

வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் பெண்களுக்குக் கொடிய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாகச் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் 70,000 பெண்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் நேர்மறைச் சிந்தனையுடைய பெண்களுக்கு வயதான காலத்தில் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் பிரச்சினைகள், பக்கவாதம் போன்ற ஐந்து முக்கியமான நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவது குறைவாக இருக்கிறது. இதனால், எதிர்மறை சிந்தனையுடைய பெண்களைவிட இந்தப் பெண்களின் வாழ்நாட்கள் எட்டு ஆண்டுகள் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற அம்சங்களுக்கும் நீண்ட வாழ்நாளுக்கும் இருக்கும் தொடர்பை நிபுணர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அவை எல்லாவற்றையும்விட நேர்மறையான சிந்தனைக்கே வாழ்நாட்களை நீட்டிக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதை அவர்கள் உறுதிசெய்கின்றனர்.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான டாக்டர் எரிக் கிம், நேரடிமறையான சிந்தனை நம் உயரியியல் அமைப்புகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்கிறார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ‘டி.எச். ஷன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்’ மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
1976ம் ஆண்டு, அமெரிக்காவில் மகளிர் நலன் சார்ந்த தொற்றுநோய்கள் பற்றி நீண்டகால ஆய்வு மேற்கொள்ள Nurses’ Health Study (NHS) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த ஆய்வில் கலந்துகொண்டிருக்கும் பெண்கள் தங்கள் உடல்நலன் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். அப்படித்தான், தற்போதைய ஆய்வு 70,000 பெண்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது.
2004-ம் ஆண்டு நேர்மறைச் சிந்தனையின் பல்வேறு நிலைகளை மதிப்பீடு செய்வதற்காக இந்தப் பெண்களிடம் கொடுக்கப்பட்ட கேள்விகளின் தரவுகளிலிருந்தே தற்போதைய ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் 2004-ம் ஆண்டு கலந்துகொண்ட பெண்களின் சராசரி வயது 70.
இவர்கள் அனைவரும் தங்களுடைய நேர்மறைச் சிந்தனையை 0 - 24 வரையிலான அளவில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
58 வயதிலிருந்து 83 வயதுவரையுள்ள பெண்களின் உடல்நலம் எட்டு ஆண்டுகளுக்கு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது. நோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை தனியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எட்டு ஆண்டுகளில் 4,566 பேர் இறந்திருக்கின்றனர்.
அதிகமான நேர்மறை சிந்தனைகளுடன் இருந்தவர்களுக்கு நோய் காரணமாக இறக்கும் ஆபத்து குறைவாக இருந்திருக்கிறது. திருமணமான பெண்கள், பொருளாதாரப் பின்னணி, நீரிழிவுப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, மனஅழுத்தம் போன்ற மற்ற காரணிகளைத் தாண்டி இது நிரூபணமாகியிருக்கிறது.
நேர்மறை சிந்தனையை எப்படி வளர்த்துக்கொள்வது?
உங்களிடம் நேர்மறையான சிந்தனை இயல்பிலேயே இல்லாமல் இருந்தாலும் அதை வளர்த்துக்கொள்வது எளிதானதுதான் என்று சொல்கிறார் டாக்டர் எரிக் கிம். நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள அவர் சொல்லும் வழிமுறைகள்:
> வாழ்க்கையின் முக்கியமான பக்கங்களான குடும்பம், திருமணம், பணி வாழ்க்கை போன்றவற்றில் உங்களுடைய ‘ஆளுமையின் சிறந்த அம்சம்’ (Best Self) எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, பணி வாழ்க்கையில் கடினமாக உழைத்து உங்களுடைய லட்சியத்தை அடையும்படி கற்பனை செய்துபாருங்கள்.
> நீங்கள் நன்றி பாராட்டும் மூன்று விஷயங்களைத் தினமும் எழுதிவாருங்கள். ஒரு வாரத்துக்கு இதை முயற்சி செய்துபாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
> நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்குச் செய்யும் சின்னச் சின்ன உதவிகளை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதிவையுங்கள்.
இவையெல்லாம் இயல்பாகவே உங்களிடம் நேர்மறையான சிந்தனையை உருவாக்க உதவும். நேர்மறைச் சிந்தனை என்பது 25 சதவீதம்தான் மரபணு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 75 சதவீதம் அது மாற்றியமைக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது என்கிறார் டாக்டர் எரிக் கிம்.