

தேர்ந்த கட்டுரையாளர், பல்வேறு நாளிதழ்களின் பத்தி எழுத்தாளர், கவிஞர், களரிபயிற்று கலைஞர், யோகா கலைஞர், அரங்கக் கலைஞர் எனப் பல திறமைகளைக் கொண்டவர் திஷானி ஜோஷி. உலகம் முழுவதும் இந்தியாவின் நவீன நடன வடிவத்தை பிரபலப்படுத்திய சந்திரலேகாவின் ‘சரீரா’ படைப்பில் சக கலைஞர் ஷாஜியுடன் தோன்றி, ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பகுதிகளிலும் சரீரா படைப்பை மேடையேற்றிவருகிறார் திஷானி. இம்மாதம் 29 அன்று ஸ்பேசஸில் ‘சரீரா’ அரங்கேற்றத்துக்கான பயிற்சியில் இருந்த அவரிடம் பேசியதிலிருந்து…
புகழ் பெற்ற நடனக் கலைஞரான சந்திரலேகாவைச் சந்தித்த பிறகு உங்களிடம் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன?
சந்திரலேகாவைச் சந்திப்பதற்கு முன் நான் ஒரு கதாசிரியராக, கவிஞராகத்தான் அறியப்பட்டேன். லண்டனில் மேல்படிப்பை முடித்த பின், சென்னைக்கு 2000-ல் வந்தேன். அப்போது ஒரு பத்திரிகைக்காக சந்திரலேகா எழுதிய ‘ரெயின்போ ஆன் தி ரோட் சைட்’ என்னும் கவிதைப் புத்தகம் தொடர்பான விமர்சனத்துக்காகத்தான் அவரைச் சந்தித்தேன். யோகா, களரிபயிற்று போன்ற கலைகளில் எனக்கிருக்கும் ஈடுபாட்டைப் பார்த்த சந்திரலேகா, எனக்கு நடன முறைகளைப் பயிற்சியளித்து அவரது சரீராவில், களரிபயிற்று கலைஞர் ஷாஜி ஜானுடன் சேர்ந்து மேடையேற்றினார்.
இது உடனே நடந்த விஷயம் கிடையாது. மணிக்கணக்கில், நாட்கணக்கில் அவருடன் இருந்திருக்கிறேன். அரசியல் அரட்டை, கலை, ஓவியம், நடனம், நகைச்சுவை, உடலின் முக்கியத்துவம் இப்படிப் பல விஷயங்களில் எங்களிடையே எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் இருந்தன. இந்த நீண்ட பயணத்தின் விளைவுதான் அவருடன் இணைந்து நான் நிகழ்ச்சிகளை வழங்கியது. இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் என்னை அறிமுகப்படுத்தியது அவருடனான என் கலை நெருக்கம்.
சரீரா நவீன நாட்டியமா, கலப்பு கலை வடிவமா?
யோகாவின் பல நிலைகளையும், களரி பயிற்று போன்ற தற்காப்புக் கலையின் கூறுகளையும் ஒருங்கே கொண்டு உருவாகியிருக்கும் காட்சி வடிவம்தான் சரீரா. இதில் நவீனத்தின் கூறுகள் இருக்கும். வெளிப்படும் விதம் ஃபியூஷனாக இருக்கும்.
காலப்போக்கில் உங்களின் படைப்பாற்றலையும் சரீராவில் சேர்த்திருக்கிறீர்களா?
சரீரா முழுக்க முழுக்க சந்திரலேகாவின் படைப்பாற்றலில் உருவானது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக சரீராவைப் பல மேடைகளில் அரங்கேற்றியிருக்கிறோம். இதை ஒரு ‘யுனிவர்சல் கான்செப்ட்’ என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகத்தின் பல பகுதிகளிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. நுண்ணுணர்வு, பாலுணர்வு, ஆன்மிக உணர்வுகளை தாங்கும் கலம்தான் உடல். மேடைக்கு மேடை ஒரே மாதிரியான நகர்வுகள் இருந்தாலும், உடல் மொழியை வெளிப்படுத்துவதில் மேடைக்கு மேடை நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இயந்திரத்தனம் வந்துவிட்டால் கலை இறந்துவிடும்.
