

தன்னை யாராவது சாந்தி என்று அழைத்தால், ‘மீனவர் சாந்தின்னு சொல்லுங்க’ என்று பெருமிதத்தோடு திருத்துகிறார் மீனவர் சாந்தி. தொழில்சார்ந்த பெரும்பாலான விளிச்சொற்களுக்குப் பெண் பால் சாத்தியமில்லை அல்லது தேவையில்லை என்று பலர் நம்புவதைப் போலவே மீனவர் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், மீனவர் என்பது பெண்களையும் உள்ளடக்கியது என்று சொல்லும் மீனவர் சாந்தி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான இவரை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நாகூரான் தோட்டத்தில் சந்தித்தோம். நம்மோடு பேசியபடியே சாலையைக் கடந்து காசிமேடு அண்ணாநகரில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார். அப்போது எதிர்ப்பட்ட பெண்கள் எல்லாம் ஏதோவொரு கோரிக்கையோடும் கேள்வியோடும் சாந்தியை அணுக, அனைவருக்கும் பதில் இருந்தது அவரிடம்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப் போடு இணைந்து 100 மீனவப் பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கியதைப் பற்றிச் சொன்னவர், சுனாமியால் வீடிழந்த மீனவர்களுக்குக் குடியிருப்பு வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திக் கடலில் இறங்கிப் போராடியதை நினைவுகூர்ந்தார். கரோனா காலமும் தன் மக்களுக்குக் கொடுந்துயராக அமைந்தது என்று சொல்லும் சாந்தி, ஊரடங்கு நாள்களில் மீன் பிடிக்கச் செல்லவும் முடியாமல் கையில் பணமும் இல்லாமல் தவித்ததை வேதனையோடு குறிப்பிடுகிறார். “அப்போல்லாம் கருவாடுதான் கை கொடுத்துச்சு. அதுவும் எத்தனை நாளைக்குத் தாங்கும்? யார்யார்கிட்டயோ கையேந்தி எங்க மக்களுக்குக் கூடுமானவரைக்கும் நிவாரண உதவியை வழங்கினோம்” என்கிறார்.
பார்வையை விசாலமாக்கிய சேவை
சாந்தி சிறுமியாக இருந்தபோதே ராணுவத்தில் பணிபுரிந்த அவருடைய தந்தை இறந்துவிட, அதன் பிறகு கடலூர் மஞ்சகுப்பம் மூலவளி கிராமத்தில் தன் பாட்டி வீட்டில் வளர்ந்தார். புதுச்சேரி சவேரியார் கான்வெண்ட்டில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தவர், பிறகு சென்னை விவேகானந்தா பள்ளிக்கு மாறினார். நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவருக்கு 18 வயதில் திருமணம். அடுத்தடுத்து நான்கு மகன்கள். கணவன் என்கிற கதாபாத்திரம் குறைந்தபட்ச பொருளாதாரத் தேவைக்குக்கூட உதவாது என்று உணர்ந்துகொண்ட பிறகு ஓடத் தொடங்கியவரின் கால்களுக்கு இன்று வரை ஓய்வில்லை. மூன்றாம் மகன் இதயப் பிரச்சினையால் இறந்துவிட இருக்கிற பிள்ளைகளை ஆளாக்க வேண்டிய பொறுப்பை ஏற்றார். வயிற்றுப்பாட்டுக்காகச் சேர்ந்த வேலை பிறரது வாழ்க்கைப்பாட்டை மாற்றி யமைப்பதற்கான அடித்தளம் என்பதை அப்போது சாந்தி உணர்ந்திருக்கவில்லை.
தெருவோரக் குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் 1999இல் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு அறிவொளி இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராகச் சில காலம் பணியாற்றினார். மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கத்தில் இணைந்தது இவரது பார்வையை விசாலமாக்கியது.
