருந்ததுதான் உண்மையான காதல் என்று சிலர் தீவிரமாக எழுதிவருகின்றனர். முத்துப்பாண்டியின் குரூரச் செயல்களுக்கு சிலர் நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆணின் காதல் புனிதமானதா?

ஒரு தலைக் காதல் என்பது காதலிக்கப் படும் நபரை எந்த வகையிலும் துன்புறுத்தாத வரையில் பிரச்சினை இல்லை. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் நாயகனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்துவிட்டால் அது பெரும்பாலும் தெய்விகமானதாகவும் மனிதர்களால் உணர்ந்துகொள்ள முடியாத ‘புனித’ காதலாகவுமே முன்வைக்கப்படும்.

அந்த ‘தெய்விகமான’, ‘புனிதமான’, ‘உலகின் ஆகச் சிறந்த’ காதலைக் காதலிக்கப்படும் பெண் ஏற்றுக்கொள்வதற்கு நாயகனும் அவனைச் சார்ந்திருப்போரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவளைக் கடத்திச் செல்லலாம், பாறாங்கல்லைத் தலைமீது போட்டுக் கொன்றுவிட்டு தானும் செத்துவிடுவேன் என்று மிரட்டலாம், அவளைக் காப்பாற்ற வருவோரை அடித்துக் கொல்லலாம், எவ்வளவு முறை சொன்னாலும் கேட்காமல் எங்கு சென்றாலும் பின் தொடரலாம் (ஸ்டாக்கிங்), பொய்களைச் சொல்லி ஏமாற்றலாம், பல வகைகளில் மிரட்டலாம் அல்லது முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு பரிவைப் பெற முயலலாம்... இன்னும் பல வகையான வற்புறுத்தல்களின் மூலம் நாயகியின் காதலை ‘வெல்ல லாம்’! இவை அனைத்துமே தமிழ் சினிமாவின் காதல் நாயகனுக்கான லட்சணங் கள். இவற்றையெல்லாம் மீறி இறுதிவரை நாயகனின் காதலை ஏற்காத பெண் கொடியவராகச் சித்தரிக்கப் படுவார்.

இதேபோல் நாயகனை ஒருதலையாகக் காதலிக்கும் பெண்களின் காதல் ‘வெற்றி’யில் முடிந்த திரைப்படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான படங்களில் நாயகனை ஒருதலையாகத் தீவிரமாகக் காதலிக்கும் பெண்கள் வில்லிகளாக மாறி நாயகனாலோ அவனைச் சார்ந்தவர்களாலோ கொல்லப்பட, நாயகன் அவர் நேசிக்கும் பெண் ணுடன் இணைவார்.

விதிவிலக்காகச் சில திரைப்படங்கள்தாம் காதலிக்கும் பெண்ணின் மறுப்பைக் கண்ணியத்துடன் எதிர்கொண்ட நாயகர்களைப் படைத்திருக்கின்றன. வசந்த் எஸ். சாய் இயக்கிய ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ திரைப்படத்தின் நாயகன் தன் காதலை மறுத்துவிடும் பெண்ணிடம் அதே அன்புடனும் மரியாதையுடனும் பழகுவான். எஸ்.பி.ஜன நாதனின் ‘இயற்கை’ திரைப்படத்தின் நாயகன் இதைவிட ஒரு படி மேல். அந்தப் படத்தின் நாயகி தன் காதலன் திரும்ப வர மாட்டான் என்று தெரிந்த பிறகு நாயகனைக் காதலிக்கிறாள். இறுதியில் காதலன் வந்துவிட நாயகன் விலகிச் சென்றுவிடுவான். இந்த இரண்டு படங்களிலும் நாயகனாக நடித்த ஷாம் முன்னணி நட்சத்திரமல்ல என்பது யதேச்சையான ஒன்றல்ல.

காதலும் உடைமை உணர்வும்

இப்படியாகத் தமிழ் சினிமா ஆண்களின் ஒருதலைக் காதலைப் புனிதப்படுத்தி வருவதற்கும் சமூகத்தில் ஒரு பெண்ணின் காதல் மறுப்பை ஏற்க முடியாத இளைஞர்கள் அந்தப் பெண்ணின் மீது வசைச் சொற்களை வீசுவது தொடங்கி அமிலம் வீசுவது, கொலை செய்வது வரை பல வகையான வன்முறைகளை ஏவுவதற்கும் நெருங்கிய தொடர் பிருப்பதை மறுக்க முடியாது. நாயகனின் ஒருதலைக் காதலைப் புனிதப்படுத்தும் திரைப்படங்களின் தாக்கம் வில்லன்களின் ஒருதலைக் காதலையும் புனிதமானவை யாகக் கருதும் மனநிலைக்கு வித்திட்டிருப்பதை இந்த ‘ஜஸ்டிஸ் ஃபார் முத்துப் பாண்டி’ ஹாஷ் டேக் உணர்த்துகிறது. உண்மையில் பெரும்பாலான ஆண்கள் முத்துப்பாண்டியின் மன நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் பிறர் கையில் இருக்கும் பொம்மையை அடம்பிடித்துத் தனதாக்கிக்கொள்வதைப் போலத்தான் காதலியையும் அணுகுகிறார்கள். இந்த உடைமை உணர்வு மிக மோசமானது என்பதை நம் திரைப்படங்கள் உணர்த்தத் தவறுகின்றன.

ஒரு பெண்ணின் நிராகரிப்பைக்கூட இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனத்தோடுதான் நாம் ஆண்களைத் தலைமுறை தலை முறையாக வளர்த்தெடுத்து வருகிறோம். அதைத்தான் ‘ஆண்மை’ என்று அவர்களை நம்பவைத்துப் பெண்களுக்கு அநீதி இழைத்துவருகிறோம். தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு இருப்பதைப் போலவே அவனை நிராகரிக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. பெண்ணை ஆண் அடைய வேண்டிய போகப் பொருளாகக் காட்சிப்படுத்துவதோடு, ஆணின் காதலை மறுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்கிற பிற்போக்குத்தனத்தை விதைக் கும் திரைப்படங்களைத் தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள் மீது காதலின் பெயரால் ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகள் குறையும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in