விடைபெறும் 2022: நம்பிக்கை முகங்கள்

விடைபெறும் 2022: நம்பிக்கை முகங்கள்
Updated on
5 min read


இன்றைக்கும்கூடப் பல்வேறு துறைகள் பெண்களை நுழையவிடாத மழை மறைவுப் பிரதேசங்களாகத்தான் இருக்கின்றன. இட ஒதுக்கீடு என்னும் ஏணியை வைத்தால்கூட அவர்கள் எட்டிப் பிடிக்க முடியாதபடி சமூகச் சூழல் தடுக்கிறது. அதற்காகப் பெண்கள் சோர்ந்துபோய்விடவில்லை. தடை பல வந்தாலும் இடர் பல நேர்ந்தாலும் அவை அனைத்தையும் துணிவோடு எதிர்கொண்டு துயர்வெல்கின்றனர். தங்கள் செயல்பாட்டால் சமூகமெங்கும் மாற்றத்துக்கான பாதையை அமைத்துத்தந்த, வெற்றிக்காகக் கொண்டாடப்பட்ட முகங்களில் சில இவை:

இளம் போராளி
பள்ளி மாணவியான வினிஷா உமாசங்கர், திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் சூழலியல் செயற்பாட்டாளர். காலநிலை மாற்றம், சர்வதேச சுற்றுச்சூழல் பிரச்சினை போன்றவற்றுக்குத் தீர்வுகளைப் பரிந்துரைப்போருக்கு வழங்கப்படும் ‘எர்த் ஷாட்’ பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற மிக இளவயதுப் பெண் இவர்.

விண்ணைத் தாண்டி
l ஆந்திரத்தைச் சேர்ந்த சாய் திவ்யா உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள் இங்கிலாந்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
l ஹரியாணாவைச் சேர்ந்த அபிலாஷா பராக் இந்திய ராணுவத்தின் விமானப் படைப் பிரிவின் முதல் பெண் போர் விமானி என்கிற பெருமையைப் பெற்றார்.
l குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது இந்திய விமானப் படையால் நடத்தப்படும் போர் விமான சாகசத்தில் ஈடுபட்ட இரண்டாம் பெண் விமானி என்கிற பெருமையை ஷிவாங்கி சிங் பெற்றார். ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானியும் இவர்தான். வாராணசியைச் சேர்ந்த இவர் 2017இல் இந்திய விமானப் படையில் இணைந்தார்.

நீதியின் பாதையில்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர். இதற்கு முன் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர் இவர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட்டார். 51 வயதாகும் கேதன்ஜி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் 116ஆவது நீதிபதி.

விளையாட்டுத் தலைமை
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தடகள முன்னாள் வீராங்கனை பி.டி. உஷா (58) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கிய மைல் கல்
இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல் முதல் முறையாக புக்கர் பட்டியலில் இடம்பெற்று, விருதையும் வென்றது. கீதாஞ்சலி யின் Tomb of Sand நாவல்தான் இந்தப் பெருமையை எட்டியுள்ளது. கீதாஞ்சலி மணிப்பூரில் பிறந்து உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர்.


தமிழின் மூத்த எழுத்தாளரான அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் அம்பை, பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் ‘ஸ்பாரோ’ அமைப்பின் நிறுவன இயக்குநர்.

சட்டப்பேரவை அங்கீகாரம்
தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக துபாஷி பொறுப்புக்கு நியமிக்கப் பட்ட பெண் என்கிற பெருமையை ராஜலட்சுமி (60) பெற்றார். சென்னையைச் சேர்ந்த இவர், சட்டமன்ற அலுவலக உதவியாளர், தேர்வுநிலை அலுவலக உதவியாளர், தபேதார் ஆகிய படிநிலைகளைக் கடந்து துபாஷியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைப் பெருமிதம்
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக வி. கீதா லட்சுமி நியமிக்கப்பட்டார். இந்திய அளவில் வேளாண் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்.

ரயிலோடும் வீதியில்
ஊட்டி மலை ரயிலில் ‘பிரேக்ஸ் மேன்’ பணிக்கு முதன்முறையாக நியமிக்கப்பட்ட பெண் என்கிற வரலாற்றுப் பெருமையை சிவஜோதி (46) பெற்றார்.

காவல் பெண்
தமிழக உளவுத் துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டார்.

வசப்பட்ட வணிகம்
‘செபி’ என்றழைக்கப் படும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முதல் பெண் தலைவராக மாதவி புரி புச் நியமிக்கப்பட்டார். இந்தப் பணியில் அமர்த்தப்படும் ஐ.ஏ.எஸ்., அல்லாத முதல் அதிகாரி இவர்.

