

பள்ளிப் பருவத்தில் (எந்த வகுப்பு என்று நினைவில் இல்லை) ‘Sydney carton's sacrifice’ என்கிற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதில் கார்ட்டன் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுத்தது என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வயதில் நான் அப்படித்தான் புரிந்துகொண்டேன். பின்னாட்களில் தான் தெரிந்தது தான் நேசித்த பெண்ணின் கணவனைக் காப்பாற்றத்தான் உயிர் கொடுத்தான் என்று.
நண்பனுக்காக உயிரையே கொடுக்க வேண்டும் என்றால் அது எப்பேர்ப்பட்ட அன்பாக இருக்க வேண்டும். அந்த அன்பு நமக்கும் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். நட்பைப் பற்றிய எண்ணம் ஆழமாகப் பதிந்து தேடலும் இருந்ததால் என்னால் நட்பை எளிதில் இனம் காண முடிந்தது. எந்த உறவாக இருந்தாலும் அதில் நட்பை முதன்மைப்படுத்தியதால் எந்தவிதச் சிக்கலோ, சிடுக்கோ இன்றி என் வாழ்க்கை நேர்க்கோட்டில் பயணிக்க அந்த நூல் பெரிதும் உதவியது. நான் தவறாகப் புரிந்துகொண்டா லும் சரியான வழிகாட்டி அந்த நூல். வருடங்கள் பல உருண்டோடிச் சென்றாலும் சிட்னி கார்ட்டன் ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல என் மனத்தில் நிலையாக நிற்கிறார்.
சிறு வயதில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களுடன் அளவளாவ வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கோயில், வீடு, பள்ளி என்கிற முக்கோணத்துக்குள் சிக்கியிருந்த வாழ்க்கையில் நூலகம் கற்பனையிலேயே கலைந்துவிடும். இந்தக் குறையைப் போக்க அப்பா அடிக்கடி புத்தகங்களைப் பரிசளித்துக்கொண்டே இருப்பார். அந்த வகையில் அவர் தந்ததுதான் கமலா தாஸ் எழுதிய ‘My story’ (என் கதை).
தங்கு தடையின்றி நம் கரத்தைப் பற்றிக்கொண்டே லகுவாக அழைத்துச் சென்ற எளிய நடை, சம்பவங்கள், அதை நேர்மையாக எடுத்துச் சொன்ன அவரது துணிவு போன்றவை என்னைப் பிரமிக்க வைத்தன. அதுவும் புத்தக அட்டையில் இருந்த தீர்க்கமான அவரது கண்கள் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்து, பெண்களுக்குத் துணிவு உண்டு என்று முகத்தில் அறைந்தாற்போல் சொன்னது. அதுவரை பெண்கள் என்றால் பொறுமை, தியாகம், மென்மை, தனிமையில் அழுதல் என்று காலம்காலமாகக் கடத்திவரும் பிம்பம்தான் என் மனத்தில் இருந்தது. பெண்மையின் மறுபக்கத்தைக் காட்டியவர் கமலா தாஸ். அந்தத் தீர்க்கமான கண்கள் இன்றும் உள்ளத்தில் உறைந்து பெண்கள் என்றால் தைரியம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
ஜெயகாந்தன் தன் பதின்பருவத்தில் ஒரு பெண்ணுடன் பழகியதும் அவள் வேறு ஊருக்குப் போனதும் தாங்கொணா துயரில் ஆழ்ந்ததும் மறுபடியும் அவள் ஊருக்கு வந்தபோது அவரைவிட உயரமாய் இருப்பதைப் பார்த்து அவரது விடலைக் காதல் குப்புறக் கவிழ்ந்ததையும் படிக்க நேர்ந்தது. விடலைக் காதலைப் பற்றிய தெளிவான புரிதலை ஜெயகாந்தனைத் தவிர வேறு யாராவது தர முடியுமா எனத் தெரியவில்லை.
கடையிலிருந்து வந்த பொட்டலமாக இருந்தாலும் சரி, வீட்டு காம்பவுண்டுக்குள் வந்து விழும் துண்டுப் பிரசுரமாக இருந்தாலும் சரி, அவ்வளவு ஏன் பட்டாசு வெடித்து குவியல் குவியலாகக் கிடக்கும் காகிதங்களையும்கூடப் பார்க்காமல், படிக்காமல் விட்டதில்லை.
படக்கதைகள் என்றால் அலாதிப் பிரியம் எனக்கு. படக்கதைகள் மூலமாகத்தான் அரிச்சந்திரன், நளன், கண்ணகி எல்லாரும் என்னுடன் கைகுலுக்கினார்கள்.
எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தபோது ஷேக்ஸ்பியர், வேர்ட்ஸ்வர்த், சார்லஸ் டிக்கன்ஸ், எமிலி டிக்கின்ஸன் (எமிலி அனுபவித்த தனிமை இன்னும் முள்ளாக நெருடுகிறது) எல்லாரும் மானசீக உறவானார் கள். அந்த உறவு நிஜ வாழ்க்கையின் கசப்புகள் என் மீது படியாமல் பாதுகாத்தன என்றால் மிகையில்லை.
புத்தகம் ஒரு மாயாஜால உலகம். அதில் நுழைந்துவிட்டால் போதும், என்றென்றும் மேகமாக சஞ்சரித்துக்கொண்டே இருக்கலாம்.
- ஜே. லூர்து, மதுரை
| வாசிப்பை நேசிப்போம் புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை, |