

வரகுணம் கிராமத்திலிருந்து எல்லாரும் குல தெய்வம் வனப்பேச்சியைக் கும்பிடுவதற்காக அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். இணைபிரியாமல் இருக்கும் அக்காவான அன்னம்மாளும் தங்கச்சியான சின்னம்மாளும் அவர்களோடு புறப்பட்டார்கள். குலதெய்வக் கோயிலுக்குப் போய் வருவதற்கு அருள்தர வேண்டும் என்பதற்காக ஊர் மந்தையில் இருக்கும் தெய்வத்தை ஊர்மக்கள் கும்பிட்டிக்கொண்டிருந்தனர். அப்போது வண்டியைக்கூடப் பூட்டியிருக்கவில்லை. அதற்குள் அக்காவும் தங்கையும் வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டனர்.
அக்கா அன்னம்மா தங்கச்சியிடம், “செலாத்தலா உக்கார்ந்துக்கோ. இப்ப வாரவ எல்லாவளும் பூசணிக்காத் தண்டியில இருக்கா. நம்மளை ஒடுக்கி ஒரு மூலையில தள்ளீருவா” என்று சொல்ல, அக்கா சொல்லை மீறாத தங்கச்சியும் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு, “எக்கா வெத்தலை போடுவோமா?” என்றாள். “போடுவோம்” என்றவள், “உனக்கு எத்தனை தடவை சொல்லுறது காணப்பயத்தை பதமா வறுக்காத கொஞ்சம் தீயும்படியா வறுன்னு” என்றாள் கொஞ்சம் கோபமாக. “என்னக்கா எதுவும் தப்பு தண்டா செஞ்சிட்டனா? பொறுத்துக்கோக்கா பொறுத்துக்கோ” என்று கெஞ்சினாள் தங்கை. “அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப நம்ம வச்சிருக்க காணப்பயத்து துவையல் பொது பொதுன்னு வண்டிக்குள்ளேயே சுத்தி சுத்தி மணக்கு. எவளும் எனக்கு இம்புட்டுத் துவைய கொடுன்னா என்ன செய்ய?” என்றாள்.
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஊர்ப்பெண்கள் வந்துவிட்டார்கள். இவர்களைப் பார்த்த உடனே அவர்களுக்கு எரிச்சலான எரிச்சல். இவர்களை யாருக்கும் பிடிக்காது. யாரோடும் இவர்களும் ஒண்ட மாட்டார்கள். ஊருக்குள் ஏதாவது சடங்கு, கல்யாணம் என்றால் போதும். முதல் ஆளாகக் காலைப் பரத்திக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். வண்டியில் ஏறிய சீனியம்மாளுக்கு இவர்களைப் பார்க்கவும் பொறுக்க முடியவில்லை. “வந்தீட்டீகளா முத ஆளா. எதுக்கு இப்படி விரிச்சிப்போட்டு உக்கார்ந்திருக்கீக. அப்படியே படுத்திரக் கூடாது, விடியுந்தண்டியும் உறங்கிக்கிட்டு வருவீகள்ல” என்றவள், “தள்ளுங்க. எல்லாரும் உக்காரணும். வாங்கடி” என்று கூப்பிட்டாள். எல்லாரும் உட்கார இடமில்லாமல் இடஞ்சல்பட்டுக் கிடந்தார்கள்.
ஆறேழு வண்டிகள் புறப்பட்டன. கிழக்கின் வெளுப்புக்கு வண்டி கோயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு கரையில் பனைமரங்கள் வரிசையாக வளர்ந்திருக்க, அவற்றின் அடியில் பனம்பழங்கள் கருத்துத் திரண்டு குமிகுமியாய் விழுந்து கிடந்தன. அவ்வளவு கூட்டத்திலும் அன்னம்மா ரகசியமாகத் தங்கச்சியிடம், “ஏத்தா இங்க பனம்பழம் அப்படி காய்ச்சி கீழே குமிகுமியா விழுந்து கிடக்கு. நம்ம எறங்கி ஒரு மூடப் பழத்தை பெறக்கிட்டுக் கோயிலுக்குப் போவோம். அப்ப அவுக கிடாக்களை வெட்டி சோறு பொங்கி சாப்பிட உக்காருவாக. நம்ம அப்ப முத ஆளா அவுககூடச் சாப்பிட்டு அவுக அரிசி கொண்டாந்த சாக்கை வாங்கி ஒரு மூடப் பழத்தைப் பெறக்கி வண்டிக்கடியில கட்டிவிட்டுட்டமின்னா ஊருக்குள்ள போயி வித்துக்கலாமில்ல. கோடி துட்டு கிடைக்கும். எறங்குவமா” என்று சொல்லவும், சின்னம்மா, “சரிக்கா. நீ சொல்லது நல்ல ரோசன” என்றவள், “வண்டிய நிறுத்துங்க. நாங்க எறங்கப்போறோம். உக்கார முடியல” என்றாள். வண்டி நிற்க இருவரும் இறங்கினார்கள். மலைக்காற்றும் அருவியின் ஓட்டமும் அவர்களை நடுநடுங்கச் செய்தன. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் ஓடி ஓடி பனம்பழத்தைப் பெறக்கினார்கள். பழம் பெறக்கும் ஆவலில் அக்காவும் தங்கையும் எப்படியோ தப்பிப்போனார்கள். காடுகள் அடர்ந்த வனத்தினுள் அக்கா, தங்கையைத் தேட, தங்கையோ அக்கா, அக்காவெனக் கத்திக் கூப்பாடு போட்டாள். அவள் அக்காவின் அணைவிலேயே வாழ்ந்தவள். சுற்றிலும் மலை அருவி விழுவதுபோல் மாயங்காட்ட அக்காவைத் தேடி வந்த சின்னம்மா வேர்தட்டிக் கீழே விழுந்து செத்துப்போனாள். இப்போது குருவியாக மாறி, ‘அக்கா, அக்கா’ என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள்.
(தொடரும்)