

நமக்குப் பிடித்த விஷயத்தையே படித்து, அதையே தொழிலாகவும் மாற்றினால் கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை என்கிறார் தர்ஷினி. கோவை பீளமேட்டைச் சேர்ந்த இவர் பிறந்து, வளர்ந்தது திருச்சியில். தர்ஷினி பத்தாம் வகுப்பு படித்தபோதே அவர் உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப தோடு, நகைகள் செய்து அணியத் தொடங்கியிருக்கிறார். பிளஸ் டூ முடித்ததும் பெற்றோர் அவரை பொறியாளராக்க முயற்சி செய்ய, ஃபேஷன் டெக்னாலஜியே தன் விருப்பம் என அடம்பிடித்து அந்தப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.
“அம்மா, அப்பா என்னோட நல்லதுக்குத்தான் சொல்றாங்கன்னு தெரியும். ஆனா எனக்கு ஃபேஷன் டிசைனிங் மேல ஆர்வம் அதிகமா இருந்தது. நமக்கு அதுதான் சரிப்பட்டு வரும்னு தெரிஞ்சது. நான் தேர்ந்தெடுத்த படிப்பு சரியானதுதான்னு அவங்களுக்குத் தெரியப்படுத்தனும். அதற்காகவே, காலேஜ்ல படிக்கும்போதே கைவினைப் பொருள் தயாரிப்பைத் தொடங்கினேன். என்னால முடிந்த அளவு எல்லா நகைகளையும் நேர்த்தியோட செய்யறேன்னு நம்பறேன்” என்று சொல்கிறார் தர்ஷினி.
கல்லூரி படிக்கும் போதே திருமணப் பட்டுப் புடவைகளுக்குப் பொருத்தமான டிசைனில் பிளவுஸ், நகைகள் போன்றவற்றைச் செய்து, பகுதி நேரமாக விற்பனை செய்திருக்கிறார். தனது கல்லூரித் தோழிகளையே வாடிக்கையாளராக மாற்றி, க்வில்லிங், டெரகோட்டா, சில்க் திரெட் நகைகள் செய்து கொடுத்திருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்வரை அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் கைவினைக் கலை பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.
“எனக்குக் கிடைக்கும் வருமானத்தை அப்படியே கிராப்ட் வகுப்புகளில் பங்கேற்பதற்காகச் சேகரிப்பேன். எந்த ஊரில் பயிற்சி நடந்தாலும் அதில் பங்கேற்பேன். காபி பெயின்டிங், கேண்டில் மேக்கிங், ஹோம் மேட் சாக்லேட்கள் இப்படி இன்னும் நிறைய கலைகளைக் கற்றுக்கொண்டேன். இப்போது குழந்தைகளின் காலடித் தடத்தைப் பதிவுசெய்து படிமம் போல செய்துதரும் கலையைச் செய்துவருகிறேன்” என்று சொல்லும் தர்ஷினி, திருமணத்துக்குப் பிறகு தன் கணவர் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.