

பெண்கள் எழுதுவதும் பெண்களைப் பற்றி எழுதுவதும் இலக்கிய உலகின் மிக அரிதான செயலாகவே இப்போதும் இருக்கின்றது. விதிவிலக்குகளைத் தவிர, பெண்ணுடலை எழுதுகிற ஆணின் கரங்கள் பெண்ணுரிமையை எழுதத் தயங்குகின்றன. அதனால்தான் பெண்களே தங்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் குரல்கூட ஆணாதிக்க முழக்கத்தில் நசுக்கப்பட்டுவிடுகிறது. அதையும் தாண்டி ஒலிக்கிற குரல்கள் மட்டுமே வாசகர்களைச் சென்றடைய முடிகிறது. அப்படிப் பெண்கள் சார்ந்து எழுதப்பட்டுக் கவனம் ஈர்த்த படைப்புகளில் சில இவை:
தங்கள் ஆதிக்க ஒழுக்க நியதிகளுக்குக் கட்டுப்படாதவர்களைக் கொல்வது நம் சமூகத்துக்குப் புதிதல்ல. தாங்கள் கொல்லும் பெண்களையே தெய்வமாக்கிக் குற்றவுணர்விலிருந்து தப்பித்துக் கொள்ளும் வித்தையைக் கற்றவர்களும் நம் மக்கள்தாம். கொல்லப்பட்டுத் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதைகளை வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் நாட்டார் கதைகளின்வழி சமகால நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பதிவுசெய்கிறது இந்நூல்.
தெய்வமே சாட்சி
l ச.தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.160
உடல்நலத்தில் ஆணுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெண்களும் தங்கள் நலனை இரண்டாம்பட்சமாகவே கருதுகிறார்கள். இந்தச் சூழலில் மார்பகப் புற்றுநோயி லிருந்து தான் மீண்டுவந்த கதையைச் சொல்வதன்மூலம் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை சாலை செல்வம் உணர்த்துகிறார்.
புற்றிலிருந்து உயிர்த்தல்
l சாலை செல்வம்
கறுப்பு பிரதிகள்
விலை: ரூ.120
தன் சுயசரிதை மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார், பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா. அவரது வாழ்க்கையில் மேலும் சில அத்தியாயங்களை இந்நூல் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் அவர் எடுத்துக்காட்டுகிறார். ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்ட மாக விவாதிக்கும் தார்மீக அறிக்கை யாகவும் இந்நூல் விளங்குகிறது.
எனது ஆண்கள்
l நளினி ஜமீலா
தமிழில்:
பா. விமலா
காலச்சுவடு
விலை: ரூ.190
இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ரொமிலா தாப்பருக்குத் தனித்த இடம் உண்டு. வரலாறுகள் திரிக்கப்பட்டுப் புனைவுகள் வலுப்பெறும் இந்நாளில், பண்டைய இந்தியாவின் வரலாற்றைத் தன் ஆய்வுநூல்கள்வழி அழுத்தமாகப் பதிவுசெய்து வருபவர் இவர். வரலாற்று ஆய்வு நூல்களை அதுசார்ந்த புலமை கொண்டவர்கள் மட்டுமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில், எளிய வருக்கும் வரலாற்றைக் கொண்டு சேர்க்கும்விதமாக ரொமிலா தாப்பர் குறித்தும் அவரது வரலாற்றாய்வு நூல்கள் குறித்தும் எழுதப்பட்ட நூல் இது.
ரொமிலா தாப்பர்
ஓர் அறிமுகம்
l மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
கண்ணகி என்றாலே கற்புக்கரசி என்று நிறுவப்பட்ட சமூகத்தில் அப்படி இருக்க முடியாதவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்குகிறாள் இந்த கண்ணகி. சித்தேரிக்குப்பம் ஊர்த்தெருவை விட்டு ஒதுங்கி இருக்கும் காலனியில் மாட்டுக்கறியைக் கூறுபோட்டு விற்கும் காசாம்புவின் மகள்வழிப் பேத்தியாக கண்ணகி பிறக்கிறாள். மீன் அரிந்து தர நாலு பெண்களை வேலைக்கு வைத்தி
ருக்கும் கண்ணகியின் வாழ்க்கைச் சிடுக்குகளைப் பேசுகிறது இந்நூல்.
