

1958 இல் நான் நான்காம் வகுப்பில் இருந்தேன். ஒருநாள் என் மாமா ஒரு ரூபாய் (அன்று ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்) கொடுத்து, கால் பவுண்டு காபித்தூளும் (பதினொன்றரை அணா) ஒரு குமுதம் வார இதழும் (நான்கு அணா) வாங்கி வரச் சொன்னார். மீதம் இருந்த அரை அணாவுக்கு எனக்கு ஒரு வாழைப்பழம் கிடைத்தது. வீடு வந்து சேரும்வரை குமுதம் இதழின் பக்கங்களை வியப்போடு பார்த்துக்கொண்டே வந்தேன்.
வாரா வாரம் வாழைப்பழமும் குமுதமும் கிடைத்தன. குமுதம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் ஆனந்த விகடன் கிடைத்ததால் துப்பறியும் சாம்புவும் பரிச்சயமானார். அதன்பின் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கிராமத்துக்குச் சென்றுவிட்டேன். வார, மாத இதழ்கள் எட்டாக் கனிகளாயின. வாசிப்பதற்கு ஏதேனும் கிடைக்காதா என்கிற ஏக்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.
1962இல் எங்கள் பக்கத்து கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தேன். அப்பள்ளியின் நூலகப் பொறுப்பு உடற்பயிற்சி ஆசிரியருக்குத் தரப்பட்டது. புத்தம் புதிய நூல்கள் வந்து இறங்கின. அவற்றுக்கு எண்களை ஒட்டுதல், விவரங்களைப் பதிவேடுகளில் எழுதுதல், அவற்றை அலமாரிகளில் வகைப்படுத்தி அடுக்குதல் ஆகிய வேலைகளை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்தோம்.
இதற்குப் பிரதியுபகாரமாக நாங்கள் கேட்கும் கதைப் புத்தகங்களை மறுக்காமல் அவர் தருவார். இதனால் பள்ளியில் நூலகம் செயல்பாட்டுக்கு வரும் முன்னரே நாங்கள் நால்வரும் மு.வ.வின் கடித நூல்கள் - நாவல்கள், கல்கியின் சிவகாமியின் சபதம், அலை ஓசை, தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் எனப் பலவற்றைப் படித்து முடித்தோம்.
நான் பத்தாம் வகுப்புப் படித்தபோது எங்கள் அறிவியல் ஆசிரியர் ஜேன் ஆஸ்டின் எழுதிய ‘Pride and Prejudice’ என்கிற நாவலின் கதையைச் சொன்னார். அன்று முதல் என் மனம் ஆங்கில நாவல்களை வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலைப் பெற்றது. ஆனால், வாய்ப்புதான் கிடைக்கவில்லை. அந்த ஆசை 1967இல்தான் கைகூடியது. கல்லூரியில் சேர்ந்தபோது விரிய திறந்த கதவுகள் ஒரு மாபெரும் புத்தகச் சுரங்கத்துக்கே அழைத்துச் சென்றன.
பின்னர் நான் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். மாணவர்களுக்குப் புதிய அறிவியல் செய்திகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக அறிவியல் தொடர்பான நூல்களை வாசித்தேன். சுஜாதாவின் அறிவியல் புதினங்கள் என் வாசிப்புப் பசிக்குத் தீனியாக அமைந்தன. முதுகலையில் ஆங்கில இலக்கியம் படித்ததால் நிறைய ஆங்கில நூல்களை வாசிக்க முடிந்தது. நான் படித்த நூலாசிரியர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் என் சிந்தனை மற்றும் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
70 வயதைக் கடந்த நிலையிலும் எதையாவது வாசிக்க வேண்டும் என்கிற தாகம் மட்டும் தணியவில்லை. வாசிப்பின் மீதான என் நேசம் என் ஜீன்கள் வரை ஊடுருவி இருக்குமோ என்று எண்ணும்படி என் மகன், மகள், பேத்தி, பேரன்கள் என அனைவரும் கதைப் பித்து பிடித்தவர்களாக உள்ளனர்.
ஆங்கில எழுத்தாளரும் தத்துவவியலாளருமான ஜான் ரஸ்கின் தனது ‘Sesame and Lilies’ நூலில், ‘எண்ணற்ற சிந்தனையாளர்கள் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்துகொள்ள நம்மை எதிர்பார்த்து காலம் காலமாக நூலக அலமாரிகளில் பொறுமையோடு கத்துக்கொண்டே இருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். அவர்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமா?
- ஜி.ராஜாமணி, உடுமலைப்பேட்டை.