

“சூப்பர் ஸ்டாரைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. சமீபத்தில் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, நான் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொன்னேன். பாராட்டினார். அவருடைய படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இப்போது என்னுடைய ஆசை” என்று பேசத் தொடங்கினார் ஜாய் கிரிஷில்டா.
ஆடை வடிமைப்பாளர் துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
இயக்குநர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்து விஸ்காம் படித்தேன். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை செய்யும்போது, என் நண்பர்கள் பெண்களுக்கு இயக்குநர் பணி சரிப்பட்டு வராது என்றார்கள். இயக்குநரை விட்டால் எனக்கு ஆடை வடிவமைப்பின் மீதுதான் ஆர்வம் அதிகம். உடனே அதுக்கு என்ன படிப்பு என்று தேடினேன். பெங்களூருவுக்குச் சென்று ஆடை வடிவமைப்பு குறித்துப் படித்தேன். ஆடை வடிவமைப்பாளராக என் முதல் படம் ‘டார்லிங்’.
திரையுலகத்தில் ஒரு பெண்ணாக எப்படி உணர்கிறீர்கள்?
முதலில் நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். பெண் என்று பயந்துகொண்டே இருந்தால் எதையும் செய்ய முடியாது. நான் சினிமா துறைக்குள் வரும்போது, எனக்கு இங்கே யாரையும் தெரியாது. முதல் வாய்ப்பு கிடைக்கும்வரை மிகவும் போராடியிருக்கிறேன். இப்போது ‘கீ ', ‘ஹர ஹர மஹா தேவகி ', ‘கதாநாயகன்' என்று தொடர்ச்சியாகப் பல படங்களில் பணியாற்றி வருகிறேன். திரைத்துறையில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறேன்.
போட்டியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
சினிமாத்துறை என்று மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் போட்டி இருக்கிறது. போட்டியை எப்படி நாம் கையாள்கிறோம் என்பதுதான் விஷயம். எனக்கு முன்னால், பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. என்னுடைய வேலையை நான் பார்ப்பேன், அதுக்கான இடம் எனக்குக் கிடைக்கும்.
வீட்டில் ஆதரவு எப்படி?
ஆரம்பத்தில் பிரச்சினை இருந்தது உண்மைதான். இப்போது புரிந்துகொண்டார்கள். படத்தில் என் பெயர் வரும்போது சந்தோஷப்படுகிறார்கள். பேட்டிகளை ஆவலுடன் படிக்கிறார்கள்.