

நாலு வருசமாய் பிள்ளையே இல்லாமல் இருந்த மங்களத்துக்கு இப்போதுதான் ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கிறது. ஆண் பிள்ளை பிறந்துவிட்டால் அந்தக் காலத்தில் ஊர் பொம்பளைகள் எல்லாம் சேர்ந்து குலவையிடுவார்கள். அதோடு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து கொஞ்சம் பனங்கல்கண்டும் கொடுப்பார்கள். எல்லாருடைய முகத்திலும் சந்தோசம் பொங்கும். சிரித்துப் பேசி மகிழ்வார்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டால் எந்தச் சந்தோஷமும் கிடையாது. ஆமா அவ பொம்பளப்புள்ள பெத்திருக்காளாம், அவள என்னத்தப்போயி பாக்க என்று கொஞ்சம்கூடச் சந்தோஷமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு போவார்கள்.
மங்களத்துக்கு நாலு வருசமாய் பிள்ளை இல்லையென்று அவள் மாமியார் பாப்பம்மாளுக்குக் கோபம். இப்போது பேரன் பிறந்துவிட்டான் என்று சந்தோசம் பொறுக்க முடியவில்லை. அப்போது பிள்ளை பெற்றவர்களைப் பார்க்கப் போக வேண்டுமென்றால் ஒரு படி நெல்லரிசி, ஐந்து வட்டு கருப்பட்டி, வெள்ளப்பூண்டிலேயே ‘ஒரு பூடு’ என்று இருக்கிறது. அந்தப் பூண்டு, கடைமருந்து, ஒரு கோழி கொண்டு போய் கொடுத்துப் பார்த்துவிட்டு வர வேண்டும். இப்போதும் சில கிராமங்களில் அப்படித்தான்.
பக்கத்து கிராமம் என்பதுடன் சம்மந்தி வீட்டில் சடவாக இருந்த பாப்பம்மா தன்னுடன் நாலைந்து பேரைக் கூப்பிட்டுக்கொண்டு பேரனைப் பார்க்கப் புறப்பட்டாள். அப்போதெல்லாம் காட்டுப்பாதை வழிதான் வர வேண்டும். பாப்பம்மாள் நார்ப் பெட்டியில் அரிசி, கருப்பட்டி, பூடு, கடைமருந்தையெல்லாம் போட்டுக்கொண்டு தலையில் வைத்துக்கொண்டாள். முட்டைக் கோழியின் கால்களை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு கூட வருபவர்களோடு ரொம்ப சுவாரசியமாகப் பேசிக்கொண்டு வந்தாள். இதில் அவ்வப்போது மடியிலிருக்கும் வெற்றிலை பாக்கை ஒருவருக்கொருவர் எடுத்துக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் ஊர் பொறணியைப் பேசியவாறு வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் நடுக்காட்டுப் பாதையில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நரி பாப்பம்மாள் கையிலிருந்த கோழியைப் பிடுங்கிக்கொண்டு ஓட பாப்பம்மாள் திடுக்கிட்டுப்போனாள்.
பேரன், பேத்தி பிறக்காத குறையில நாலு வருசமா சண்டையா கிடக்கிற சம்மந்தியம்மா வீட்டுலபோயி, ‘கையில ஒரு முட்டக்கோழியும் பிடிச்சிட்டு வந்தேன். வார வழியில ஒரு நரி வந்து கோழியப் புடிச்சிட்டு போயிருச்சி’ன்னு சொன்னா நம்பமாண்டாகளேன்னு நினைச்சி பதறிப்போன பாப்பம்மா தலையிலிருந்த பொட்டிய கீழே போட்டுவிட்டு கூட வந்தவங்கள, ‘அடியே வாங்கடி அந்த நரியச் சுத்தி வளைப்போம். இன்னைக்கு என் கோழியவும் விடக் கூடாது அந்த நரியையும் விடக் கூடாது’ன்னு சேலய மடிச்சிக்கிட்டு ஓடுனா. இவகூடவே வந்த நாலு பேரும் ஓடுதாக.
அப்போதெல்லாம் இந்தச் சீமைக் கருவேல மரங்கள் கிடையாது. நாட்டுக் கருவேல மரமும், பொத்தக்கள்ளியும், சின்ன சின்ன புதருகளும்தான். அது காட்டுப் பாதையாயிருந்தாலும், அங்கங்க ஒத்தையடிப் பாதை போகும். இந்த நரிக்கு அதுக்கு மேல போக இடமில்லாம பொத்தக்கள்ளியில கோழிய கவ்வுனமான பதுங்கியிருக்கு. பாப்பம்மா அந்த நரியைப் பார்த்துட்டா. அவளுக்கு வந்த கோபத்தில அங்கன கிடந்த கட்டய தூக்கி நரி குறுக்குல எறிஞ்சிருக்கா. நரி வாயில இருந்த கோழிய போட்டுட்டு அங்கனயே படுத்திருச்சாம். கோழியும் நரியுமா பாப்பம்மா பேரனைப் பார்க்க வர அவளோட சம்மந்திகாரி ஓடிப்போயி அவளை அணைச்சிக்கிட்டாளாம்.