அரசியல் வெற்றி
l தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹு ஹசன் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டின் ஆறாவது அதிபர் இவர்.
l ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக கேடலின் நவோக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு வரலாற்றில் இள வயது அதிபரும் இவர்தான்.
l 13 வயதிலேயே சுற்றுச்சூழல் காப்புப் பணிகளில் ஈடுபட்ட பிரான்ஸியா மார்க்வேஸ், கொலம்பியா நாட்டின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் முதல் கறுப்பினத் துணை அதிபர் இவர். தங்கள் நிலத்தில் நடைபெற்ற சட்ட விரோத தங்கச் சுரங்கப் பணிகளை எதிர்த்துப் போராடியவர் இவர்.

வெற்றிச் சிகரம்
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான பிரியங்கா மோஹிதே, எட்டாயிரம் மீட்டருக்கு மேல் ஐந்து சிகரங்களை அடைந்த முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். இவர் டென்சிங் நார்கே விருது பெற்றவர்.

அறிவே துணை
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்) தலைமை இயக்குநராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்ணான இவர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்.

முதல் பெண் நடுவர்
கோஸ்டரிகாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் தலைமை நடுவராகச் செயல்பட்டதன்மூலம் ஃபிபா ஆடவர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் முதல் பெண் நடுவர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்டெஃபனி ஃப்ரபார்ட். இவருடன் பிரேசிலின் நியூஸா பேக், ஜெர்மனியின் கேரன் தியாஸ் மதினா ஆகிய இருவரும் நடுவர்களாகச் செயல்பட்டனர். உலகக் கோப்பைப் போட்டியில் ஆண்கள் அணியைக் கண்காணித்த முதல் பெண் நடுவர் குழு இது.

அர்த்தமுள்ள வாழ்க்கை
l சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசு வழங்கிய 2020ஆம் ஆண்டுக்கான ‘மகளிர் ஆற்றல்’ விருது நீலகிரியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, மன நல ஆராய்ச்சியாளர் தாரா ரங்கசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
l குழந்தைகள் நலச் செயற்பாட்டளர் கிரிஜா குமார்பாபு வுக்குத் தமிழக அரசின் ஔவையார் விருது வழங்கப்பட்டது. இவர் பல்வேறு பொதுநல, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சமூக மாற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

உரிமைக் குரல்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கருணா நந்தி, பெண்ணுரிமைக்காகவும் பெண்கள் மீதான குற்றங்களுக்காகவும் தொடர்ந்து வாதாடிவருகிறார். சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞராகவும் அறியப்படுகிறார்.

கலையே அடையாளம்
சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள், பத்ம விருது பெற்றார். விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலின் 32 தேவரடியார்களில் கடைசி சதிராட்டக் கலைஞர் இவர். புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபாலத் தொண்டைமான் இவர்களுக்குப் புரவலாக இருந்தார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
பின்லாந்தின் இளம் வயது பிரதமர் சன்னா மரின், தன் நண்பர்களோடு நடனம் ஆடுவது போன்ற ஒளிப்படமும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. பிரதமராக இருந்தபோதும் தான் ஒரு தனி நபர் என்றும் தனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

வரலாற்றுப் பெருமிதம்
பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதீபா பாட்டீலைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாம் பெண் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். 64 வயதாகும் திரௌபதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர். திரௌபதி முர்மு 2015இல் ஜார்க்கண்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நோபல் அங்கீகாரம்
2022ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் கரோலின் பெர்டோஸி பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ பெற்றிருக்கிறார். 82 வயதான அவர், கடந்த 50 ஆண்டுகளாகத் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைத் தன் எழுத்துகளில் வெளிப்படுத்திவருகிறார்.

ஆட்சிப் பொறுப்பில்
வேலூர் மாவட்டத்தின் 37ஆவது வார்டில் ஆளுங்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார் திருநங்கை கங்கா நாயக்.

திருநங்கைகளின் வாழ்வா தாரத்துக்கும் நலத் திட்டங்கள் கிடைப்பதற்கும் பல ஆண்டுகளாகப் போராடிவருபவர் இவர்.

ஆஸ்கர் வெற்றி
துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்துக்காக வென்றதன்மூலம் ஆஸ்கர் வரலாற்றில் இந்த விருது பெறும் முதல் கறுப்பின, பால்புதுமையர் என்கிற பெருமையை அரியானா டி போஸ் பெற்றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in