Last Updated : 04 Jan, 2023 12:35 PM

 

Published : 04 Jan 2023 12:35 PM
Last Updated : 04 Jan 2023 12:35 PM

மூளை புற்றுநோயிலிருந்து மீண்டு மைதானத்தில் இறங்கிய விர்ஜினியா!

ஸ்பெயினைச் சேர்ந்த விர்ஜினியா டோரசில்லா, 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக ‘தி கார்டியன்’ நாளிதழால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!

யார் இந்த விர்ஜினியா?

மூளை புற்றுநோய்க்கான 13 மாதகால சிகிச்சையில் 30 முறை ரேடியோ தெரபியும் 15 முறை கீமோ தெரபியும் செய்துகொண்டவர். இனி கால்பந்து விளையாடவே முடியாது என்று மருத்துவர்கள் சொன்னாலும் தன் மன வலிமையால் 683 நாள்களுக்குப் பிறகு, மீண்டும் மைதானத்தில் இறங்கி விளையாடியவர்!

உலகமே கரோனா பெருந்தொற்றில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த 2020ஆம் ஆண்டு. நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று கழுத்து வலி வந்தது. சிறிது நேரத்தில் அது தலைவலியாக மாறியது. முதுகும் வலிக்க ஆரம்பித்தது. இரவில் உறங்க முடியவில்லை. உடனே மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதனை முடிவுகளில், மூளையில் ஒரு கட்டி இருப்பது உறுதியானது. விர்ஜினியா நிலைகுலைந்து போனார். அவரின் பெற்றோருக்கும் இது தாங்க இயலாத துயரம் என்றாலும் தங்கள் குழந்தைக்காக, தைரியத்தை வரவழைத்துக்கொள்வதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை.

பிழைப்பேனா? பிழைத்தாலும் இயல்பாக இருப்பேனா? இயல்பாக இருந்தாலும் விளையாட முடியுமா என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் விர்ஜினியாவை ஆக்கிரமித்தன. அவரின் தன்னம்பிக்கையைத் தகர்த்தெறிந்தன.

மகளை சிகிச்சைக்குத் தயார் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பெற்றோர் எடுத்தனர். ‘இயல்பான வாழ்க்கை, விளையாட்டு அனைத்தையும்விட உயிர்தான் முக்கியம். உயிரைக் காப்பாற்றிக்கொண்டால், பிறகு எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று எடுத்துச் சொன்னார்கள்.

மிகப் பெரிய சிகிச்சைக்குத் தயாரானார் விர்ஜினியா. ஒரு வாரத்தில், 10 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ரேடியோ தெரபியும் கீமோ தெரபியும் மேற்கொள்ளப்பட்டன. விர்ஜினியாவின் உடல் மெலிந்தது. தலைமுடி உதிர்ந்தது. இரண்டு கிலோ எடையைக்கூட அவரால் தூக்க இயலவில்லை. மனச்சோர்வு அடையும்போதெல்லாம், அம்மாவும் அப்பாவும் தன்னம்பிக்கை அளித்தார்கள். தனக்காக இல்லாவிட்டாலும் பெற்றோருக்காகத் தான் மீளவேண்டும் என்ற எண்ணம் வந்தது விர்ஜினியாவுக்கு.

சிறிது சிறிதாக உடல் தேறியது. பெற்றோரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். பிறகு கால்பந்து பயிற்சியை மேற்கொண்டார். சக வீராங்கனைகள் விர்ஜினியாவுக்கு உற்சாகம் அளித்தனர். தன் அணி விளையாடும்போது மைதானத்துக்குச் சென்று விளையாட்டைக் கவனித்தார்.

683 நாள்களுக்குப் பிறகு, 2021 ஜனவரியில் நடந்த ஒரு போட்டியில் விர்ஜினியா மிட்ஃபீல்டராக மீண்டும் களமிறங்கினார். மக்கள் அவரின் உறுதியைக் கண்டு நெகிழ்ந்தனர். அந்தப் போட்டியில் என்னவோ விர்ஜினியாவின் அணி தோல்வியைத்தான் சந்தித்தது. ஆனால், மக்களோ விர்ஜினியாவுக்குத் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்கள். சக வீராங்கனைகள் உற்சாகத்தில் விர்ஜினியாவைத் தூக்கி, பந்துபோல் மேலே வீசி, பிடித்தனர்!

‘இதோ இந்த நாளுக்காகத்தான் இத்தனை வலிகளையும் கடந்துவந்திருக்கிறேன். இது போதும்’ என்று ஆனந்தத்தில் கண்ணீர்விட்டார் விர்ஜினியா.


“66 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலந்துகொண்ட இந்தப் போட்டியில் நான் வேறு ஒரு விர்ஜினியாவாக உணர்ந்தேன். பல விஷயங்களில் நான் இப்போது இருப்பதுபோல் இதற்கு முன்பு இருந்ததில்லை” என்றார் விர்ஜினியா.

இந்த மகிழ்ச்சியும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. ஒரு கார் விபத்தில் விர்ஜினியாவின் அம்மா சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். இந்த விபத்து விர்ஜினியாவை மிகவும் பாதித்துவிட்டது. ‘என்னால் இன்னும் ஒரு அறுவை சிகிச்சையும் ரேடியோ, கீமோ தெரபிகளையும் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், என் அம்மாவை இப்படிப் பார்க்க முடியவில்லை’ என்றார்.

இப்போதும் அம்மாவும் அப்பாவும் விர்ஜினியாவுக்குச் சொன்னதையே மீண்டும் சொன்னார்கள், ‘உயிரோடு இருப்பதுதான் முக்கியம்.’

அம்மாவின் பாதிப்பிலிருந்தும் மீண்டு வந்த விர்ஜினியா, கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்திவருகிறார். வெளியில் செல்லும்போது பலரும் தன்னை ரோல்மாடலாக நினைத்து, தங்கள் திறன்பேசியில் முடியற்ற தன்னுடைய படத்தை வைத்திருப்பதைக் காட்டும்போது, விர்ஜினியாவுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்குகின்றன.

“வாழ்க்கையில் தவறுதலாக ஒரு சுரங்கத்துக்குள் விழுந்துவிட்டால், இருளிலே கிடக்க வேண்டும் என்று நினைப்போமா? தட்டுத்தடுமாறி நடந்து, சுரங்கத்தின் இன்னொரு பகுதியில் இருக்கும் வெளிச்சத்தை நோக்கிச் செல்வோம் அல்லவா? அதேபோலதான் புற்றுநோய் வந்தால், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை மட்டும் நினைத்தால் போதும். அந்த நேர்மறைச் சிந்தனை, உங்களை இன்னும் வேகமாகக் குணப்படுத்திவிடும். நம் கவலைகளையும் வலியையும் துரத்தியடிக்க தைரியம் ஒன்றே போதும். அதற்கு நானே உதாரணம். வாங்க, வாழ்க்கையின் விளையாட்டை விளையாடிப் பார்ப்போம்!’ என்கிறார் விர்ஜினியா டோரசில்லா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x