

பெண் குழந்தைகள் கடவுள் தந்த வரம். தலை வாரி, பூச்சூட்டி வளர்க்கும் தாய், மகளின் ஒவ்வொரு பருவத்தையும் கண்டு வியப்பார், ரசிப்பார்.
பெண் குழந்தைகள் பருவ வயதை அடையும் முன்பே பூப்பெய்வதற்கு முக்கியக் காரணம் இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என்ற மருத்துவர்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது யாருக்கோ நடக்கின்ற ஒன்றாக எளிதில் கடந்துவிட்டேன். ஆனால் அந்த நாள் எனக்கும் வரும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.
என் மூத்த மகளின் நெருங்கியத் தோழி ஆறாம் வகுப்பில் பூப்பெய்தி விட்டாள் என்று கேள்விப்பட்டேன். நானும் என் மகளும் சிறிதும் ஆயத்தம் ஆகாத ஒன்று இது. நேற்றுவரை சிறுமியாகப் பார்த்த என் மகளுக்கு இணையான வயதுடையவள் வளர்ச்சியை எட்டிவிடும்போது, என் மகளுக்காக நானும் தயாராக வேண்டும் அல்லவா! அன்று தோழியின் பூப் புனித விழாவுக்குச் சென்று வந்தபின், என் மகள் கேட்ட தொடர் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாமல் தவித்துதான் போனேன். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அவளுக்குப் புரிய வைக்க நான் நிறையப் படிக்க வேண்டியிருந்தது. குடும்ப மருத்துவரிடம் ஆலோசனையும் பெற்றேன்.
அடுத்த மூன்று மாதங்களில் மகள் வகுப்பில் ஒவ்வொரு பெண்ணாகப் பருவம் அடையத் தொடங்க, தங்கள் தோழிகளைப் பார்த்து நிறையப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். பள்ளியில் கேட்டு வரும் அரைகுறை விஷயங்களை என்னுடன் பகிரும்போது, அவளுக்குப் பூப்படைதல் பற்றிய சந்தேகங்களை நீக்கவும், நல்ல புரிதலை ஏற்படுத்தவும் செய்தேன். மனதளவில் என் மகள் நல்ல தெளிவு பெற்றுவிட்டதால், இனி புரிதலுடன் கையாளுவாள் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது .
ஒரு பரபரப்பான நாளில் என் மகளின் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகள் பூப்பெய்தி விட்டாள். அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தாய்மை உணர்வு என்னை ஆட்கொண்டது. என் மகள் பயந்து அழுவதாக ஆசிரியர் சொன்னதும், அத்தனை நாள் நான் வழங்கிய அறிவுரைகள் பயனின்றிப் போய்விட்டனவோ என்று அதிர்ச்சியடைந்தேன். இத்தனை ஆயத்தம் செய்த பின்னும் ஏன் அந்த அழுகை என்ற குழப்பத்தில் அவள் வகுப்புக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்ததும் ஓடி வந்தாள். அவளைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, ரொம்ப சந்தோஷம் என்றேன். “இதுக்கு எதுக்காக அழறே? பல் விழும்போது நீ வளர்கிறதாகச் சொன்னே இல்லையா? அதே மாதிரிதான் இதுவும். உன் பிறந்தநாள் போல இதுவும் மகிழ்ச்சியான நாள்” என்று அணைத்துக்கொண்டு சொன்னதும், அவள் அழுகை மறைந்து விட்டது. புது நம்பிக்கையுடன் என்னுடன் புறப்பட்டாள். இதைப் பார்த்த ஆசிரியர், “இத்தனை எளிமையாக, உங்க பொண்ணுக்குப் புரிய வச்சுட்டீங்க! பல பெற்றோர் இதை ஒரு பயம் நிறைந்த சடங்காகவே பார்ப்பது வேதனை” என்றார். என் மகளுக்குச் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.
- க.அ.பத்மஜா, சிவகாசி