

ட்விட்டர் நிறுவனத்தை 3.65 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாகப் பொறுப்பு வகித்துவந்த பராக் அகர்வாலைப் பணிநீக்கம் செய்தார். ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதிப் பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் பெண்கள் அதிகம் குறிவைக்கப்பட்டதாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட கரோலினா பெர்னல், வில்லோ ரென் ஆகிய இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் 57 சதவீதப் பெண்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் தாய்மார்கள் அல்லது திருமணமானவர்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்தது மட்டுமன்றி புதிதாகப் பணியில் சேர்க்கப்படுவர்களில் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிஜமாகும் கிரிக்கெட் கனா
உலகின் மிகப் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒவ்வோர் ஆண்டும் அதிகப் பொருட்செலவுடன் பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் தொடரை கரோனாவால்கூடத் தள்ளிவைக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஆடவருக்கான ஐபிஎல் மட்டும் நடந்துவந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கவிருக்கும் இத்தொடரில் 160 முதல் 170 இந்திய வீராங்கனைகளும், 30 முதல் 40 வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆடவருக்கான ஐபிஎல் தொடரால் உள்ளூரைச் சேர்ந்த பல திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததைப் போல மகளிர் ஐபிஎல் தொடரால் ஆர்வமுள்ள பல வீராங்கனைகளுக்கும் இது நல்ல களமாக அமையும் எனத் தெரிகிறது. மகளிருக்கும் ஐபிஎல் நடத்த வேண்டுமென்ற கிரிக்கெட் ரசிகர்களின் குரலுக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது!
டிஜிட்டல் உலகிலும் பாகுபாடு
உலகமெங்கும் இணையப் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் 61 சதவீத ஆண்களிடமும், 31 சதவீதப் பெண்களிடமும் மட்டுமே சொந்தமாகக் கைபேசி இருப்பதாக ‘ஆக்ஸ்ஃபாம் இந்தியா’ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை 2022’ என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த ஆய்வில், இந்தியாவில் டிஜிட்டல் சமத்துவமின்மை நிலவுவது வருந்தத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பெரும்பாலானோர் டிஜிட்டல் பயன்பாட்டை நம்பியிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானோருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இந்த வசதி சென்றடைவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை பெண்களின் கல்வி, வேலை, சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் சென்றடையக்கூடிய டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியாவில் மேம்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.