விடைபெறும் 2022: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்

விடைபெறும் 2022: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும்
Updated on
7 min read

ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் ஆண்டாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் பாலினச் சமத்துவத்தை வேண்டுவோரின் எண்ணம். ஆனால், அப்படி அமைவதில்லை என்பதைத்தான் நாம் கடந்துவந்த பாதை நினைவூட்டுகிறது. ஆணாதிக்க முட்களும் பாகுபாட்டுப் பள்ளங்களும் மலிந்த பாதைதான் அது என்கிறபோதும் பெண்கள் அதை உறுதியோடு கடந்து வாகைசூடாமல் இல்லை. பெண்களுக்கு உதவிக்கரங்கள் நீளாமலும் இல்லை. அப்படிக் கடந்த ஆண்டில் பெண்கள் சாதித்த அல்லது பெண்களுக்குச் சாதகமாக அமைந்த நிகழ்வுகளின் தொகுப்பு இது:

பாலியல் தொழிலாளிகளும் மனிதர்களே

அரசமைப்புக் கூறு 21இன்படி மற்ற அனைவரையும் போல கண்ணியத்துடனும் மனிதநேயத்துடனும் நடத்தப்படுவதற்கான அனைத்து உரிமைகளும் பாலியல் தொழிலாளிகளுக்கு உண்டு என்று மே 19 அன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கோவிட் பெருந்தொற்றையொட்டி பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான மனுவின் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இப்படித் தெரிவித்துள்ளது. “தன் விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் குற்றவாளிகள் அல்ல. பாலியல் தொழிலாக நடத்துவதுதான் சட்டத்துக்குப் புறம்பானது. ஆள்கடத்தல் தடைச்சட்டம் 1956இன்கீழ் விசாரிக்கப்படும் பாலியல் தொழிலாளிகளிடம் காவல்துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை உடல்ரீதியாகவோ வார்த்தைரீதியாகவோ பாலியல்ரீதியாகவே துன்புறுத்தக் கூடாது. பாலியல் தொழிலாளி ஒருவர் பாலியர் புகார் கூறினால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படி அணுக வேண்டுமோ அதே அளவுகோல்படிதான் பாலியல் தொழிலாளியையும் அணுக வேண்டும். ஆள்கடத்தல் தடைச்சட்டத்தால் மீட்கப்படும் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இல்லங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும். விருப்பம் உள்ளவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பாலியல் தொழிலாளர்கள் குறித்த சட்டத்தையோ திட்டத்தையோ உருவாக்கும்போது அந்தக் குழுவில் பாலியல் தொழிலாளி அல்லது அவர்களது பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

உயர் கல்விக்கு உத்தரவாதம்

அரசுப் பள்ளி மாணவி களின் உயர்கல்வியை உறுதிசெய்வதற்காக அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பைத் தொய்வின்றித் தொடர வழிசெய்யும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இளநிலைப் படிப்பு முடிக்கும்வரை இந்த நிதியுதவி தொடரும். ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்பில் சேர்கிறவர்களுக்கும் இந்த உதவித்தொகை உண்டு. தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் ஆறு லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைப்பேறு விடுப்பு

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 270 நாள்கள் விடுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

போர் விமானங்களை இயக்கும் பெண்கள்

இந்திய விமானப் படையில் போர் விமானங் களை இயக்கும் பணியில் பெண்கள் இனி நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களின் நுழைவு சாத்தியமானது. போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்கள் சோதனை முயற்சியாக ஈடுபடுத்தப்பட்டனர். போர் விமானிகள் அடங்கிய மூவர் குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தக் குழுவைச் சேர்ந்த அவனி சதுர்வேதி, மிக் 21 ரக போர் விமானத்தை 2018இல் இயக்கி, போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்கிற வரலாற்றைப் படைத்தார். அதைத் தொடர்ந்து போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் விமானிகள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு, பெண்களின் சக்திக்கு இது சான்று எனவும் குறிப்பிட்டுள்ளது. பாலினச் சமத்துவத்தை முன்னெடுத்த விமானப் படையின் செயலைத் தொடந்து கடற்படையும் போர்க்கப்பல்களில் பெண் மாலுமிகளை 2020இல் பணியில் அமர்த்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பெண் அதிகாரிகளில் 15 பேர் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா உள்ளிட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை இயக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். பெண் கப்பலோட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கடற்படை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ரயிலோட்டும் சவுதிப் பெண்கள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்குப் பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுவந்த நிலையில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை 2018-ல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பெண் ரயில் ஓட்டுநர் பணிக்கு 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சவுதி அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. பெண்கள் மீதான பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களின் பணிப் பங்களிப்பு 33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.



