

உண்ணாமலைக்கு எப்போதும் ஊர் பெண்கள் எழுந்து வாசல் தெளிக்கும் முன் தான் எழுந்து வாசல் தெளித்துவிட வேண்டும். அப்போதுதான் அவள் மனசு நிம்மதியாக இருக்கும். அன்றும் அப்படித்தான் கூரையில் அடைந்திருந்த கோழிகள் தலையைத் தொங்கப்போட்டவாறு பொய்த்தூக்கம் தூங்கிக்கொண்டிருக்க இவள் எழுந்து வாசலைப் பெருக்கினாள். அப்போது நடுவாசலில் பத்து ரூபாய் கிடந்தது. பத்து ரூபாய் என்பது அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க பணம். புண்ணீஸ்வரன் நாப்பது ரூபாய்க்கு ஒரு சோடி காளைகளை சங்கரன்கோவில் சந்தையில் பிடித்துவந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு ஊரே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனதோடு அன்று ஆணும் பெண்ணும் காட்டு வேலைக்குக்கூடப் போகாமல் இவர்களின் வாசலில் வந்து கூட்டம்போட்டு வேடிக்கை பார்த்தது. அப்படிப்பட்ட காலத்தில் பத்து ரூபாய் காணாமல் போனால் யாராவது விடுவார்களா?
உண்ணாமலை அந்தப் பத்து ரூபாயை ஆசையோடு மடியில் எடுத்துவைத்துக் கொண்டாள். விடியல் கூடுமுன்னே, “அய்யய்யோ, அய்யய்யோ... என்னை இப்படிப் போட்டு அடிக்கானே. இதைக் கேப்பாரில்லையா” என்று கூப்பாடு போட்டுக்கொண்டே பவுனு தெருவுக்கு ஓடி வர அவள் புருசன் கருசய்யா, “விதைப்புக்காக என் அண்ணன் வீட்டுல போயி பத்து, இருபது ரூபா வாங்கி வான்னு இவளை அனுப்பிவிட்டேன்” என்று சொல்ல, ஊர்ப் பெரியவரான பொன்னாயிரத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “ஏன் அந்த ரூவாய நீ போயி கேக்க வேண்டியதுதானே. உன் வீட்டுப் பொம்பளைய எதுக்குத் தூது அனுப்பினே?” என்றார்.
“அவனுக்கும் எனக்கும் ஒரு செடவு. இவ அவன் வீட்டுக்குப் போயி கொஞ்சி குலாவிட்டு வருவா. அதேன் இவளைப் போவச் சொன்னேன்” என்றான் கருசய்யா. “சரி அதுல இப்ப என்ன பிரச்சினை?” என்று பொன்னாயிரம் கேட்க, “இருவது ரூவா கேட்டதுக்கு அவன் பதினஞ்சி ரூவாய கொடுத்துவிட்டிருக்கான்” என்று சொல்லி முடிக்குமுன்னே கூட்டத்தில் யாரோ ஒருவர், “அவன் நல்லவன். பணத்தைக் கொடுத்திருக்கான். என் தம்பின்னா அரிவாளை எடுத்துட்டு வந்துருவான்” என்றதும் ஊர் நாட்டாமை, “ஏய் பேசாம இருப்பா. ரொம்ப அக்குசான (முக்கியமான) விசயத்தைக் கேட்டுக்கிட்டு இருக்கமில்ல. நீ சொல்லு கருசு” என்றார். கருசும், “இவ அந்தப் பதினஞ்சு ரூவாயில அஞ்சு ரூவாய மட்டும் வீட்டுக்குக் கொண்டு வாரா. எங்கே அந்தப் பத்து ரூவாயன்னு கேட்டா அதை மடியிலதேன் வச்சிருந்தேன். எங்கனயோ விழுந்திருச்சிங்கா. அப்ப இவளை வீட்டுக்குள்ள வச்சிருக்கலாமா”னு சொல்லிக்கிட்டே மீண்டும் கையை ஓங்கிக்கொண்டுவர அவனை இருவர் பிடித்துக்கொண்டனர்.
“இருப்பா நல்லா கேப்போம்” என்றவர் கருசா பொண்டாட்டியிடம், “தாயீ, நீ ரூவாய பத்திரமாதான கொண்டாந்த?” என்றார். “ஆமா மாமா. நம்ம ஊருக்குள்ள நுழைஞ்சதும்கூட ரூவாய எடுத்துப் பார்த்தேன். இருந்துச்சி” என்றாள். உடனே நாட்டாமை, “ரூவா எங்கயும் போகல. நம்ம ஊருக்காரகதேன் எடுத்துருக்காக. ஒழுங்கா அந்தப் பத்து ரூவாய எடுத்தவங்க கொண்டாந்து கொடுத்திருங்க. வழியில ரூவா கெடந்தா யாரும் எடுக்கத்தேன் செய்வாக. அது உங்க மேல குத்தமில்ல. அப்படி கொடுக்கலேன்னா உங்க வீட்டு அடுக்குப்பானை சட்டி, பொட்டி அம்புட்டுக்கு ஏன் உங்க கூரையைக்கூடப் பிரிச்சி மேஞ்சிருவோம். இன்னும் ஒரு நாழியதேன் உங்களுக்கான நேரம்” என்று சொல்லி முடிக்கவும் உண்ணாமலை பதறிப்போனாள். எப்படியும் இந்த ரூபாயைக் கொடுக்கக் கூடாது. ரெண்டு ஆடு வாங்கி வளக்கணும் என்று நினைத்தவள் வீட்டுக்குள் எங்கே வைத்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நினைத்தவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுப்பு ஊதும் ஊதுகுழலில் ரூவாயைச் சுருட்டி ஒளித்துவைத்துவிட்டு வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் தீ எடுக்க வந்த பூமாரி அடுப்பு அணைந்து கிடப்பதைக் கண்டு ஊதுகுழலை எடுத்து ஊத பத்து ரூபாய் நோட்டு அடுப்புக்குள் விழுந்து எரிந்தது.
(தொடரும்)