Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

தற்காத்துக் கொள்வதே பெண்மை

கிராமம், நகரம் என்ற எந்த வித்தியாசமும் இன்றி இந்தியா முழுவதுமே பெண்கள் மீதான வன்முறையும் அவற்றைத் தொடரும் கொலைகளும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. பெண்களை இன்னும் ஒரு போகப்பொருளாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. இதற்கான தீர்வு பெண்களிடம் இருந்தேதான் வர வேண்டும்.

பெண்கள் என்றாலே அச்சமும் நாணமும் அத்தியாவசியம் என்று விளக்கவுரை கொடுத்தே பழகிவிட்டோம். கொடுமைகளைப் பொறுத்துப்போதல், சிறுமைகளைக் கண்டு ஒதுங்குதல் இவையே பெண்களின் குணநலன் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அவர்கள் மீது திணித்துவருகிறோம்.

சில மணி நேரம் பயணிக்கும் பேருந்தோ, வாழ்க்கை முழுக்கப் பயணிக்கும் இல்லமோ எங்கேயும் எப்போதும் பெண்களைப் பல கண்கள் மொய்த்துக்கொண்டே இருக்கின்றன. உடலால் துன்புறுத்துவது மட்டுமல்ல, மனதால் அவளைக் காயப்படுத்துவதும் வன்முறையன்றி வேறென்ன. பெண்கள் தங்களை மென்மையானவர்கள் என்று நிரூபிப்பதைவிட, தங்களைக் காத்துக்கொள்ளும் ஆளுமைத்திறன் நிறைந்தவர்களாக விளங்க வேண்டும். சோர்ந்து போவதல்ல பெண்மை, எதற்கும் சோர்ந்துபோகாமல் விவேகத்துடன் செயல்படுவதுதான் பெண்மை.

யார் புதுமைப்பெண்?

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி, பெண்கள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும். 1984-ம் ஆண்டு புக்கர் பரிசுக்கான பரிசீலனையில் நம் நாட்டைச் சேர்ந்த அனிதா தேசாய் இருந்தார். அவர் டெல்லியில் வசித்தபோது தன் மகள்களுடன் லோடி பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். ஜே.கேவும் அதே பூங்காவில்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அப்போது இருவரும் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒரு முறை அனிதா தேசாயின் மூத்த மகளிடம் ஜே.கே. பேசிக்கொண்டிருந்தார்.

அவருடைய கல்லூரி வாழ்க்கையைப் பற்றி கேட்டார். அதற்கு அந்தப் பெண், தான் கல்லூரிக்குச் சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞர்களைப் பற்றி சொன்னார். அதைக் கேட்ட ஜே.கே., "நீ அந்த இளைஞர்களை அடித்திருக்க வேண்டும். நான் மட்டும் அங்கே இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பேன்," என்று சொன்னார்.

இந்த அஞ்சாமையைத்தான் பெண்களுக்குக் கற்றுத்தர வேண்டும். வள்ளுவரின், ‘தற்காத்து’ என்னும் சொல்லுக்கு இந்த அஞ்சாமைதான் பொருள். தீமையை எதிர்கொள்ளும் திறன் கல்வி மூலம் கிடைக்காதபோது, வெறும் பட்டறிவால் என்ன பயன்? ‘நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு’ என்று பாரதியும் இதைத்தானே வலியுறுத்துகிறார்? அஞ்சாமை, அறம், அறச்சீற்றம் இவையெல்லாம் கல்வியுடன் போதிக்கப்பட்ட வேண்டும். வீட்டிலும் கற்றுத்தரப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் மீதான வன்முறையும் அடக்குமுறையும் குறையும்.

- முனைவர் இரா. சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x