திருமண வல்லுறவும் குற்றமே

திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும்படி பெண்ணிய அமைப்புகள் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவுகொள்வது குற்றமல்ல என்கிறது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375. இது பெண்ணின் அடிப்படை உரிமைக்கு எதிராக இருப்பதாகவும் திருமண உறவில் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தவிர, திருமண உறவுக்குள் நடைபெறும் வல்லுறவை, குடும்ப வன்முறை அல்லது வேறு பிரிவின்கீழ்தான் கொண்டுவர முடியும் என்பதைத் திருத்தி, திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும்படியும் வாதிடப்பட்டது. இது குடும்ப அமைப்பைச் சிதைத்துவிடும் என்றும், திருமண உறவுக்குள் வழங்கப்படும் இந்த அதிகாரத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவித்திருக்கும் 50 நாடுகள் தவறான சட்டத்தை இயற்றியுள்ளனவா என நீதிபதிகள் தரப்பில் கேட்கப்பட்டது.

ஊதியப் பாகுபாட்டைக் களைந்த நியூசிலாந்து

விளையாட்டுத் துறை யில் வீரர்களுக்கு இணையான ஊதி யம் வீராங்கனை களுக்கு வழங்கப் படுவதில்லை என்கிற குறை இப் போதும் தொடர்கிறது. குறிப்பாகக் கோடி களைக் குவிக்கும் கிரிக்கெட்டில் இந்தப் பாகுபாடு அதிகம். இந்தப் பாகுபாட்டைக் களையும் முதல் முயற்சியாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்கும் முன்னெடுப்பு, கிரிக்கெட் உலகின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.

நியூசிலாந்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான ஊதியம் வழங்க வகை செய்யும் ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் சங்கம், வீரர் - வீராங்கனைகள் சங்கங்களோடு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன்படி நியூசிலாந்து வீரர், வீராங்கனைகள் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது ஒரே மாதிரியான ஊதியத்தை இனி பெறுவார்கள். அதைவிட முக்கியமான விஷயம், சர்வதேசப் போட்டிகளில் மட்டும் அல்லாமல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடும் இரு பாலருக்கும் இணையான ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவிலும் ஊதிய சமத்துவம்

இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போல இனி சர்வதேச டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒப்பந்த அடிப்படையிலான வீராங்கனைகளுக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பாலினப் பாகுபாட்டை உடைக்கும் நடவடிக்கையாக டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், டி20 போடிக்கு ரூ. 3 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு வரலாற்று நிகழ்வு” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கும் ஐ.பி.எல்.

ஆடவருக்கான ஐபிஎல் மட்டும் நடந்துவந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஆரம்பப் பணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்கவிருக்கும் இத்தொடரில் 160 முதல் 170 இந்திய வீராங்கனைகளும், 30 முதல் 40 வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தைக்குத் தண்டனை பெற்றுத்தந்த மகள்கள்

தங்கள் தாயைக் கொன்ற வழக்கில் தந்தைக்குத் தண்டனை பெற்றுத்தர ஆறு ஆண்டுகளாகப் போராடியுள்ளனர் இரு மகள்கள். உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் நகரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பன்சால். இவருடைய மனைவி அனு. இவர்களுக்கு லத்திகா, தான்யா என இரு மகள்கள். தங்கள் வம்சத்தின் பெருமையைக் காக்க ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார் மனோஜ். கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்து அனுவுக்கு ஆறு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படியொரு சூழலில் 2016இல் தன் மனைவியை எரித்துக் கொன்றார் மனோஜ் பன்சால். இதற்கு எதிராக லத்திகாவும் தான்யாவும் எடுத்த முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்குத் தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதிய பிறகே முறையான விசாரணை தொடங்கியது. இந்தச் சிறுமிகளுக்கு ஆதரவாக சஞ்சய் சர்மா என்ற வழக்கறிஞர் கட்டணமின்றி வாதாடினார். மனோஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புலந்த்ஷர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.



முன்னேறும் சென்னை பின்தங்கும் டெல்லி

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2021இல் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. பெரு நகரங்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் நகரம் என்று எதுவும் இல்லை. ஆனால், நடைபெறும் குற்றச் செயல்களின் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முந்துகிறது. கொல்கத்தா அதைப் பின்தொடர்கிறது.



