

திருமணம், வரவேற்பு, சீமந்தம் போன்ற விசேஷங்களில், சிகையலங்காரமும் முக்கியமான அம்சமாக மாறிவிட்டது. தாழம்பூக்களையும் மல்லிகைச் சரங்களையும் ஜடையைச் சுற்றி அழகுபடுத்திக்கொண்டது அந்தக் காலம் என்றாலும், பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை உடுத்தும்போது பூ ஜடைகளைத்தான் இப்போதும் நாடுகின்றனர். கெம்பு நகைகள், கல் பதித்த நகைகளால் செய்யப்பட்ட பூ ஜடைகளை, இயற்கைப் பூக்களால் செய்யப்படும் நவீனப் பூ ஜடைகள் தற்போது முந்தி வருகின்றன.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் மணப்பெண்ணுக்குப் பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளைக் கொண்டு ஜடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படி வித்தியாசமான பூ ஜடையைச் செய்தவரைத் தேடிப் பிடித்தோம்.
பொறியியல் பட்டதாரியான கலைவாணி சென்னை போரூரில் வசிக்கிறார். ஐதராபாத்தில் தன்னுடைய தோழியிடம் பூ ஜடை தயாரிப்பு குறித்துப் பயிற்சி பெற்றுவந்திருக்கிறார். வெற்றிலை ஜடை, பொம்மை ஜடை எனப் பழைய மாடல் பூ ஜடைகளுக்குப் புது வடிவம் கொடுத்து வருகிறார். ஒரு பூ ஜடை செய்ய 5 மணி நேரமாகும். அந்த அளவுக்கு உழைப்பு தேவைப்படுகிறது என்கிறார் கலைவாணி.
”இன்றைய இளம்பெண்கள் நகைகளால் ஆன பூ ஜடைகள் எடை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் நிஜப் பூக்களைக் கொண்டு பூ ஜடைகளைச் செய்கிறேன். வாடிக்கையாளர்கள் முகூர்த்தப் புடவைகளின் நிறத்தை அனுப்பிவிடுவார்கள். அதை வைத்து, மாடல் செய்துவிடுவேன். நிஜப் பூக்களைக் கோயம்பேடிலிருந்தும், செயற்கைப் பூக்களை ஹைதராபாதிலிருந்தும் வரவழைக்கிறோம். நிச்சயதார்த்தம், மெஹந்தி, திருமணம், வரவேற்பு, சீமந்தம் என்று மாதம் முழுவதும் தொடர்ச்சியாக ஆர்டர்கள் இருக்கும்” என்பவர், பூக்களைக் கொண்டே நெத்திச்சுட்டி, நெக்லஸ், தோடு, பிரேஸ்லெட், ஒட்டியாணம்வரை தயாரித்து, ஆன்லைனிலும் ஃபேஸ்புக்கிலும் விற்பனை செய்துவருகிறார்.