கண்ணகி (மறுபதிப்பு)
l சு. தமிழ்ச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.230
தஞ்சையை ஆண்ட கடைசி அரசப் பரம்பரையான மராட்டியர்களின் வீழ்ச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாறும் புனைவும் கலந்து எழுதப்பட்டது இந்நூல். வரலாற்றின் ஓரத்தில்கூட இடம்கிடைக்கப்பெறாத நிலையில் இருந்த அடிமைப்பெண் ஒருவரது வாழ்வைச் சொல்லும் அதேநேரம் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் குறித்தும் இந்நூல் கவனப்படுத்துகிறது.
ஆனந்தவல்லி
l லஷ்மி பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.230
நாவலுக்கு நிகரான உழைப்பையும் திறமையையும் கோருபவை சிறுகதைகள். நாவலை நீட்டிக்க வாய்ப்புண்டு. சிறுகதைக்கோ சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய சட்டகம் உண்டு. அதைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் சந்திரா. பெண்களை மையப்படுத்திய கதைகள் என்றாலே காத தூரம் ஓடுவோரையும் கணக்கில்வைத்து எழுதப்பட்ட கதைகள், தாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறை வேற்றத் தவறவில்லை.
சோளம் (சிறுகதைகள்)
l சந்திரா தங்கராஜ்
எதிர் வெளியீடு
விலை: ரூ.399
இருபத்தைந்து வயதில் அழகியநாயகி அம்மாள் மணிகட்டிப் பொட்டல் ஊருக்கு வாழ்க்கைப்பட்டுச் செல்கிறார். இந்தத் தன் சொந்தக் கதையை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். இதில் பயன்படுத்தப்பட்ட நாட்டார் சொற்களும் நம்பிக்கை களும் இந்த நாவலைச் சிறப்புக்கு உரியவையாக மாற்றுகின்றன. அந்த விதத்தில் இதைத் தமிழ் நாட்டார் இயலுக்கான கொடை எனலாம்.
கவலை (மறுபதிப்பு)
lஅழகிய நாயகி அம்மாள்
அடையாளம் பதிப்பகம்
விலை ரூ.440
மலையாள எழுத்தாளரான கே.ஆர். மீராவின் படைப்புகளுக்கு இந்திய இலக்கிய உலகில் முக்கிய இடம் உண்டு. பெண்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதியை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம் என்பதைத்தான் மீராவின் படைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பார்வையாளர்களுக்கும் அந்த வன்முறையில் பங்குண்டு என்பதை உணர்த்தி, நம்மைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகின்றன. நாம் கைக்கொள்ள வேண்டிய செயல்திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும் வல்லமை பெற்றவையாகவும் அவை விளங்குகின்றன.
அந்த மரத்தையும் மறந்தேன்
மறந்தேன் நான்
l கே.ஆர். மீரா /
தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம்
விலை: ரூ.140
கபர்
l கே.ஆர்.மீரா
தமிழில்:மோ. செந்தில்குமார்
எதிர் வெளியீடு
விலை: ரூ.150
பெண்களுக்கென்று இங்கே இருக்கும் சுதந்திரம் எல்லாம் கையளிக்கப்பட்டவை யாகவே இருக்கின்றன. ஆணுக்கு இயல்பில் கிடைக்கிறவை, பெண்ணுக்குத் தரப்பட்டவையாக இருப்பதன் அரசியலை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது இந்நூல். கட்டுரைகள் அனைத்தும் எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. அதுவே வாசிப்பைத் துரிதப் படுத்திச் சிந்தனைக்கு வேலை வைக்கிறது. பெண்களைப் புரிந்துகொள்வதில் பெண் களுக்கே இருக்கிற தடைகளைக் களையும் வழியையும் இந்நூல் விவரிக்கிறது.
துப்பட்டா போடுங்க தோழி
l கீதா இளங்கோவன்
ஹெர் ஸ்டோரீஸ்
விலை: ரூ. 160