

இல்லற வாழ்வில் ஒருவருக் கொருவர் அன்பாகவும் அனு சரணையாகவும் இருந்து, மேடு பள்ளங்களை எளிதில் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும்போது, கணவனை இழந்தால் எந்தப் பெண்ணும் நிலைகுலைந்துதான் போவார். ஆனாலும் தொடர்ந்து வாழ்க்கை என்ற படகைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்ட சுலோச்சனா, தன் தன்னம்பிக்கையால் இன்னல்களைக் கடந்து, தலைநிமிர்ந்திருக்கிறார். சிதம்பரம் கீழவீதியில் அவர் நடத்திவரும் சுஜாதா தேநீர்க் கடையில், தேநீரை ஆற்றியபடியே பேச ஆரம்பித்தார் சுலோச்சனா.
“என் கணவர் நடத்தி வந்த பெட்டிக்கடை இது. திடீரென்று அவர் நோயில் விழுந்தார். கணவர், குழந்தைகள், வியாபாரம் என்று எல்லாவற்றையும் நானே தனி ஆளாக நின்று கவனித்துக்கொள்ள வேண்டிய கடுமையான சூழல் வந்தது. கணவர் குணமாகிவிடுவார் என்ற தைரியத்தில் எல்லாவற்றையும் சமாளித்தேன். ஒருநாள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். எத்தனை நாள் இப்படி உட்கார்ந்திருக்க முடியும்? குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்? என்று பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
இன்னொரு பக்கம் கடன்காரர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, வியாபாரத்தைக் கவனிக்க முடிவெடுத்தேன். பெட்டிக்கடையுடன் தேநீர்க் கடையையும் வைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று திட்டமிட்டேன். அனுபவத்தின் மூலமே வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டேன்” என்றபடி மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் சுலோச்சனா.
அதிகாலை 4 மணிக்குக் கடைக்கு வந்துவிடுகிறார். டீ மாஸ்டர் இல்லையென்றால் தானே அந்த வேலையையும் சேர்த்துக் கவனித்துக்கொள்கிறார். மதியம் உணவு இடைவேளையில் சிறிது ஓய்வு கிடைக்கும். வியாபாரம் முடித்து வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணி ஆகிவிடும். நாள் முழுவதும் வேலை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் குடும்பம் நடத்துவதற்குப் போதுமான வருமானமும் இந்தத் தொழிலில் கிடைக்கிறது என்கிறார் சுலோச்சனா.
“கணவரை இழந்த பெண்கள் மன ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் மிகவும் மன உளைச்சல் அடைகிறார்கள். பெண்கள் கல்வியுடன் ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரை அண்டியிருக்காமல், நாமே நம் வாழ்க்கையை நடத்த முடியும். என் நிலைமையைப் புரிந்துகொண்ட மகளும் மகனும் பொறுப்புடன் இருக்கிறார்கள். மகன் சென்னையில் வேலை செய்கிறான். மகள் இன்ஜினீயரிங் படிக்கிறாள். என் கணவர் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் நிறைவேற்றிவருகிறேன் என்பதை நினைக்கும் போது நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படுது” என்கிறார் கடின உழைப்பாளர் சுலோச்சனா.