ஆண் மட்டும் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?

ஆண் மட்டும் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?
Updated on
3 min read

பெண்களின் அடிப்படை உரிமைகள்கூடக் கெஞ்சிப் பெற வேண்டிய சலுகையாகவும் அவர்களது அறிவுச் செழுமை திமிராகவும் திரிக்கப்பட்ட வரலாற்றின் மீது நின்றபடிதான் சமூக நீதியைப் பேசிக்கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியத்தின் மரபுச் சட்டகத்திலும் நவீன யுகத்தின் புதுக்கவிதையிலும் குன்றா வனப்புடன் இடம்பெற்றிருக்கும் பெண்களுக்கு அறிவியல் – தொழில்நுட்பத் தளத்தில் இடம்பெறுவது என்பது இன்னும் முழுமையாகக் கைகூடாத கனவாகத்தான் இருக்கிறது.

குடும்பநலக் கணக்கெடுப்பு 5இன்படி ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 84.4, பெண்களின் எழுத்தறிவு விகிதம் 71.5. ஆண்களே இன்னும் முழுமையாக எழுத்தறிவு பெறாத நாட்டில் அனைத்துத் தளங்களிலும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இந்த அளவுக்காவது எழுத்தறிவு பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ‘எழுத்தறிவு’ என்பது ஏதாவதொரு இந்திய மொழியில் தங்கள் பெயரை எழுதத் தெரிந்தால் போதும் என்கிற நிலையில் உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி, ஆய்வுப்புலம் எனக் கணக்கெடுத்தால் எத்தனை பெண்கள் அந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்? ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் கல்லூரியில் சேர்கிறார்கள் என இந்தக் கேள்விக்கும் உவப்பான பதிலைத் தருகிறது மத்திய அரசு நடத்திய தேசிய உயர்கல்வி கணக்கெடுப்பு. இந்தக் கணக்கெடுப்பு கல்விப் புலத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பாகுபாட்டைத் துலக்கமாக்குகிறது. கலைப்புலத்தில்தான் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்கிறார்கள். அறிவியலும் வணிகவியலும் அதற்கடுத்த நிலையில் இருக்கின்றன. பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு களில் குறைவான பெண்களே சேர்கிறார்கள். படிப்பில்கூட ‘ஆண் படிப்பு’, ‘பெண் படிப்பு’ என்கிற பாகுபாடு நிலவுவதைத்தான் இது காட்டுகிறது.

ஆண்களை முந்தும் பெண்கள்

நம் இந்தியச் சமூகத்தில் உயர் கல்வி என்பது ஆணைப் பொறுத்தவரை வேலைக்குச் சென்று பொருளீட்ட உதவுவது; பெண்களுக்கோ பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதற் கானது என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் ஆகும்வரை ஏதாவது படிக்கட்டுமே என்கிற எண்ணத்தில்தான் பெரும்பாலான பெண்களுக்கு உயர்கல்வி அனுமதிக்கப்படுகிறது. பெண்கள் எப்போதும் யாரையாவது சார்ந்து வாழ வேண்டும் என்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான் ஆணுக்குத் தொழிற்கல்வியையும் பெண்ணுக்குக் கலைக் கல்வியையும் பரிந்துரைக்கிறது. இளநிலைப் படிப்புக்கே இந்த நிலை என்றால் ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்துப் பெண்கள் நினைத்தும் பார்க்க முடியாது. உலக அளவில் 30 சதவீதப் பெண்களே ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு அனுமதிக்கப்பட, இந்தியப் பெண்கள் அதில் பாதியைக்கூட இன்னும் எட்டவில்லை. இப்படிப் பெண்களுக்கான வாய்ப்புகளை மறுத்துவிட்டு அவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு என்று கட்டமைப்பது எளிதுதானே.

உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக் கையில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு முந்துகிறது. பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடு கையில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் செயல்திட்டங்களைக் கட்டமைத்ததிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் ‘புதுமைப் பெண்’ போன்ற திட்டங்களும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், இந்த உயர்கல்வி என்பது, வாழ்க்கைக்கான கல்வியாக இருக்கிறதா? பண்டைய வரலாற்றையும் கணிதத் தேற்றங்களையும் கற்கிற மாணவர்களுக்குச் சமகால அரசியல் ஏன் மழைமறைவுப் பிரதேசமாகவே இருக்கிறது? பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றைப் பெருமிதத்துடன் புத்தகங்களில் அச்சிடுகையில் அவற்றில் மலிந்திருக்கிற பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றைக் களைவதற் கான தேவையையும் ஏன் அச்சிலேற்று வதில்லை? மூன்றாண்டு பட்டப்படிப்பை முடிக்கிற பெண்ணுக்கு வாழ்க்கையை எதிர்கொள்கிற துணிவை இந்தக் கல்வி வழங்குகிறதா?

விருப்பம் இல்லாத ஆண்கள்

கற்கும் கல்வி பெண்களுக்குப் பொருளாதார ரீதியாகத் துணைநிற்கிறதா? கல்லூரிப் படிப்பை முடிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் வீட்டுக் குள் முடங்குவது மத்திய, மாநில அரசுகளின் போதாமையைத்தான் காட்டுகிறது. ‘படிக்கிற அனைத்துப் பெண்களும் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?’ என்று அறிவுப்பூர்வமாகப் பலர் யோசிக்கக்கூடும். படித்து முடிக்கிற அனைத்து ஆண்களும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற நிலையில் அதே படிப்பைப் படிக்கிற பெண்கள் ஏன் வேலைக்குப் போகக் கூடாது? இதற்கான பதிலை மத்திய அமைச்சகத்தின் ஆய்வு முடிவு சொல்கிறது. பெண்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதற்கான காரணங்கள் சிலவற்றை அந்த ஆய்வு முன்வைக்கிறது. அதில் முக்கியமானது, படிப்பு சார்ந்த விருப்பம். ‘படிக்க விருப்பமில்லை’ என்று சொல்லும் பெண்கள் ஆண்களைவிடக் குறைவு. அதாவது, பெண்கள் தங்கள் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி படிப்பைக் கைவிட வைக்கப்படுகிறார்கள். பெண் என்பவள் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவள், சிரத்தையெடுத்து அவளைப் படிக்கவைக்க வேண்டுமா என்றுதான் பெரும்பாலான குடும்பங்கள் எண்ணுகின்றன. இதுவும் பெண்களின் கல்வியார்வத்துக்குப் பின்னடைவாக இருக்கிறது.