தொடர்ச்சியான ஓட்டத்தால் களைத்தபோதும் தன் கனவுகள் சிதையாமல் பார்த்துக்கொண்டார். “அஞ்சல்வழியில் எம்.ஏ., வரலாறு படித்து முடித்தேன்” என்று சொல்கிறபோது சாந்தியின் கண்களில் வெற்றியின் பெருமிதம். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கிய மருத்துவர் சுனிதி சாலமனின் அமைப்பில் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அந்த அமைப்பின் பகுதித் தலைவர் பொறுப்பில் இருந்தவர், சமூக சேவகரும் மருத்துவருமான மனோரமாவின் ‘செஸ்’ அறக்கட்டளையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறருக்காக உழைத்ததில் கிடைத்த நிறைவு அவரை மீனவச் சங்கத்தை நோக்கி நகர்த்தியது. அகில இந்திய மீனவச் சங்கத்தில் இணைந்தார். பிற மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டதில் அரசியல் தெளிவு கிடைத்தது. மீனவப் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம், சட்ட உரிமைகள் குறித்துத் தன் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார். மீன் பிடித்தல் தவிர மீன் சார்ந்த மற்ற எல்லாப் பணிகளிலும் பெண்களே பெருவாரியாக ஈடுபடுகிறார்கள். குறிப்பாக மீன் விற்பது, அரிந்து தருவது போன்ற பணிகளில் பெண்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் கால்கள் உப்புநீரில் ஊறி பாளம் பாளமாக வெடித்துவிடும். கைகளும் வெட்டுக் காயங்களோடு தோலுரிந்து காணப்படும். அத்தகைய பெண்களுக்குத் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களது பணிகளுள் ஒன்று. மீனவப் பெண்களிடையே பசுமைக் குழு, சரஸ்வதி குழு, சுய உதவிக் குழு போன்றவற்றைக் கட்டமைத்ததிலும் சாந்தியின் பங்கு உண்டு.
பெண்களுக்கான தொழிற்சங்கம்
மீனவர் சங்கம் என்கிறபோது அதில் பெண்களின் இருப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதை உணர்ந்தவர் பெண்களுக்கென்று தனிச் சங்கம் அமைய வேண்டியதன் அவசியத்தைப் பெண்களுக்கு உணர்த்தினார். அதைத் தொடர்ந்து உருவானதுதான் ‘இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கம்’. ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி போன்ற இடங்களில் நடைபெற்ற மீனவர் உரிமை தொடர்பான கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் சாந்தியின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக அமைந்தது. ‘அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு’டன் இணைந்து பணியாற்றியதில் தொழிலாளர் உரிமைகள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு சாந்திக்குக் கிடைத்தது. எதையும் அரசியல்பூர்வமாக அணுகக் கற்றுக்கொண்டார். “மழைக்கால நிவாரணத்தை மீனவப் பெண்கள் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. அதேபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ஆண்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். மீன்பிடித்தல் இல்லையென்றால் பெண்களுக்கும்தானே வருவாய் இழப்பு? அந்தத் தொகையைப் பெண்களுக்கும் நல வாரியம் வழங்க வேண்டும்” என்று சொல்லும் சாந்தி, “மீன் பிடிக்கச் சென்று கடலில் உயிரிழக்கும் நபரின் உடல் கிடைக்காதபட்சத்தில் இழப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்குள் அவருடைய மனைவிக்கு உயிர்போய்விடும். ஏழு ஆண்டுகள் கழித்த பிறகே இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கை தொடங்குகிறது. அதுவரை அந்தப் பெண் மறுமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும். இதுபோன்ற சிக்கலான நடைமுறைகளை எளிமைப்படுத்தினால்தான் அந்த இழப்பீடு பயனுள்ளதாக அமையும். பெரும்பாலான உயிரிழப்புகளில் நிவாரணம் பெறக்கூடக் குடும்பத்தில் ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடுகிறது” என்றார்.
மீனவர்களுக்கான தனித் தொகுதி அவசியம் தேவை என்று குறிப்பிடும் சாந்தி, அப்போதுதான் சட்டமன்றத்தில் தங்கள் உரிமைகளுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் என்கிறார். மீனவர்கள் பலர் குடித்து அழிவதால் ஏராளமான பெண்கள் தனிப்பெண்களாகக் கையறுநிலையில் இருப்பதாக வருத்தப்படும் அவர், அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை அரசு செய்துதர வேண்டும் என்கிறார். “வாழ்க்கை முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்றவற்றால் மீனவப் பெண்கள் பலரிடம் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றி அவர்களைப் பொதுச்சமூகத்தில் ஒருவராக உணரவைக்க வேண்டியதும் அரசின் கடமைதானே?” எனக் கேட்கிறார் மீனவர் சாந்தி. மீன் விற்கும் பெண் ஒருவரை குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தில் இருந்து இறங்கச் சொன்ன நடத்துநரின் குரல் காதுகளில் மோதித் திரும்புகிறது.