

உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏன் உருவாகிறது? பல சூழ்நிலைகளில் பெற்றோரிடம் கேட்டுத் தீர்மானிக்க நேரமில்லை; சில விவரங்களைப் பெற்றோரிடம் சொல்ல முடியாத காரணத்தால் நீங்களேதான் முடிவெடுக்க வேண்டிய நிலை.
தோழிகளிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால், அவர்களுக்கும் அனுபவம் போதாது. தோழிகளிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாத அந்தரங்கமாக இருக்கலாம். இப்படி யாரிடமும் எதுவும் கேட்காமல் நீங்களாகவே செய்கிற உங்கள் செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.
இப்பருவத்தில் சரி, தவறு எனும் மதிப்பீடு சம வயதினருடன்தான் ஒத்துப்போகும், பெற்றோரோடு அல்ல. இவர்களது உலகத்தில் சரி, தவறு என்பது அவரவரது கண்ணோட்டத்தைப் பொருத்தது. புதிதாகக் கிடைத்த சுதந்திரம், எண்ணியதைச் செய்யக் கிடைத்த உரிமம், பின் ஏது தடை? காட்டாறு போன்ற வேகத்தில் செல்லும்போது உணர்வுகளின் ஆதிக்கம் வழிநடத்த, விபத்துகளும் காயங்களும் ஏற்படலாம். சி
ல பாதிப்புகள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடலாம்! கசப்பான அனுபவங்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அவற்றிலிருந்து கற்ற பாடங்களைப் பதிய வைத்துக்கொள்ளும் பெண் தேறிவருவாள்.
ஒரு பெண், ஒருவனது காதலுக்கு ‘ஊம்’ சொல்லாவிட்டாலும் அவளுக்கு ஆபத்து. இந்தப் புதுப் போக்கின் தொடக்கம் நம்மைக் கலங்கவைக்கிறது. இளம் பருவத்திலிருந்து பெண்ணைத் தொடர்கிறது பாலியல் தொல்லை என்னும் கொடுமை. பல பள்ளிகளும் குழந்தைகளை இந்த முறைகேட்டிலிருந்து பாதுகாக்க, ஆரோக்கியமான தொடுதல் எது, அல்லாத தொடுதல் எது என்று சொல்லிக்கொடுப்பதையும் அதையும் மீறி அத்துமீறல் நிகழ்ந்தால் ஆசிரியரிடமோ தாயிடமோ உடனே தெரிவிக்க வேண்டும் என்பதையும் கற்பிக்கின்றன. பயமின்றித் தாயிடம் இதைச் சொல்லக்கூடிய சூழலை தாய் உருவாக்கித் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
இணைந்து போராட வேண்டும்: பதின்ம வயதினரோ முதிரிளம் பருவத்தினரோ (யங் அடல்ட்ஸ்) பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டால், பயந்து அமைதியாக இருக்கக் கூடாது. அதற்காகத் தன்னை வீராங்கனையாக உருவகித்துச் சட்டத்தைத் தன் கையில் எடுக்கவும் கூடாது. நிகழ்வு நடந்த சூழ்நிலையைப் பொறுத்து, தவறு செய்தவனைக் கண்டிப்பது, தற்காப்புக் கலைமூலம் தன்னைக் காப்பது (பள்ளிகளிலேயே இதைக் கட்டாயப் பயிற்சியாக்க வேண்டும்), பெண்களுக்கான அமைப்பை அணுகுவது, காவல்துறையின் உதவியை நாடுவது, உயர் அதிகாரியிடம் முறையிடுவது என இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து, உடனடியாக அந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உயர் அதிகாரியே தொல்லை கொடுத்தால், பெண் அதிர்ந்துபோய், பயத்தில் செயலிழந்திருந்தால், அவன் ஊக்குவிக்கப்பட்டு மேலும் தொடர்வான். தனது எதிர்ப்பை முதல் முறையே ஒரு கோபப் பார்வையாலோ வேறு உடல்மொழியாலோ பதிவுசெய்துவிட வேண்டும். அந்தச் செயல் அவனைச் சீண்டும். அதனால், கோபப்பட்டுத் தன் அதிகாரத்தின் உதவியுடன் உங்களுக்கு வேறுவிதமான தொந்தரவுகளைக் கொடுப்பான். தொல்லை நிறுத்தப்பட வேண்டும். ஆனால், தனித்துப் போராட முடியாது. பாதிக்கப்பட்ட சிலர் இணைந்து போராடலாம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் பலி ஆடாகவும் இருக்கக் கூடாது.
‘மீ டூ’ என்கிற உலக அளவில் தோன்றிய சமூக இயக்கம் இப்போது பலியான பெண்களுக்குத் தைரியம் கொடுத்து, ஊடகங்களில் மனம் திறந்து பேச வாய்ப்பளித்திருக்கிறது. இந்தக் கூட்டு இயக்கம் மேலும் வலுவடையும். தவறான முறையில் பெண்ணை அணுக, ஆண்கள் தயங்கும் காலம் வெகுதூரமில்லை. பெண்ணின் மதிப்பு அவளுக்குத் தெரியவேண்டும். யாரும் அவளைக் கால்மிதியாக நடத்தவிடக் கூடாது.
(மனம் திறப்போம்)
பிருந்தா ஜெயராமன் கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர், ashabrinda@gmail.com