

தற்போதைய அஸெர்பெய்ஜானில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் மஹ்ஸதி. பாரசிக மொழியில் கவிதைகள் எழுதிய மஹ்ஸதியின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. செல்யூக் அரசப் பரம்பரையைச் சேர்ந்த சஞ்சார் சுல்தானின் அரண்மனையில் மிகுந்த செல்வாக்கு கொண்ட கவிஞராக மஹ்ஸதி இருந்ததாகச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. கண்மூடித்தனமான மதநம்பிக்கைக்கும் மூடத்தனமான மரபுக்கும் எதிராகக் கவிதைகள் எழுதியமைக்காக அவர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒமர் கய்யாமைப் போல நான்கடிச் செய்யுளான ருபாயிகளை மஹ்ஸதி எழுதியிருக்கிறார். மஹ்ஸதியின் மரணத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட பாரசிகக் கவிதைகளின் பெருந்தொகுப்பான ‘ நொஜாத் அல்-மஜலீஸ்’ நூலில் மஹ்ஸதியின் 60 ருபாயிகள் காணக் கிடைக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல ஆளுமைகளின் வரலாறு ஆதாரபூர்வமாக நமக்குக் கிடைக்கும்போது எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சூஃபி பெண் கவிஞரின் வாழ்க்கை பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியாதது பெரும் துயரமே. எனினும் கடந்த 2013-ம் ஆண்டில் மஹ்ஸதியின் நினைவை யுனெஸ்கோவும் அஸெர்பெய்ஜானும் கொண்டாடியது ஆரோக்கியமான விஷயம். அஸெர்பெய்ஜான் நாட்டில் மஹ்ஸதியின் நினைவைப் போற்றும் வகையில் விழாக்கள் எடுக்கப்பட்டன, அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
மஹ்ஸதியின் படைப்புகளையும் அவரது வாழ்க்கையையும் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரஃபேல் ஹூஸெய்னோவ் மஹ்ஸதியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “மஹ்ஸதியின் கவிதைகளில் காதல் பிரதான இடத்தைப் பெறுகிறது. யதார்த்தம், மனிதநேயம், வாழ்வின் இன்பங்களைப் போற்றும் இயல்பு, நேர்மறைத் தன்மை ஆகியவை அவரது கவிதைகளின் முக்கியமான அம்சங்கள். மதமாச்சர்யங்கள், கபடத்தன்மை, பழமைவாதம் போன்றவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் மஹ்ஸதி. மனிதர்களின் தார்மிக விடுதலையைக் காக்கப் போராடியவர். சுதந்திரமான, சந்தோஷமான வாழ்க்கையை இலக்காகக் கொண்ட ஒரு பெண்ணின் கனவுகளை அவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன”.
பால் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘Mahsati Ganjavi: Life and Poems’ நூல், மஹ்ஸதி குறித்து வெளியான நூல்களில் முக்கியமானது.
1. காதல் உலகை என்னிதயம்
ஆளவந்தபோது
நம்பிக்கையிலிருந்தும்
நம்பிக்கையின்மையிலிருந்தும்
விடுபட்டது.
இன்னலின் மூலாதாரம்
நானே என்பதைக் கண்டுகொண்டேன்
இந்தப் பயணத்தில்.
என்னைக் கடந்து சென்றபோது
திறந்துகொண்டது அந்தப் பாதை
இறுதியில்.
2. கைக்குள் காற்றைத் தவிர,
இறுதியில் எஞ்சுவது ஏதுமில்லை என்பதால்,
எல்லாவற்றின் இலக்கும் இன்மை என்பதால்
இருப்பவை யாவுமே இல்லாதவை போல்தான்,
இல்லாதவையெல்லாம் இருப்பவை போல்தான்.
(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)