விரலோடு ‘விளையாடிய’ மிக்ஸி

விரலோடு ‘விளையாடிய’ மிக்ஸி
Updated on
2 min read

எல்லா நாளையும்போலத் தான் அன்றும் காலை ஐந்து மணிக்கு சமையலறையில் பரபரப்பாக இருந்தேன். குழம்பு ஒரு பக்கமும் சோறு இன்னொரு பக்கமும் கொதித்துக்கொண்டிருந்தன. தேங்காயை அரைத்துச் சேர்க்க வேண்டியதுதான் பாக்கி. தேங்காய்த் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு மூடி ஸ்விட்சை முடுக்கிவிட்டபடி இடதுபுறம் தாளிதத்துக்கு உரியவை சரியாக உள்ளனவா எனப் பார்வையை ஓட்டிய நொடியில் வலது கைவிரல்கள் வலிக்க சுதாரித்துப் பார்த்தேன். சரியாக மூடப்படாததாலோ என்னவோ ஜாரின் மூடி பறந்திருந்தது. தெறிக்காமல் இருக்க மேலே வைத்திருந்த கை விரல்கள் ஜாருக்குள் சென்று அடி வாங்கி இருக்கின்றன. வேகமாக ஸ்விட்சை அணைத்துவிட்டு விரல்களைப் பார்த்தேன். சுண்டு விரல், நடுவிரல் இரண்டும் பக்கவாட்டில் வெட்டுப்பட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. மோதிர விரல் ஒரு இஞ்ச் வரை கால் வாசி நகத்தையும் சேர்த்து பிளந்து தொங்கிக் கொண்டிருந்தது.

இனம் தெரியாத பதற்றம் உடலெங்கும் பரவ, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வலியைக் குறைக்கும் மருந்து டிரிப்ஸ் மூலம் ஏறத் தொடங்கியது. ஊசி போட்ட சில நிமிடங்களில் வேர்த்துக்கொட்டியது. நாவறண்டு தண்ணீருக்குத் தவித்தேன். கால் மணி நேரத்தில் மூன்று வாட்டர் பாட்டில்களைக் காலி செய்தேன். வியர்க்கிறது எனச் சொல்லி காற்றாடியைச் சுழலவிடச் சொன்னேன். இருப்பது ஏசி அறைதான் என்றனர். பத்து நிமிடம் கழித்துத்தான் எனக்கு வந்தது பேனிக் அட்டாக் என்று சொன்னார்கள்.

வலது கை மோதிர விரலின் நகத்தை முழுமையாய் எடுத்துவிட்டு, பிளந்த பகுதிகளை இணைத்து ஐந்து தையல்கள் போட்டார் மருத்துவர். மற்ற இரு விரல்களையும் சுத்தப்படுத்தி மருந்திட்டுத் தனித்தனியாகக் கட்டுகள் போடப்பட்டன. வலி குறைக்க மாத்திரைகள். கட்டு போடப்பட்ட விரல்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ‘மருதாணி பூச வேண்டிய விரல்கள் தேவசேனா, இப்படியா வெட்டுப்பட்டு பிளாஸ்திரி போட்டு இருப்பது’ என அந்த ரணகளத்திலும் தோன்றியது. வலது கை விரல்களை மேல் நோக்கி இருக்கும்படி உடலோடு சேர்த்து வைத்துக்கொண்டு முதல் மூன்று நாள்கள் இருக்க நேர்ந்தது. அதற்கடுத்த நாள் தீபாவளி. எந்த வேலையும் செய்ய விடாமல் வேடிக்கை பார்த்தபடி வெறுமையுடன் நகரச் செய்தது திருநாள்.

