

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பது இந்தச் சமூகத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். பெண் குழந்தைகளைக் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் அவலத்தையும் பாலியல் தொழிலுக்குத் தள்ளும் கொடுமையையும் நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
2014-ம் ஆண்டைவிட கடத்தப்பட்டு, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 21.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இவ்வாறு கடத்தப்படும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசு வகுத்திருக்கும் வழிமுறைகள் என்ன, சமூகத்தின் பொறுப்பு என்னவென்பதை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், அகல்யா - கடத்தல் 2 என்ற விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கிராமத்துச் சிறுமி அகல்யாவுக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்று கனவு. தெருக்கூத்துக் கலைஞர் பெருமாள்சாமியிடம் கூத்து கற்கிறார். அவரை நடிகையாக்குவதாகச் சொல்லி சில சமூக விரோதிகள் அழைத்துச் செல்கின்றனர். அப்போது அவரிடம் ஒரு முதியவர் தவறாக நடந்துகொள்ள முயல்கிறார். இது குறித்து கூத்து வாத்தியாரிடம் முறையிடுகிறார் அகல்யா. அவர் கண்டுகொள்ளவில்லை. குடிப்பழக்கம், பாலியல் படங்களைத் திரையிட்டுக் காட்டுதல் போன்ற பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகிறார் அகல்யா. அதிலிருந்து தப்பி, கூத்து வாத்தியாருக்கு போன் செய்கிறார். அது தவறுதலாக போலீஸுக்குச் செல்கிறது. அகல்யாவின் நிலையை அறிந்த இன்ஸ்பெக்டர் அவரை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுடன் முடிகிறது படம்.
மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஃபார் சோஷியல் சர்வீசஸ் தொண்டு நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்தக் குறும்படம்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் குறும்படத்தை வெளியிட்டுப் பேசிய நீதிபதி அக்பர் அலி, “ஆதரவில்லாத குழந்தைகள்தான் அதிக அளவில் கடத்தலுக்கும், பாலியல் தொழிலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதற்கு வறுமை, அறியாமை, படிப்பறிவின்மை என்று பல காரணங்கள் சொன்னாலும், பெண் குழந்தைகளைக் காப்பது சமூகத்தின் கடமை” என்றார்.
குறும்படத்துக்கான கருவை உருவாக்கிய இசபெல் ரிச்சர்ட்சன், “மத்திய அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திட்டமான உஜ்வாலாவை எங்கள் நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்திவருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்தல், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்தல், மறுவாழ்வு அளித்தல், குடும்பத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றைச் செய்துவருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இந்தக் குறும்படம் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் தங்களைச் சுற்றிச் சந்தேகப்படும்படியான நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து, தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்லப் போகிறோம்” என்றார்.
பெண் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியிருப்பதை நாம் உணர்ந்தால் அவசர போலீஸ் எண் 100, சைல்டுலைன் எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 1091 ஆகியவற்றுக்குத் தயங்காமல் தகவல் அளிக்க வேண்டும் என்கிறார் உஜ்வாலா திட்ட அலுவலர் அலெக்சாண்டர்.