கிராமத்து அத்தியாயம் - 7: குளம் பெருக வேண்டும்

கிராமத்து அத்தியாயம் - 7: குளம் பெருக வேண்டும்
Updated on
2 min read

நரிக்குடியில் மழை பெய்யாமல் பூமி வறண்டு, நிலம் காய்ந்து கனப்பரந்து கிடந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு ரொம்ப நாளாக ராமேசுவரத்தைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சரி இப்பத்தேன் மழை இல்லை, நம்ம போயி ராமேசுவரத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுவோமென்று ஊரோடு கட்டுச் சோறு கட்டிக்கொண்டு பச்சைப்புள்ளைகள் தவிர்த்து ஊரே கிளம்பிவிட்டது. ஒவ்வொருவர் தலையிலும் பெரிய பெரிய புளியோதரை கட்டுச்சோறு இருக்க அதனுள் புளி சேர்த்து அரைத்த கடுகுத் துவையல் செரட்டை நிறைய மணத்தது.

வண்டிமாடு கட்டிக்கொண்டு போனால் நடை மிச்சமாகும், சீக்கிரத்தில் வந்துவிடலாம் என்று மாட்டு வண்டியைக் கட்டி அதில் ஏறிக்கொண்டு போனார்கள். வழக்கம்போல் காட்டுக்காகத் தினமும் நடந்த காளைகள் இப்போது பாதை மாறியதால் திகைத்து நின்றன. ராமேசுவரம் போகுமுன்னே இருட்டிவிட்டது. இவர்கள் புளியோதரையைத் தின்றுவிட்டு மாடுகளுக்கு வண்டிகளுக்கு அடியிலிருந்த கூளத்தைப்போட்டுவிட்டுப் படுத்தார்கள். அப்போது அங்கம்மா ‘அடியே நெலா பாலா அடிக்கு. குமரிகள்லாம் பாட்டு பாடுங்க. உறக்கம் நல்லா வரும். வந்த அலுப்பும் தீந்துபோகு’மின்னு சொல்ல சித்தராங்கிதான் முதலில் பாடினாள்.

‘காணாக் கரிசலில களையெடுக்கும் பெண்மயிலே

நீல கருங்குயிலே நானு நிக்கட்டுமா, போகட்டுமா?’

பெண்: நிக்கச்சொன்னா நெட்டூரம், போகச்சொன்னா பொல்லாப்பு

வீட்டுக்கு வாங்க சாப்பிடுங்க, வெத்தல தாரேன் போட்டுக்கோங்க

ஆண்: செரட்டையில நாத்துப்பாவி, சென்னைப் பட்டணம் சீட்டு எழுதி

பேட்டையில காணமின்னு மயிலே, பேதலிக்கே என் மனசு.

பெண்: சந்தனக் கும்பாவில சாதம் போட்டு உங்கையில

உங்கள நினைக்கையில உங்கிறது சாதமில்ல

இந்தக் குமரிப் பெண்கள் பாடிக்கொண்டி ருக்க எல்லாரும் உறங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் எழுந்து வண்டிகளில் புறப்பட்டுவிட்டார்கள். இளவட்டங்கள் மாட்டு வண்டியை முந்திக்கொண்டு நடந்தார்கள். ராமேசுவரம் போய் சேர்ந்ததுதான் தாமதம். அரசாண்டி சுற்றிலும் ஆள் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் காட்டுக் கத்தலாய் கத்தினார்.

நம்ம ஊர்ல மழ இல்ல இல்லன்னு தவிச்சிக்கிட்டு கெடக்கோம்; அந்த மழ மொத்தம் இங்கவில்ல பேஞ்சு குளம் பெருகி அலையில்ல அடிச்சிக்கிட்டுக் கிடக்கு என்றதும் எல்லாரும் பார்த்தார்கள். பார்த்த இடமெல்லாம் தண்ணி. அட்டா, இங்கிட்டு இப்படிப் பேஞ்ச மழ நம்ம பக்கம் இருக்க காடுகளயெல்லாம் வெறுவோடி வெம்பரப்பா போட்டுருச்சே. அப்படி என்னப்பா நம்ம மழைக்கு துரோகம் செஞ்சோம்? வருசா வருசம் சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கலயா? ஆடு, மாடுகளத்தேன் கவனிக்கலயா? இந்த மழைக்கு இம்புட்டு நம்பிக்க துரோகம் ஆகாது. அதோட இன்னொன்னு இப்படிக் கண்ணுக்கு எட்டும் மட்டும் கம்மா கரை தெரியாம நம்ம ஊர் எப்பவாவது குளம் பெருவி இருக்கா? இந்த மழைக்கு நம்ம அப்படி என்ன பாவம் செஞ்சோம்? முத எல்லாரும் நம்ம கொண்டு வந்த சோற சாப்பிடுங்க. ஒரு சொட்டுகூட மிச்சமில்லாம தண்ணிய மோந்து வண்டியில ஏத்துங்க. கொண்டு வந்த துட்டுக்குச் சருவம், குடம் வாங்கலாமின்னக்கூட வாங்கி தண்ணிய மோந்துகொண்டு போயி ஊத்துவோம் என்றார். அப்போது பித்தளைக் குடங்களும், சருவமும்தான் இருந்தன. இத்தனையும் மோந்து வண்டியில ஏத்துங்க. நாங்க இந்தக் கம்மாக்கர எங்கிட்டு இருக்கின்னு கண்டுபிடிச்சிட்டு வந்திருதோம் என்று ஊர் பெரியவர்களிலிருந்து இளவட்டங்கள்வரை கடலில் பாய, கூட வந்த அத்தனை பெண்களும் அப்படியே திகைத்து, பதைத்து நின்றார்கள்.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in