நீங்காத பதற்றம்

அடிபட்ட புதிதில் எங்கோ தொலைவில் ஒலிக்கும் மிக்ஸி சத்தம்கூடச் சில நாள்களுக்கு திடுக்கிடும் உணர்வைத் தந்தது. வீட்டில் சாம்பல் நிறத்தில் தேமேவென அமர்ந்திருந்த மிக்ஸியை எடுத்து வெளியில் எறிய கைகள் பரபரத்தன. கை சரியான பின் பார்த்துக்கொள்ளலாம் எனத் தேற்றிக்கொண்டேன். இரவே நிதானமாக அரைத்து அடுத்த நாளுக்குத் தேவையானவற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்கும்படி சிலர் அறிவுறுத்தினர். சிலர், சரியாக மூடாத ஜாரைப் பொருத்தி ஸ்விட்ச் போட்டால், இயக்கவிடாத மிக்ஸி என ஒரு குறிப்பிட்ட பிராண்டை வாங்கும்படி பரிந்துரைத்தனர். சொல்லி வைத்த மாதிரி பலரும் கேட்டது, ‘கவனமா இருப்ப, நீ எப்படி விரலை விட்ட?’ என்பதுதான். மையமாய்ச் சிரித்து வைத்தேன்.

பத்து நாள்கள் கழித்துத் தையல் பிரித்தபோது விநோத வலி. ஆறாத புண் மோதிர விரலின் மீதான கட்டை மட்டும் அடுத்த ஒரு வாரத்திற்கு இருக்கச் செய்தது. இரு வாரங்கள் கரைந்திருக்க நகம் எடுத்த பகுதியிலும் அதைச் சுற்றிலும் உள்ள புண் மெது மெதுவாக எண்பது சதவீதம்வரை ஆற, இந்தப் பக்கம் இரண்டு மாதங்கள் பறந்திருந்தன. மெலிதாக நகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தாலும், மோதிர விரலைத் தொட்டால் சுறுசுறுவென இருந்தது.

நான் சென்ற மருத்துவமனையில் மாதம் ஓரிருவர் இப்படி மிக்ஸி ஜாரில் அடிபட்டு வருகின்றனர் என்கிற தகவல் கிடைத்தது. அக்கம்பக்கம் நட்பு வட்டத்தில் நலம் விசாரித்த சிலர் அவர்களின் உறவு முறையில், நட்பு வட்டத்தில் உள்ளவர்களில் சிலர் இப்படியான நிகழ்வைக் கடந்து வந்ததாகத் தெரிவித்தனர். இது தவிர சரியான கால இடைவெளியில் மாற்றாத கேஸ்கட், குக்கரை வெடிக்கச் செய்த சம்பவங்களும் அக்கம்பக்கத்தில் நடந்துகொண்டே இருக்கின்றன.

காய் நறுக்கும்போது விரல்களில் சிறிய அளவாவது ரத்தக் காயத்தைப் பெண்களின் விரல்கள் அவ்வப்போது சந்திக்கின்றன. அந்த நேரத்தில் துணியைச் சின்னதாகக் கிழித்து ஈரமாக்கிக் காயமான விரலைச் சுற்றி இறுக்கிக் கட்டியபடி தொடர்ந்து சமைத்த பாட்டியும் அம்மாவும் நினைவுக்கு வருகின்றனர். எல்லாக் காலத்திலும் சமையலறைகள் அதிக கவனத்தைக் கோருபவையாகவே இருக்கின்றன.

கவனச் சிதறலைத் தவிர்ப்போம்

ஒரே ஒரு கணம் நிகழும் கவனச் சிதறல் ஓரிரு மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிடுகிறது. நம் சௌகர்யத்திற்காக விலை கொடுத்து வாங்கியுள்ள நவீன சாதனங்கள், அடுப்பு உள்பட எல்லாவற்றிலும் முழு கவனம் தேவை. இன்னமும் நம் வீடுகளில் சூடான பாத்திரங்கள் தரும் பரிசுக் கோடுகளை நம் பெண்கள் மாதமொரு முறையாவது கைகளில் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

வீட்டில் அதிக கவனமாக இருக்க வேண்டிய இடம் அடுப்படி. வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தைச் சமையலறையில் கழிப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறோம். இதற்குப் பதிலாக அது என சாவதானமாக இருக்காமல் குக்கரோ, கேஸ் அடுப்போ அல்லது வேறு சாதனங்களோ சின்ன பழுதென்றாலும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சமையலறையில் வேலை செய்யும்போது, மனதை ஒருங்கிணைத்து முழுக் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும் என்பதைத்தான் என் விரல்களின் காயம் உணர்த்தியது. வேலைப் பகிர்வு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குச் சமையலறையில் கவனமும் அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in