

மணமானபின் முதல் வருடம் மிக முக்கியமான காலம். ஏனெனில், இது ரொமான்ஸின் உச்சக்கட்டம். காதல் மொழியின் பரிமாற்றங்கள், சீண்டல்கள், ஊடல்கள், கூடல்கள், அந்தரங்க உறவில் ஒரு வேகம் இவையெல்லாம் இருக்கும்போது பந்தம் வலுப்படும். இல்வாழ்வில் பின்னால் வரக்கூடிய சவால்களை எதிர்நோக்க இந்தப் பிணைப்பு கைகொடுக்கும். உணர்வுரீதியாக ஒரு பாதுகாப்பைக் கொடுக்கக்கூடிய உறவு இது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் இது.
மணமாவதற்கு முன், இருவரும் கற்பனையில் தனக்குப் பொருத்தமான துணையை உருவகம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அமைந்த இணை பெரும்பாலும் அதிலிருந்து மாறுபட்டுத்தான் இருக்கும்! காதல் திருமணங்களிலோ துணையின் குறைகள் முதலிலேயே தெரிந்திருந்தாலும், மணமானபின் மற்றவரை மாற்றிவிடலாம் என்று நம்புவார்கள். அது சாத்தியமில்லை என்று பிறகுதான் புரியும்! ஏமாற்றங்கள் ஏற்படும்போது மற்றவருக்குச் சொல்லிப் புரியவைக்க பார்ப்பார்கள். ஆனால், தற்காலிகமாக வரும் மாற்றம் விரைவில் மறைந்து, பழைய நடத்தை தலைதூக்கும். அப்போது எரிச்சல் வர ஆரம்பிக்கும். நாளடைவில் எரிச்சல் கோபமாக மாறி, பெரிய சண்டைக்கு வித்தாகும்.
இந்த இடத்தில் ஒரு கணம் சிந்திக்கலாமா? எத்தனை தம்பதி புகார் செய்யும் முன், ‘உன் எதிர்பார்ப்புகளை நான் நிறை வேற்றினேனா?’ என்று தன் துணையிடம் கேட்டிருப்பார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்தச் சமத்துவவாதிகளை.
ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைச் சரிகட்டக் கற்றுக்கொண்டால், மற்ற பின்விளவுகளைத் தவிர்க்கலாமே! எப்படி? ‘விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு’ என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்க்கைத் துணையிடம் நாம் கவனிக்கத் தவறிய நல்லவற்றைக் கண்டு மகிழலாம். பொதுவாக மனபலம் மிக்கவர்கள் (ரப்பர் பந்துபோல் உள்ளவர்கள்) ஏமாற்றங்களைத் தாண்டி பாஸிட்டிவாகப் பயணத்தைத் தொடர்வார்கள். மன பலம் குறைந்தவர்கள் (மரத்துண்டுபோல்) ஏமாற்றத்தை ஏற்க முடியாமல், துவண்டுபோய் வேதனைப்படுவார்கள். இவர்களுக்குத் தீர்வு தங்கள் மனத்தில் நல்ல எண்ணங்களை விதைப்பதுதான்.
அன்பும் அக்கறையும் கணவன் மனைவி உறவில் மன நிறைவு கிடைக்கவும், பாலுறவு ஆரோக்கியமாக அமையவும் இருவரது பங்களிப்பும் தேவை. இவை ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கின்றன. மனநிறைவு இல்லாவிட்டால் கணவன் - மனைவி உறவில் ஈடுபாடே இருக்காது. மன நிறைவு என்பது இருவரது உணர்வுபூர்வமான தேவைகளைப் பற்றியது.
உளவியல் நிபுணர், அட்லர் (Adler) உணர்வுப்பூர்வமான தேவைகளைப் பூர்த்திசெய்தால், உறவு ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார். இரண்டு விஷயங்களை அவர் தெளிவாக விளக்குகிறார். 1. உடைமை உணர்வு: பாதுகாப்பான உணர்வு, அன்பு, அக்கறை, கரிசனம், கவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிணைப்பு இது. 2. முக்கியத்துவம்: உறவில் தனது இன்றியமையாத நிலை, தன் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவது, மற்ற உறவுகளிலும் மேம்பட்ட ஒரு அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும் இது.
இந்த இரு விஷயங்களையும் எப்படி உணர்த்துவது அல்லது வெளிப்படுத்துவது என்கிற குழப்பம் சிலருக்கு இருக்கலாம். கதிர்-மல்லி தம்பதி இவற்றை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.
உடைமை: எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு (அன்பு), ஏன் முகம் வாடியிருக்கு? (அக்கறை)
முக்கியத்துவம்: நீ எனக்கு ரொம்ப உறுதுணையா (அ) பக்கபலமா இருக்கே (பங்களிப்பின் அங்கீகாரம்), நீ இல்லாம பிக்னிக்கா? வாய்ப்பே இல்லை (மேம்பட்ட அந்தஸ்து).
இவற்றை கதிர் - மல்லி இருவருமே சொல்வார்கள். இந்தத் தேவைகள் பூர்த்தியானால் உறவு செழிக்கும் என்கிறார் அட்லர். கதிர் - மல்லியைப் போன்ற தம்பதி, நிறைவேறியிருக்கும் தேவைகளால் மகிழ்ந்து அனைத்துவிதத்திலும் ஒத்திசைவோடு இருப்பார்கள். இதுபோன்ற இணக்கமும் புரிதலும் கணவன் - மனைவி இடையே இல்லையென்றால் என்னவாகும்? அதை அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர், உளவில் ஆற்றாளர்