

எழுத்தாளர் என்கிற சொல் இரு பாலருக்குமானது என்கிற தெளிவை ஏற்படுத்தவே நமக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. அந்தத் தெளிவை ஏற்படுத்தியும்கூட ‘எழுத்தாளன்’ என்று வலிந்து சொல்லிக்கொள்வோர், பெண்களைப் படைப்பாளிகளாகக் கருதுவதே இல்லை.
தான் செயல்படும் படைப்புத் துறையில் தனக்கெனத் தனித்த அடையாளப் பெயரைப் பெறுவதிலேயே பெண்ணுக்கு இவ்வளவு சிக்கல் என்றால் பெண்களது படைப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்துச் சொல்லவே தேவையில்லை. இதில், ‘பெண்’ என்பதே ஒரு எழுத்தாளருக்குப் போதுமானது என்பது போன்ற பொன்னில் பொறிக்க வேண்டிய வாக்குகளையும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இதுபோன்ற விமர்சனங்களின் தொனி மாறினாலும் படைப்பூக்கத்துடன் செயல்படும் பெண்கள் இவற்றைக் காலங்காலமாகக் கடந்துவந்தபடி இருக்கிறார்கள். பற்றியெரியும் காட்டுத்தீக்கு வேலி போடுவதைப் போலத்தான் இந்த விமர்சனங்கள். அந்த வேலிகள் பொசுக்கப்பட வேண்டியவை என்பது பெண்களுக்குத் தெரியும். அதன் வெளிப்பாடுதான் சென்னை புத்தகக் காட்சியில் காணக் கிடைக்கும் பெண்களின் படைப்புகளும் பெண்களை மையப்படுத்திய படைப்புகளும். சில படைப்புகள் செம்பதிப்பாகவும் மறு பதிப்பாகவும் வெளிவந்துள்ளன.
பெண்களின் உலகம் பெரும்பாலான ஆண்கள் நினைப்பதைப் போலக் காதல் கவிதைகளாலும் குடும்பக் கதைகளாலும் நிறைந்தது அல்ல. ஆண்கள் எழுதத் துணியாத அரசியலைப் பேசுபவை அவை; ஆணாதிக்கமும் சாதிய மனோபாவமும் பெண்கள் மீது நிகழ்த்துகிற கொடூரங்களைக் காட்சிப்படுத்துபவை; வரலாற்றின் பக்கங்களில் இடம் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட போராளிகளுக்குப் புத்துயிர் ஊட்டுபவை; கட்டமைக்கப்பட்டதைப் போலவும் கற்பனையில் புனையப்பட்டதைப் போலவும் அல்லாமல் பெண்களின் அசலான வாழ்க்கையைக் கண் முன் நிறுத்துபவை அவை.
இந்தப் புத்தகக் காட்சிக்கு முழுத் தொகுப்புடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் தமயந்தி. பள்ளி நாட்களிலேயே எழுதத் தொடங்கியவரின் மொத்த சிறுகதைகளும் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன (தமயந்தி சிறுகதைகள், ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ்). பெண் என்னும் கடலில் கால் நனைக்காமல் பெண்ணுலகம் குறித்துக் கதை கதையாகப் பேசு வோருக்குப் பெண்களின் பாடுகளைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல் கின்றன இவரது சிறுகதைகள்.
காதல், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்கிற வட்டத்தை மீறிச் செயல்பட்ட, சிந்தித்த பெண்களின் குரலாக ஒலிக்கிறது பௌத்த பிக்குணிகளின் பாடல் தொகுதியான ‘தேரி காதை’. பாலி மொழியில் எழுதப்பட்டவற்றை ரைஸ் டேவிட்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, அதைத் தமிழில் தந்திருக்கிறார் அ. மங்கை (தேரிகாதை, பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள், எதிர் வெளியீடு). சாதியக் கட்டமைப்புக்கு எதிராக பௌத்தத்தைக் கொள்கிறவர்கள், ஏன் பெண்ணியக் கருத்தாக்கத்தின் தொடக்கப் புள்ளியாக அதைக் கொள்வதில்லை என்கிற கேள்வியை மங்கை முன்வைக்கிறார்.
கேட்கும் திறனுடையோர் அனைவரும் பாடல்களைக் கேட்கலாம் என்றாலும் ரசிக்கத் தெரிந்த காதுகளுக்கே அவை தேன்விருந்தாக அமையும். கவிதையும் அப்படித்தான் என்கிறார் பெருந்தேவி. கவிதைகளின் கட்டமைப்பையும் இலக்கணத்தையும் புரிந்துகொண்டு வாசிக்கிறபோது நம்மால் கவிதைக்குள் புகுந்து வெளிவந்துவிட முடியும். அதற்கு உதவுகிறது பெருந்தேவியின் நூல் (கவிதை பொருள்கொள்ளும் கலை, எழுத்து பிரசுரம்).