படிப்பைக் கைவிடுதல் ஆண், பெண் இருபாலருக் கும் நடக்கிறது என்றபோதும் பெண்களுக்கான காரணங்கள், நம் ஆணாதிக்கச் சமூகத்தின் அசலான முகத்தைப் பிரதிபலிக்கின்றன. வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வதற்காகப் படிப்பைக் கைவிடும் ஆண்கள் மிகக் குறைவு. ஆனால், பெண்களில் 30 சதவீதத்தினரின் படிப்பார்வம் குடும்பப் பொறுப்புகளைக் காரணம்காட்டி வேருடன் பிடுங்கப்படுகிறது. வேலையில் சேர்ந்து பொருளீட்டுவதற்காக 37 சதவீத ஆண்களின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிற நிலையில் பெண்களில் வெறும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பொருளாதாரத் தேவைக்காகப் படிப்பைத் துறக் கின்றனர். ஊதியம் பெறுகிற வேலைகளில் ஆண்களை ஈடுபடுத்துவதும் ஊதியமும் அங்கீ காரமுமற்ற வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதும் ஆணாதிக்கச் சமூகத்தின் அடக்கியாளும் தந்திரமே. பொருளாதாரத் தேவைகள் தொடங்கி அனைத்துக்கும் ஆணின் கையைப் பெண்கள் நம்பியிருக்க வேண்டும் என்பதற்காக காலம்காலமாகச் செய்யப்பட்டுவரும் ஏற்பாடு இது. இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பதுபோல் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது திருமணம்.

திருமணம் என்னும் தடை

2017 – 18 கணக்கெடுப்பின்படி ஒரேயொரு ஆணின் படிப்புகூடத் திருமணத்தால் தடைபட வில்லை. ஆனால், 13 சதவீதப் பெண்களின் படிப்பு திருமணத்தால் தடைபட்டுள்ளது. பள்ளிக் கல்விக்குத்தான் இந்த நிலை என்றில்லை. ஆராய்ச்சிப் படிப்புகளுக்குக் குடும்பச் சூழல், பொருளாதாரம் போன்றவற்றோடு திருமணமும் பெரும் தடையாக இருக்கிறது. ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க ஆறேழு ஆண்டுகள் ஆகிற நிலையில் பெண்ணுக்குத் திருமண வயது தாண்டிவிடுகிறது என்பது குடும்பங்களின் வாதம். பெண்களைத் திருமணச் சந்தையில் விலைபோகும் பொருளாகவும் 21 வயதுக்குள் இறக்கிவைக்க வேண்டிய சுமையாகவும் கருதும் மனநிலைதான் இதற்குக் காரணம். சில பரந்த மனங்கள், திருமணம் செய்துகொண்டு பெண்கள் படிக்கலாமே எனச் சொல்லக்கூடும். குடும்பப் பொறுப்புகளும் குழந்தை வளர்ப்புமாக மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் பெண்ணுக்குக் கல்வி என்பது நிச்சயம் மலைவாழையாக இனிக்காது. கல்வி நிறுவனங்களிலும் ஆய்வுப் படிப்பிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் பெண்களின் படிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

உயர்கல்வி கற்பதால் என்ன பலன் என்கிற கேள்விக்கு அரசுகள் சரியான பதில் அளிக்காத நிலையில், முதுநிலைப் படிப்பில் ஏன் சேர வேண்டும் என்று பெண்கள் நினைப்பது இயல்பே. இளநிலை, முதுநிலை என எது படித்தாலும் வேலை வாய்ப்பிலோ வருமானத்திலோ எந்த மாற்றமும் இல்லை என்கிற நிலையில் அவர்கள் எப்படி மேற்படிப்பைப் பற்றிச் சிந்திப்பார்கள்? கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு பொருளாதாரரீதியாகவும் கைகொடுக்கிறபோதுதான் பெண்களின் உயர்கல்வி சதவீதம் உயரும். ஆணின் படிப்பை விடப் பெண்ணின் படிப்பு ஏன் முக்கியம் என்றால் படித்த பெண்கள், அடுத்த தலைமுறையைக் கைதூக்கிவிடுகிறார்கள். படித்தவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதப் பெண்கள் தங்கள் மகள்களின் உயர்கல்வி கனவுக்குத் துணைநிற்கிறார்கள்.

படித்த பெண்களிடையே குழந்தை இறப்பு விகிதம் குறைவு. பொருளாதாரத் தன்னிறைவு அவர்களைத் தற்சார்புடன் வாழவைக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு அவற்றில் முதுகலைப் படிப்புகளை அதிகரிப்பது, படிப்புக் கேற்ற வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பைப் புறக்கணிக்காமல் இருப்பது, உயர்கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்றவற்றில் அரசுகள் கவனம்செலுத்த வேண்டும். பெண் கல்வியில் அரசுக்கு அக்கறை இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வழியும் இதுதான்.

பெண்கள், சிறுமிகளுக்கான சர்வதேச அறிவியல் நாள்: பிப்ரவரி 11

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in