மணமாகாதவர்களும் கருக்கலைப்பு செய்துகொள்ளாலாம்

மணமாகாத பெண்களும் 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவை மருத்துவரீதியாகக் கலைக்க உரிமையுண்டு என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் பெண்ணுரிமையை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. ‘விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்’ என்று சொன்ன அதே நேரம், ‘மனைவி மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவையும் பாலியல் வல்லுறவாகவே கருதி அதன் விளைவாக உருவாகிற கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும். இதில் பெண்ணின் விருப்பம் மட்டுமே போதுமானது. பாலியல் வல்லுறவு குறித்து அவர் நிரூபிக்கத் தேவையில்லை’ என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கணவனின் அனுமதி தேவையில்லை

கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணுக்குத் தன் கருவைக் கலைக்கும் உரிமையை கேரள உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. அதற்குக் கணவனின் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. “கருவுறுதல் தொடங்கி பிரசவம் வரையிலான மன அழுத்தத்துக்குப் பெண்களே ஆளாகிறார்கள். பொருளாதாரப் பின்புலமும் கணவனின் ஆதரவும் இல்லாத நிலையில் குழந்தையைச் சுமப்பது ஒரு பெண்ணை மனரீதியான சிதைவுக்கு இட்டுச் செல்லும் அபாயமும் இருக்கிறது” என்று நீதிமன்றம் தெரிவித்தது.


இனி இரு விரல் பரிசோதனை கூடாது

பாலியல் வழக்குகளை விசாரிக்கும்போது ‘இரு விரல்’ பரிசோதனை முறையைப் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு உத்தரவிட்டது. பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ என்கிற சவ்வு இருக்கும். அந்தச் சவ்வு கிழிந்துள்ளதா, இல்லையா என்பதைப் பரிசோதிப்பது ‘இரு விரல்’ பரிசோதனை முறை. மிகவும் வலி தரக்கூடிய இந்த இரு விரல் பரிசோதனைக்குக் கடந்த 2018ஆம் ஆண்டு, ஐ.நா., சபை தடைவிதித்தது. அதற்கு முன்னதாகவே, இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என்றும், இப்பரிசோதனை மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது என்றும் 2013ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனினும், இரு விரல் பரிசோதனை நடைமுறையில் இருந்துவந்தது. இப்போது இதற்குத் தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரு விரல் பரிசோதனை முறை தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இரு விரல் பரிசோதனையில் ஈடுபடும் எந்தவொரு நபரும் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்தியக் காவல் படையில் பெண்கள்

மத்திய ரிசர்வ் காவல்படையான சி.ஆர்.பி.எஃப்.-இல் முதல் முறையாக இரண்டு பெண்கள் ஐஜிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு பதவியில் சேர்ந்த சீமா துண்டியா, ஆனி ஆபிரஹாம் ஆகியோருக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் சீமா துண்டியா பிஹார் பிரிவுக்குத் தலைமையாகவும் ஆனி ஆபிரஹாம் விரைவு நடவடிக்கைப் படையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மைல்கல்லை எட்ட இரு பெண் அதிகாரிகளும் தங்களது பயணத்தில் அயராத உழைப்பை வழங்கி இருப்பதாகச் சக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல் சி.ஆர்.பி.எஃப்., பெண்கள் படை 1986ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆறாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இப்படையில் பணியாற்றிவருகின்றனர்.

விண்வெளித் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் பெண் என்கிற பெருமையைப் பெற்றவர் சிரிஷா பந்த்லா. அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘வர்ஜின் கேலக்டிக்’ அறிமுகப்படுத்திய விண்வெளிச் சுற்றுலாவில் அதன் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன்னுடன் இணைந்து பயணித்தவர் இவர். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் ஐந்து வயது ஆனபோதே அமெரிக்கா சென்றுவிட்டார்.

‘வர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தின் அரசு விவகாரம் – ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் இவர், விண்வெளி சுற்றுலாவைப் பரவலாக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் பெண்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கத் தயங்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஆண்களை விஞ்சிய அர்ஜுனா வீராங்கனைகள்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்குக் கடந்த ஆண்டு தேர்வாகியிருக்கும் 25 பேரில் 13 பேர் பெண்கள். ஆண்களோடு ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் விளையாடினாலும் அதிக எண்ணிக்கையில் விருதுக்குத் தேர்வாகியிருப்பதைப் பெண்களுக்கான அங்கீகாரமாகவே பார்க்க வேண்டும்.

அர்ஜுனா விருதாளர்களில் சீமா அண்டில் (தடகளம்), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), நிக்கத் ஜரீன் (குத்துச்சண்டை), தீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுசீலா தேவி (ஜூடோ), சாக்‌ஷி குமாரி (கபடி) உள்ளிட்ட 13 பேரில் இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிச் சுடுதல்), ஜெர்லின் அனிகா (காதுகேளாதோருக்கான பாட்மிண்டன்) ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருநங்கையரின் வரலாற்றுப் பெருமிதம்

தெலங்கானாவைச் சேர்ந்த திருநங்கைகள் ரூத், பிராச்சி ஆகிய இருவரும் உஸ்மானியா அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டனர். திருநங்கையர் இருவர் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்படுவது தெலங்கானா வரலாற்றில் இதுவே முதல் முறை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in