

சானிட்டரி நாப்கின்களில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக டெல்லியைச் சேர்ந்த அரசுசாரா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, நாப்கின்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நாப்கின்களுக்கு எவையெல்லாம் மாற்று என்றும் டிசம்பர் 4 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் மனத்தடைகளைக் களையவும், தீங்கில்லா நாப்கின்களுக்கு என்ன தீர்வு என்றும் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில:
‘இந்து தமிழ் திசை’க்கு நன்றி. மூன்று வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வுக்காகத் திரைப் பிரபலங்கள் தங்கள் கைகளில் சானிட்டரி நாப்கின்களை வைத்த வண்ணம் ஒளிப்படத்தைப் பகிர்ந்தனர். இந்தி நடிகர் ஒருவர் கையில் குப்பி போன்ற எதையோ வைத்திருந்தார். என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த நாள் ‘இந்து தமிழ் திசை’யில் அதே படத்தோடு மாதவிடாய்க் குப்பி பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.
உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்து ஒரு குப்பியை வாங்கி அதில் கொடுக்கப்பட்டிருந்த பயன்பாட்டு முறைகளின்படி அதைப் பயன்படுத்தினேன். அன்றிரவுதான் முதல் முறையாக அந்த நாட்களில் படுக்கையில் நேராகப் படுத்து உறங்கினேன். கண்ணீரே வந்துவிட்டது. பள்ளி, கல்லூரி காலத்தில் மாதவிடாய் நாட்களில் நான் பட்ட கஷ்டங்கள் எவ்வளவோ! அரசுப் பள்ளி. கழிப்பறைக்குத் தண்ணீர் வசதியெல்லாம் கிடையாது. காலை முதல் தண்ணீரே குடிக்க மாட்டேன். பள்ளி விட்டதும் மிதிவண்டியை எக்காரணம் கொண்டும் வழியில் நிறுத்தாமல் நேராக வீட்டுக்கு வருவதற்குள் பட்ட அவஸ்தைகள் நிறைய.
மூன்று ஆண்டுகளாக நான் மாதவிடாய்க் குப்பியைத்தான் பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்த பலரிடமும் இதைப் பற்றிச் சொல்லிவருகிறேன்.
- பாரதி
இந்தச் சமூகத்தில் ஒரு பெண் பருவமெய்தியதும் ஊரையே அழைத்து சடங்கு என்கிற பெயரில், ‘தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ என்ற பாடலுடன் ‘விழா’ நடத்துவதும், மாதவிடாய் நேரத்தில் இதைத் தொடாதே, அதைத் தொடதே, அந்தப் பக்கம் செல்லாதே என்று நவீன தீண்டாமையைக் கடைப்பிடிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்கள் மத்தியிலும்கூட இதே கதைதான். மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் மூலமாகவும் இதழ்களின் மூலமாகவும் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் அது அனைவரையும் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. நாப்கின்களுக்குப் பதிலாக எதைப் பயன்படுத்துவது என்பது பற்றி மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டு இந்தச் சமூகப் பிரச்சினையை அரசுதான் சீர்செய்ய வேண்டும்.
- எம். சபிதா தேவி, மதுரை.
பெண் நுகர்பொருளின் அங்கமாகப் பார்க்கப்படுகிற மனநிலையிலிருந்து உலகம் மாறவில்லை. இயற்கையாக நடைபெறுகிற ஒரு செயலுக்கான சமூக விளைவு குறித்துப் பொருளால் மட்டும் அணுகுகிற நிலைமை என்பது மோசமானது. பெண்ணின் மிக அவசியமான தேவை குறித்து, அன்றாடச் செயல் பாட்டின் அங்கமான மாதவிடாய் குறித்து அரசுகள் விவாதிக்க வேண்டும். ஈரத்தன்மையுடன் கூடிய கழிவு வெளியேற்றமாக இது கருதப்படாமல் உயிர்சுழற்சி பாதுகாப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மாதவிடாய் காலத்தை ஓய்வுக்கான காலமாகக் கருதி பெண்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிடும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
- நா.பாலமூர்த்தி, கோவை.
மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு தேவையான அளவு இல்லை. இதைப் பற்றிய அசூயை, அருவருப்பு, வேதனை எல்லாம் சேர்ந்து அந்த நேரத்தில் பெண்கள் அவசரகதியில்தான் இயங்குகிறார்கள். நாப்கின்கள் பற்றிப் பல வீடுகளில் உரையாடுவதில்லை. எல்லாப் பெண்களுமே இதை அனுபவித்தாலும் அது பேச்சில் தவிர்க்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. ஊரறிந்த ஒரு விஷயம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. இது குறித்து நேர்மறையான எண்ணங்கள் எழும்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் எந்தவித மனத்தடையும் இன்றி விவாதிப்பார்கள். எத்தனையோ பேர் சுகாதாரமான நாப்கின்களைக் கண்டுபிடித்து இருப்பார்கள். பல்வேறு காரணங்களால் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பார்கள். அவர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எந்தவொரு தனிமனிதனின் முயற்சியும் பெரும்பாலும் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுவதில்லை. ஊடகங் களின் வெளிச்சம் பட்ட பின்னரே அரசாங்கத்தின் கவனத்திற்கு அது வருகிறது. அப்புறம்தான் அரசு வேண்டிய நடவடிக்கையை எடுக்கிறது.
- ஜே. லூர்து, மதுரை.
ஆர்கானிக்/சாதாரண சானிட்டரி நாப்கின்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை அரசாங்கம் நெறிப்படுத்தி கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். மாதவிடாய்க் குப்பிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம். சுகாதாரமான மாதவிடாய் பற்றிய தெளிவையும் நாப்கின்களுக்கு மாற்றாக குப்பிகள், மறுமுறை பயன்படுத்தும் வகையிலான பஞ்சு, மாதவிடாய் உள்ளாடைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து, சோதனை முறையில் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். மாசுபாடுகளுக்குக் காரணமான பாலி எத்திலீன்/பாலிப்ரோபைலினுக்குப் பதிலாக பாலி லேக்டிக் ஆசிட் போன்ற எளிதில் மக்கும் மூலப்பொருட்களைப் பயண்படுத்தலாம். நாப்கின்களை மறுசுழற்சி செய்வது கடிமென்றாலும், thermal pressure hydrolysis, refuse derived fuel போன்ற முறைகளை நெதர்லாந்து, ஜப்பான் நாடுகள் பயன்படுத்துகின்றன. இதை முன்னோடியாக வைத்து மறுசுழற்சி, மக்கும் மூலப்பொருட்கள், மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றைக் கூட்டு முயற்சியாக்கினால் ‘ஹாப்பி பீரியட்ஸ்’ சாத்தியமே.
- விஜய பிரியங்கா, வேடசந்தூர்.