

‘உடலை வலுப்படுத்துவது உடற்பயிற்சி. மனத்தை வலுப்படுத்துவது வாசிப்பு’ என்று என் சிறு வயதில் என் அப்பா கூறியது என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அன்று நாளிதழ்களில் ஒரு வரி விடாமல் வாசிக்கும் பழக்கம், பாடநூல்களைத் தாண்டி அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் பயணித்தது. என் பாட்டி, அம்மாவைக் கவர்ந்த லக் ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் ஆளுமைகள் என் மனத்தையும் வசப்படுத்தியதில் தொடர்ந்தது என் வாசிப்புப் பழக்கம்.
பள்ளிப் பருவத்திலேயே கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ரமணிச்சந்திரன், ஜெயகாந்தன், மு.வ., தமிழ்வாணன் என்று பரந்து விரிந்து வாசிப்பை நான் வசப்படுத்தினேன். என் பாட்டியும் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு வீட்டில் புத்தகங்களை வாசிப்பார்கள். பொட்டலம் கட்டி வரும் சிறு தாளைக்கூட நாங்கள் வாசிக்காமல் கீழே போட்டதில்லை.
அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்புவரை படித்த என் பாட்டி, நாங்கள் ரயில்வே நூலகத்தில் எடுத்து வரும் வார, மாத இதழ்கள், சிறுகதைகள், நாவல்கள் போன்ற அனைத்து வகை நூல்களையும் படிப்பார். இன்று நினைத்துப் பார்த்தால் எனக்கு வியப்பாக உள்ளது. அவர் கண் பார்வை மங்கியபோது என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். அதனால் நான் வாசித்த மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ தொடங்கி எல்லா நூல்களும் அனைத்து எழுத்தாளர்களும் என் உணர்வில் கலந்து என்னைச் செதுக்கியதால்தான் இன்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக, சமூகச் சிந்தனையுடன் என்னால் இருக்க முடிகிறது.
ஆசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றாலும், ஓய்வின்றி மாணவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறேன். வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துகிறேன். இன்று வாசிப்பு பல தளங்களில் பரந்து விரிந்துகொண்டி ருக்கையில் இளையோரை வழிநடத்துவது நம் கடமை. வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழுமையாக்கும், ஆளுமைத் திறனை உருவாக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. வாசிப்புத் திறனால்தான் இன்று பல படைப்பாளர்கள் உருவாகி சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
60ஐக் கடந்து இனிமையாக என் வாழ்வு பயணிப்பதற்கு முக்கியக் காரணம் வாசிப்பு. புத்தகங்களை வாங்கி அடுக்கினால் மட்டும் போதாது. வாசித்து மகிழ வேண்டும். வாசியுங்கள். உங்களிடம் மாற்றம் உண்டாகும்.
- மணிமேகலை, ஓசூர்.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். கஸ்தூரி மையம், |