

பெண்களின் அறிவாற்றல் மேலோங்கி, சமூகத்தில் அவர்களின் தலைமைத்துவமும் பங்கேற்பும் பங்களிப்பும் ஒருபுறம் அதிகரித்துவருகின்றன. மறுபுறம் பெண்களைப் பலவீனப்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்தச் சமூகத்தில், ஒவ்வொரு தனி மனுஷியும் தனக்கான உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும். ஆணாதிக்க உலகில், பெண்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுத்தான் பெற வேண்டிய நிலை உள்ளது.
பெண்கள் பலவீனமானவர்கள்; போராடத் திராணியற்றவர்கள். அதனால் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அதுவும் அவர்கள் இல்லத்துக்குள் வைத்துப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று இந்த ஆணாதிக்கச் சமூகம் கருதுகிறது. வள்ளுவரும், இந்தச் சமூகக் கருத்தாக்கத்தைச் ‘சிறை காத்தல்’என்றே கூறியுள்ளார்.
இல்லத்துக்குள் பாதுகாக்கப்படக் கூடிய பெண்ணுக்குக் கணவன்தான் பாதுகாவலன். அதனால், ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கணவனைப் போற்றி வாழ வேண்டும். நம் முன்னோர்கள்,
‘பதி பக்தி’,
‘கணவனே கண் கண்ட தெய்வம்’
‘மணாளனே மங்கையின் பாக்கியம்’
என்றெல்லாம் அவர்களுக்கு மந்திரம் ஓதி, அவர்களைச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிட்டனர். கணவன் முரடனாக, அடாவடித்தனம் செய்கிறவனாக இருந்தாலும்,
‘கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்’
‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
என்று அவனைச் சகித்து வாழ, இந்தச் சமூகம் பெண்ணுக்குக் கற்பிக்கிறது. பெண்களின் வாழ்க்கையைப் பகடைக் காயாக உருட்டும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் பிடியில் உருத்தெரியாமல் சிதைந்த பெண்கள் ஏராளம்.
பெண்களின் ஒட்டுமொத்தப் போராட்டம், அவர்களின் அடிமைத்தளை நீக்கிற்று என்றாலும், பல தனி மனுஷிகளின் வாழ்கையைக் காப்பாற்ற யாராலும் இயலவில்லை.
கல்வி இல்லாத பெண்கள்தான் சீரழிகிறார்கள் என்றால், கல்வி கற்ற பெண்களும் சிந்திக்கவும் செயல்படவும் போராடவும் துணிவின்றி, பண்பாட்டுக் கட்டுமானங்களின் மிகைப்பூச்சில் அகப்பட்டுக்கொண்டு, ஆணாதிக்க அசுரர்களால் நசுக்கப்பட்டு, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர். அவர்களில் ஒரு சகோதரியை அடையாளம் காட்டுகிறேன்.
அவர் உயர் கல்வியில் தங்கப் பதக்கம் பெற்றவர். உயர் கல்விப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவருக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோரின் தலையீட்டால் சிக்கல் தொடங்கியது. பெற்றோரையும் மனைவியையும் கவனமாகக் கையாளத் தெரியாத கணவனால், அவளுக்கு வாழ்க்கை போராட்டமானது. முதலில் அவர்கள் வற்புறுத்தலுக்காக வேலையை விட்டவர் , பெற்ற குழந்தையைப் புகுந்த வீட்டாரிடம் இழந்து, தனியளாகத் தாய் வீடு திரும்பினார்.
தற்போது தனிமனுஷியாக வேதனையில் உழன்று, கணவன் வீட்டாரோடு போராடத் திறனின்றி, கூனிக் குறுகி, மீண்டும் முயன்று பெற்ற வேலையை மனப்பாதிப்பால் விட்டு, பெற்றோர் பராமரிப்பில் பேதலித்து நிற்கிறார். ஆண்டுகள் பல சென்றும், இன்னொருத்திக்குக் கணவனாகிவிட்ட கணவனை நினைத்தும், இளைஞனாக இருக்கும் மகனின் அரவணைப்புக்கு ஏங்கியும் நிற்கும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை மற்ற சகோதரிகளுக்கு ஒரு படிப்பினை.
பெண்கள் எல்லாம் விடுதலை பெற்றுவிட்டார்கள். அவர்கள் எங்களை அடக்கி ஆள்கிறார்கள். அவர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் எங்களுக்குத்தான் வேண்டும் விடுதலை’என்ற வெற்றுக் கூச்சலின் மத்தியில், இப்படி உருத்தெரியாமல் நசுக்கப்பட்ட சகோதரிகளின் ஈனக் குரல் எப்படி ஒலிக்கும்? படித்த பெண் என்றாலும், தன் வாழ்வில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயங்கியதால், வாழ்க்கையை இழந்து நிற்கிறார். வாழ்க்கை போராட்டக் களமாக அமைந்துவிட்டால், பாதிக்கப்பட்ட பெண்கள் போராடித்தான் ஆக வேண்டும்.’
பெண்கள், போராட்டத்தைச் சந்திக்கத் திராணியின்றி ஒதுங்கி வழிவிடுவது கோழைத்தனம். தான் கற்ற கல்வி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, அவர் நீதிமன்றம் சென்று போராடியிருக்கலாம். அல்லது தன் வாழ்க்கையை இந்தச் சமூகத்துக்கோ, கல்வித் துறைக்கோ அர்ப்பணித்துச் சிறந்திருக்கலாம். திருமண வாழ்வு மட்டுமே வாழ்க்கை என்று நம்புவதும், அது கிடைக்காதபோது அதற்காக ஏங்குவதும் , வாழ்நாள் முழுவதும் அழுது வீணாக்குவதும் மடமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனிமனுஷியாகப் போராட்ட வாழ்வை எதிர்கொள்வதும், அதில் வெற்றிகொள்வதும் கூட, ஒட்டு மொத்த பெண் சமூகத்தின் எழுச்சிக்கு அடிஉரமாக அமைய முடியும் என்பதை உணர்வோம்; உணர்த்துவோம்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com