பெண்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படும் சமூகத்தில் பால்புதுமையினரின் வாழ்க்கை இருளுக்கும் ஒளிக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் குறித்த அசூயை இன்னும் ஒழியவில்லை. பால்புதுமையரை மையப்படுத்தி ஆஸ்திரேலிய நாவலாசிரியர் சூசன் ஹார்தோர்ன் எழுதிய ‘Dark Matters’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சசிகலா பாபு (சொல்லக்கூடாத உறவுகள், காலச்சுவடு). தன்பாலினர்கள் தங்களின் பாலியல் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை விவரிக்கிறது இந்நூல்.
உடலரசியல் என்பது இருமுனையும் கூரான கத்தியைப் போன்றது. அது எந்த நேரத்திலும் பெண்ணையே பலிவாங்கக் கூடும். கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்ணை மீண்டும் போகப் பண்டமாக்கிச் சதை மூலதனச் சந்தையின் வேட்டை இலக்காக்கும் முதலாளித்துவ அரசியலை கேள்விக்குட் படுத்துகிறார் மாலதி மைத்ரி. (மர்லின் மன்றோக்கள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). இந்நூலில் இடம்பெற்றுள்ள பெண்ணியக் கட்டுரைகள் உடலரசியல், ஆண் மொழியரசியல், ஆண்குறி மையவாதம், ஆண் மையச் சிந்தனையின் இலக்கிய - வரலாற்றுப் போக்குகளைக் கட்டுடைக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் சாதித்த ‘முதல் பெண்கள்’ மூலம் கவனம் ஈர்த்த நிவேதிதா லூயிஸ், மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களைத் தொகுத்தி ருக்கிறார் (கலகப் புத்தகம், கிழக்கு பதிப்பகம்). பெண் என்பதால் மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், பிரபல ஆண்களின் நிழலில் அடையாளம் மறுக்கப்பட்டவர்கள், மத நம்பிக்கைக்காக, பாலினம் பற்றிய தவறான புரிதலால் கொல்லப்பட்ட, தற்கொலை செய்யத் தூண்டப்பட்ட ஆண்கள் எனப் பலரும் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியப் பெருங்கண்டத்தின் பிற மாநிலங்களின் கண்களுக்கு அவ்வளவாகப் புலப்படாத வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் இருந்து தங்கள் மக்களின் கதைகளைப் பதிவுசெய்தவர் டெம்சுலா ஆவ். நாகர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தங்கள் மக்களின் பண்பாடு, தொன்மம், நம்பிக்கைகள்,குறியீடுகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதிய எட்டுக் கதைகளைத் தமிழில் தந்திருக்கிறார் எம்.ஏ.சுசீலா (என் தலைக்கு மேல் சரக்கொன்றை, நற்றிணை பதிப்பகம்).
புராணப் பாத்திரங்களை மீள் உருவாக்கம் செய்யும்போது பொருந்தாத கருத்துகளைச் சொன்னால் காலத்தில் எடுபடாது என்று சொல்லும் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், இம்முறை ஒரு நாகினியின் கதையைச் சொல்கிறார் (மானசா, பாரதி புத்தகாலயம்). தங்கையாக, மனைவியாக, தாயாக எல்லா நிலையிலும் தன் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவிட்டு, அதற்குப் பின்னர் தனக்கும் தனியான தேடல்கள் உண்டு என்றும், அதை நோக்கிப் பயணிப்பது தன் உரிமை என்றும் பிறருக்கு உணர்த்துகிறாள் மானசா.
20ஆம் நூற்றாண்டின் பெண்ணிய எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் கேட் சோபின், நவீன பெண்ணிய இலக்கிய இயக்கத்தை அறிமுகப்படுத்தியவர். அமெரிக்க எழுத்தாளரான இவரது படைப்புகளில் பாலினச் சமத்துவமும் பெண் விடுதலைக்கான வேட்கையும் சுடர்விடும். இவரது சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கமலி பன்னீர்செல்வம் (கேட் சோபின் சிறுகதைகள், ஆதிரை பதிப்பகம்).
ஆண்களால் எழுதப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெண்களுக்கு இடம் இருந்ததில்லை. இப்படி மறைக்கப்பட்ட பெண் போராளிகளின் வரலாற்றை நம் தலைமுறையினர் அறிய தந்திருக்கிறார் உமா மோகன் (விடுதலைக் களத்தில் வீர மகளிர், பாரதி புத்தகாலயம்). தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்தம்மாள், கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள் போன்ற பல தமிழகப் போராளிகள் மட்டுமின்றி குஜராத்தின் பத்மாவதி ஆஷர், உஷா மேத்தா, வங்கத்தின் கமலாதாஸ் குப்தா, அசாமின் கனகலதா பரூவா, கிரண் பாலா போரா, கன்னடத்தின் யசோதரம்மா தாசப்பா என்று தேசத்தின் பல நிலப்பரப்புகளின் வீர மகளிரை அறிமுகம் செய்கிறது இந்நூல்.