சரீராவின் கருத்தில், அதன் உள்ளார்ந்த காட்சிகளின் நகர்வில் நான் எந்த மாற்றத்தையும் செய்ததில்லை. உலகமே வேகத்தை விரும்புகிறது. வேகமாக சாப்பிடுகிறோம், வேகமாக இயங்குகிறோம். இதற்கு எதிரானது சரீரா. இதில் உடல்களின் நகர்வுகள் மிகவும் மெதுவாக நடக்கும். இதுதான் இந்தப் படைப்பின் பலம்.
ஆண், பெண் வேறுபாட்டைத் தகர்க்கும் அர்த்தநாரி தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கருத்தை வலியுறுத்துவது இந்த சரீரா. அளவற்ற ஆற்றலைக் கொண்ட உடலின் திறனை ஒவ்வொருவருக்கும் புரிந்துகொள்ள வைக்கும் முயற்சி.
சரீராவின் பின்னணியில் ஒலிக்கும் தத்துவம்?
எங்கு உடல் தொடங்குகிறது, அது எங்கு முடிகிறது என்னும் கேள்விக்கான பதில் அவரின் அனைத்து படைப்புகளிலும் இருக்கும். கோயில் கோபுரங்களில் இருக்கும் உருவங்களுக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒரு நிகழ்வு. நாம் இறந்த காலத்தின் தொடர்ச்சிதானே தவிர, அதிலிருந்து விலகியவர்கள் அல்ல என்பதுதான் சரீராவின் தத்துவம்.
அடுத்த தலைமுறையினருக்கு சந்திரலேகாவின் சரீரா படைப்பை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?
சதானந்த் மேனன், ஷாஜி போன்ற நண்பர்களுடன் இதைப் பற்றி ஆலோசித்துவருகிறேன். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. காலம்தான் பதில் சொல்ல முடியும். ஏனென்றால் இன்ஸ்டியூடிஷனில் நம்பிக்கை இல்லாதவர் சந்திரலேகா. நானும் ஷாஜியும் சந்திரலேகாவுடன் இணைந்து இதை நடத்தினோம்.
என்ன மாதிரியான யோக ஆசனங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன?
சரீராவில் சில நகர்வுகள் உங்களுக்கு சில யோகாசனங்களை நினைவு படுத்தினாலும், உண்மையில் யோகாசனங்கள் என்று சொல்லமுடியாது. மேடையில் இரண்டு உடல்களின் மூலம் பல்வேறு படிநிலைகள், உருவங்கள், அரூபமாக தரிசனம் தரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதலை இது கொடுக்கும்.
உடல் குறித்த உங்களின் புரிதல் என்ன?
அளவற்ற சக்தியை உள்ளடக்கியது நம் உடல். ஐம்பூதங்களும் நம் உடலில் அடக்கம். அதன் வீச்சை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்வதில்லை. அண்டசராசரமே நம் உடலில் அடக்கம். மகிழ்ச்சி, துரோகம், வருத்தம், கோபம், வெறுப்பு போன்ற எல்லாமே நம் உடலின் மூலமாகவே நமக்குக் கிடைக்கிறது. அதனால் உங்கள் உடலைக் கொண்டாடுங்கள்.
உங்கள் குடும்பம்?
என் கணவர் பெயர் கார்லோ. இத்தாலியைச் சேர்ந்தவர். அவரும் எழுத்தாளர்தான். நாங்கள் கடற்கரை கிராமத்தில் வசிக்கிறோம். எங்களோடு முதலில் ஒரு நாய்க்குட்டி தங்கியது. சில நாட்களில் அதனுடைய இணையை அழைத்துவந்தது. எல்லா உயிர்களுமே அன்பானவைதான். அதிலும் நாய்கள் நீண்ட காலமாக மனிதர்களிடம் நட்போடு இருப்பவை. மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் புரிந்துகொள்ளக் கூடியவையும்கூட.