பார்வை: இனி முத்தலாக் செல்லாது!

பார்வை: இனி முத்தலாக் செல்லாது!
Updated on
2 min read

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதன் மூலம் இந்தியர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கண்ணியமாக வாழும் உரிமை, இந்திய இஸ்லாமியப் பெண்களுக்கும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெண்களுடைய பிரச்சினை மட்டுமல்ல இது. இந்தியச் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பானது தனிச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆக, எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது? இது சிறுபான்மை மதத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிரானதாகிவிடாதா? - என்பன உள்ளிட்ட கேள்விகள் விவாதப் புள்ளிகளாக எழுகின்றன.

தனித்துவிடப்படும் பெண்கள்

பாரதிய முஸ்லிம் மஹிலா ஆந்தோலன் அமைப்பு இந்திய இஸ்லாமியப் பெண்களிடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் பங்கெடுத்த 4,500 இஸ்லாமியப் பெண்களில் 91 சதவீதத்தினர் பலதார மணத்தை எதிர்ப்பதாகப் பதிவிட்டனர். முத்தலாக்கை எதிர்க்க ஆதாரமாய் அமைந்தவற்றில் முக்கியமானது இந்தக் கணக்கெடுப்பின் முடிவு. இதைவிடவும் முக்கியமான தகவல் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒட்டி ‘இந்தியாஸ்பெண்ட்’ (IndiaSpend) நடத்திய ஆய்வில் தெரியவந்தது. 1:4 என்கிற விகிதாசாரத்தில் இந்தியாவில் விவாகரத்து ஆன இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் உள்ளனர் என்பதுதான் அது.

பலதார மணம் காரணமாகவே இஸ்லாமியச் சமூகத்தில், இத்தகைய அவல நிலையைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும். அதிலும் தலாக் எனச் சொல்லிப் பெண்ணை விவாகரத்து செய்துவிட முடியும் என்பது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. பொதுவாக விவாகரத்து செய்யும்போது ஆண் - பெண் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து போகிறார்கள் என்றால், 1:1 என்கிற விகிதாசாரம்தானே இருக்க முடியும், எப்படி 1:4 என வர முடியும்? காரணம், விவாகரத்து ஆன பிறகு மறுமணத்துக்கான வாய்ப்பும் சூழலும் ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.

ஆனால், பெண்களுக்கு இல்லை. விவாகரத்து மூலமாக ஆண், பெண் என இரு பாலினரும் பிரிகிறார்கள் என்றாலும், பெண்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அதிலும் இஸ்லாமியச் சமூகத்தில் பலதார மணம் காரணமாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் கைவிடப்படுகிறார்கள். தலாக் சொல்லும் உரிமையும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

திரு குர்ஆனில் இல்லை!

முத்தலாக்கை எதிர்ப்பது மதத்துக்கு எதிரானதா என்றால் திரு குர்ஆனோ, முகமது நபிகளோ இம்முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை, பரிந்துரைக்கவும் இல்லை என்று சொல்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். இது பண்பாடு அடிப்படையில் வரிந்துகொள்ளப்பட்ட வழக்கமே ஒழிய, முத்தலாக்குக்கு திரு குர்ஆனில் இடமில்லை என்பதுதான் இஸ்லாமிய அறிஞர்களின் வாதம். எனவே, இது சிறுபான்மையினரின் தனிச்சட்டத்தை பலவீனப்படுத்தாது என நம்பப்படுகிறது.

அடுத்ததாக, இந்தியாவில் 15% இஸ்லாமியப் பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அடிப்படை உரிமைகளான கல்வி உள்ளிட்டவற்றை அளித்தால் மட்டுமே சமூக- பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி ஒரு சமூகம் முன்னேற முடியும். அந்த அடிப்படையில் முத்தலாக் மறுப்புத் தீர்ப்பு இஸ்லாமியப் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத் திறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in