

இந்தக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் படிக்கிறார்கள். படித்து முடிக்கும் பெண்கள் எல்லாருக்கும் தகுந்த வேலை கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே இன்றைய நிலைமையும்கூட. இந்தந்த வேலைகள் மட்டுமே பெண்களுக்கானவை என்கிற பாகுபாடு இப்போதும் பணியிடங்களில் இருக்கிறது. இந்தச் சூழலில் ‘அவதார் ஸ்டடி’ என்கிற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்திய நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களும், லக்னோ, ராஞ்சி, கவுகாத்தி ஆகிய நகரங்கள் கடைசி மூன்று இடங்களையும் பிடித்திருக்கின்றன. அதே போல பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும் நகரங்களாக திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தெற்கு, வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாகவும், வடக்கு, மத்திய, கிழக்கு நகரங்களில் வாய்ப்பு குறைவாகவும் வழங்கப்படுவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் இணைந்த கைகள்
கடந்த டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கண்டித்து ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து பெண்கள் மீது அதிகரிக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் போராடிவருகின்றனர். இச்சூழலில் மாணவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் இணைந்தனர். ‘பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு ஆதரவாகவே நிற்க விரும்புகிறோம்’ என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் மாணவர்களும் போரட்டக் களத்தில் குரல் கொடுத்தது பலரது கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.
சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி
இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சியாச்சின் பனிமலை. நாட்டின் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான இப்பகுதியில் ராணுவ அதிகாரியாக சிவா சௌஹான் என்கிற பெண் அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார். பனிபடர்ந்த சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவப் படையால் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி இவர்தான். 11 வயதில் தந்தையை இழந்த சிவா சௌஹான் தாயின் ஆதரவில் படிப்பை முடித்து ராணுவப் படையில் சேர்ந்தவர். இந்திய ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் தீவிர பயிற்சி பெற்றவர். ஆபத்து மிகுந்த சியாச்சின் பனிமலைப் பகுதியிலும் சிறப்பாகச் செயல்படுவார் என உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.