குடும்பச் சட்டம்: கியூபா காட்டும் பாதை

குடும்பச் சட்டம்: கியூபா காட்டும் பாதை
Updated on
2 min read

கியூபப் புரட்சியாளர் சேகுவேராவின் மகள், மருத்துவர் அலெய்டா குவேரா ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தார். அமெரிக்காவில் இருந்து 144 கி.மீ தொலைவில் கரீபியன் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு கியூபா. அதன் மக்கள் தொகை 1 கோடியே பத்து லட்சம் மட்டுமே. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் எட்டில் ஒரு பங்கு. கடந்த 60 ஆண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. 2022ஆம் ஆண்டில் கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளைத் தவிர, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரித்து வாக்களித்தன. என்றாலும் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. தன்னுடைய இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சமாளித்து, சோஷலிசத் தன்மையோடு தற்சார்புடன் இருப்பதற்காக கியூபா நட த்திவரும் போராட்டம் பற்றிப் பேசினார் அலெய்டா.

இன்னொரு முக்கிய விஷயமாக கியூபாவில் பெண்கள் அடைந்துவரும் முன்னேற்றம் பற்றியும் அவர் பேசினார். பாலினச் சமத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கியூபா மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பற்றி அவர் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் ஜனவரி 6-9 வரை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு கியூபப் பெண்கள் முன்னேற்றம் குறித்து உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில், “ஆப்பிரிக்க மக்கள், ஸ்பானிஷ், சிறிதளவு பூர்வகுடிகள் - சீனம் ஆகிய கலாச்சாரங்களின் கலவையாக எங்களுடைய கரீபியக் கலாச்சாரம் உள்ளது. ஒவ்வொரு கலாச்சாரமும் ஆணாதிக்கச் சிந்தனையைப் புகுத்தியதால் பல நூற்றாண்டுகளாக எங்கள் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கியூபப் புரட்சி, அடுத்ததாக ஒரு பெண்கள் புரட்சிக்கு வித்திட்டது. 1960இல் உருவாக்கப்பட்ட கியூபப் பெண்கள் கூட்டமைப்பு, பெண்களை வேலைவாய்ப்பிற்குள் கொண்டுவந்து, அவர்களை மேலாளர் நிலைக்கு உயர்த்து வதைத் தனது முக்கியமான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது அன்றாடப் பொருளாதார சமூகக் கண்ணோட்டத்தில், பெண்களை மேலும் சுதந்திரமானவர்களாக வாழ வழிவகுக்கிறது” எனக் குறிப்பிட்டார். கியூபாவில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சியை ஒரு சில புள்ளிவிவரங்கள் மூலம் விளக்கினார்.

l கியூபாவில் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்யும் மொத்த மக்கள் தொகையில் பெண்களின் சதவீதம் 39. மொத்த தொழிலாளர்களில் பெண் மேலாளர்கள் எண்ணிக்கை 38.6 சதவீதம். தொழில்நுட்ப வியலாளர்களில் 66.6 சதவீதத்தினரும், நிர்வாகப் பணிகளில் 69 சதவீதத்தினரும், சேவைத் துறையில் பணியாற்றுபவர்களில் 45.4 சதவீதத்தினரும், தொழிற்சாலைச் தொழிலாளர்களில் 16.7 சதவீதத்தினரும் பெண்களாக இருக்கிறார்கள்.

l கியூபாவில் மருத்துவமும் கல்வியும் அனைவருக்கும் இலவசம். பொது மருத்துவம் மற்றும் சமூக உதவித் திட்டங்களின் பயனாளிகளில் 70.95 சதவீதத்தினர் பெண்கள். பெண்கள் பங்கேற்பு கல்வியில் 68.9 சதவீதமாகவும், அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 49.3 சதவீதமாகவும், பண்பாடு மற்றும் விளையாட்டில் 43.6 சதவீதமாகவும் உள்ளது. கியூப விவசாய அமைப்பின் அறிவியல் திறன் கட்டமைப்பில் பெண்களின் பங்கேற்பு 42 சதவீதம்.

l கியூபாவின் நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகள் எண்ணிக்கை 52 சதவீதம், மாகாண சபைகளில் 53 சதவீதம்.

“ரோஜா இதழால்கூட ஒரு சிறுவன் சிறுமியை அடிக்கக் கூடாது என்கிற கியூபப் புரட்சியின் தூதரான ஹோஸே மார்த்தியின் வார்த்தைகளை நாங்கள் குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்கிறோம்” எனக் குறிப்பிட்டார் அலெய்டா குவேரா.

சமீபத்தில் கியூபாவில் பொது வாக்கெடுப்பு நடத்தி ஒரு புதிய குடும்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது பற்றித் தனது உரையில் குறிப்பிட்டார். மக்கள்தொகையில் 67 சதவீதப் பெரும்பான்மையினர் வாக்களித்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். உலகின் மிக முற்போக்கான குடும்பச் சட்டம் இது என மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குடும்பச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. வீட்டு வேலை கணவன் - மனைவி இருவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். விவாகரத்தானால் யார் யாருக்கு என்னென்ன உரிமை உள்ளது எனத் திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வழிகாட்டுகிறது. ஆணும் பெண்ணும் செய்துகொள்வது மட்டுமே திருமணம் அல்ல. வயதுவந்த இருவர் யார் வேண்டுமானாலும் மனமொத்துத் திருமணம் முடித்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறது. இதனால், ஒரே பாலினத்துக்குள் திருமணம் செய்துகொள்வதற்குச் சட்ட அங்கீகாரம் வழங்குகிறது. குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் உள்ளடக்கிய குடும்பச் சட்டமாக இருக்கிறது.

பொது வாக்கெடுப்புக்கு முன்னதாக இந்தச் சட்ட வரைவை முன்வைத்து 79,000க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் கூட்டங்களை கியூப அரசாங்கம் நாடு முழுவதும் நடத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கியூபாவின் மக்கள்தொகையில் 60 சதவீதத்தினர் கலந்துகொண்டிருக்கிறார்கள். கியூப மக்கள் முன்வைத்த ஆலோசனைகள், திருத்தங்களைச் சட்டவரைவில் உள்ளடக்கி, இறுதிச் சட்டவரைவுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்தி, இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது கியூபா. ஜனநாயக பூர்வமாக மக்களுடன் உரையாடல் நடத்தி, குடும்ப அமைப்புகளில் ஜனநாயகத்தை உறுதிசெய்ய கியூபா எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது, பின்பற்ற வேண்டியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in