

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற சிந்தனை தற்போது அதிகரித்துவருகிறது. மளிகை கடைகளிலும் துணிக் கடைகளிலும் ‘இன்னும் ஒரு கவர் கொடுங்க’ என்ற குரல்கள் குறைந்துவருகின்றன. தொலைதூரப் பார்வையுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று கிடையாதா என்று எழுந்த சிந்தனை, ஜெஸியைத் தொழில்முனைவோராக மாற்றியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜெஸி, டெல்லியில் வளர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்தவருக்கு, காய்கறிகள் முதல் துணிகள்வரை எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் கிடைப்பது கவலையைத் தந்தது. இந்த நிலையை மாற்றத் தன்னால் முடிந்ததைச் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தில் சணல் பொருட்கள் உற்பத்தி குறித்த தகவல்களைச் சேகரித்தார். கொஞ்சம் விலை உயர்ந்ததாகச் சணல் பொருட்கள் பார்க்கப்படுவதால்தான் அவற்றின் பயன்பாடு குறைந்திருக்கிறது என்பதை அறிந்தார்.
அதனால் அவரே சணல் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினார். இன்று சென்னையில் உள்ள சணல் பொருள் உற்பத்தியாளர்களில் குறிப்பிடத்தக்கவராக ஜெஸி மாறியிருக்கிறார். தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் மும்முரமாக இருந்தவர், இடைவேளை எடுத்துக்கொண்டு நம்மிடம் பேசினார்.
“சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் எனக்கு அதிகம். சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். மறுசுழற்சிக்கு உட்படுத்தும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவேன். வட இந்தியாவில் புடவை முதல் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களும் சணலில் கிடைக்கும். பொருட்களை வாங்குவதற்குத் துணிப்பைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.
அதனால் பிளாஸ்டிக் பைகளை வாங்கிப் பழகியவர்களிடம் இயற்கையாகக் கிடைக்கும் சணலை வைத்துச் செய்யப்படும் பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருந்தது. அப்போது, “சணல் பை கிடைத்தால் வாங்க மாட்டோமா?” என்று பலரும் சொன்னார்கள். அதனால் என் நண்பர்களுடன் ஆலோசித்து, சணல் பைகள் தயாரிப்பில் இறங்கினேன்” என்று சொன்னார் ஜெஸி. விற்பனையை அதிகரிக்கவும் அதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் கடின உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.
உறுதியான லேப்டாப் பைகள், ஃபைல்கள், ஃபோல்டர்கள், கைப்பைகள் உட்பட அனைத்து வகை பைகளையும் தயாரித்துவருகிறார் ஜெஸி. சென்னையில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கும் திருமணங்களுக்கும் ஏற்ற பரிசுப் பொருட்களையும் விற்பனை செய்துவரும் ஜெஸி, சந்தைப்படுத்து வதில் பல சவால்களைச் சந்தித்தார்.
“சணல் பொருட்களின் விலை பிளாஸ்டிக்கைவிட அதிகம், துணிப்பையைவிடக் குறைவு. இப்படித்தான் வாடிக்கையாளரிடம் பேச்சைத் தொடங்குவேன். சணல் பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலின் சூடு அதிகரிக்கும்னு பலரும் நினைக்கிறாங்க. அந்த நினைப்பை மாற்றி, அவற்றின் தயாரிப்பில் உள்ள தனித்தன்மைகள் குறித்துப் புரிய வைப்பதும் சவாலானது. ஒருமுறை பெரிய ஆர்டர் கிடைத்தது. ஆனால் அதை சீக்கிரமா முடிச்சு தரச் சொன்னாங்க. அவங்க கேட்ட நேரத்துக்குள்ள செய்து முடிக்க முடியுமான்னு சந்தேகமா இருந்தது. கரண்ட் பிரச்சினை, ஊழியர் தட்டுப்பாடுன்னு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியலை.
சௌகார்பேட்டையில் சிலர் சணல் பை செய்வாங்கன்னு கேள்விப்பட்டேன். உடனே அங்கே சணலைக் கொடுத்து, பைகளைச் செய்து தரச் சொன்னேன். இரவு முழுக்க தூங்காம வேலை பார்த்து, குறித்த நேரத்துக்குள்ள ஆர்டரை முடிச்சோம். ஒரு தொழிலில் கொடுத்த வார்த்தையைக் காப்பாத்துறது ரொம்ப முக்கியம்” என்று சொல்லும் ஜெஸி, போட்டிகளைச் சமாளித்து, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறவர்களால் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துவருகிறார்.