பழமைக்குத் திரும்புவதுதான் தீர்வா?

பழமைக்குத் திரும்புவதுதான் தீர்வா?
Updated on
3 min read

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களில் இருக்கும் வேதிப் பொருட்கள் குறித்துப் பல காலமாகப் பேசிவந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ‘toxicslink' என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வு அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் முன்னணி நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்களில் பெண்களின் உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆர்கானிக் நாப்கின் எனப்படும் இயற்கை நாப்கின்கள், செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் நாப்கின்கள் என இருவகையையும் உள்ளடக்கிய ஆய்வு இது. இதற்குப் பத்து நிறுவனங்களின் நாப்கின்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நாப்கின்களில் தாலேட்டுகள், எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்கள் ஆகிய இரண்டும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இவை இரண்டும் நம் உடலில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவவை.

உடலுக்குள் ஊடுருவும் அபாயம்

நாப்கின்களில் சேர்க்கப்படும் இந்த வேதிப் பொருட்கள், பிறப்புறுப்புத் தசைகளின் வழியாக மிக எளிதாக நம் உடலுக்குள் நுழையக்கூடிய சாத்தியம் அதிகம். தாலேட்டுகள் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுபவை. மென்மை, இளகுத்தன்மை, எதனுடனும் ஒட்டாத தன்மை ஆகிய வற்றுக்காக இவை நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தாலேட்டுகள் நம் உடலுக்குள் அதிக அளவில் சேரும்போது எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பை தொடர்பான சிக்கல், மலட்டுத்தன்மை, கருவுறுதலில் பிரச்சினை, குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். நாப்கின்களில் நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்கள், தோல் அழற்சி, ரத்தசோகை, மூளைச் செயல்பாட்டில் பாதிப்பு, ஈரல் - சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை.

பெண்கள் சராசரியாக 11 வயதில் தொடங்கி 50களின் இறுதிவரைக்கும் நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலப் பயன்பாட்டில் இந்த வேதிப்பொருட்கள் நிச்சயம் கணிசமான அளவு அவர்களது உடலுக்குள் ஊடுருவக்கூடும்.

இவ்வளவு பாதிப்பு இருக்கிற நாப்கின்களுக்குப் பதில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ‘ஆர்கானிக்’ நாப்கின்களைப் பயன்படுத்தலாமே என்று தோன்றலாம். ஆனால், செயற்கை முறையில் தயாராகும் நாப்கின் களைவிட ஆர்கானிக் நாப்கின்கள் என்கிற போர்வையில் விற்பனையாகிறவற்றில்தான் அதிக அளவில் தாலேட்டுகள் இருக்கின்றன என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இப்படியொரு சூழலில் நம் வீடுகள்தோறும் நிறைந்திருக்கும் பெண்களின் உடல் நலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய நாப்கின்களுக்கு நாம் என்ன மாற்று வைத்திருக்கிறோம்? ஒன்று, ‘பழமைக்குத் திரும்புவோம்’ என்று மீண்டும் துணியைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள் அல்லது மாதவிடாய்க் குப்பிகளைப் பரிந்துரைக் கிறார்கள். முன்னதைக் கையாளுவதில் நடைமுறைச் சிக்கல் என்றால் பின்னதோ அனைத்துத் தரப்புக்குமானதாக இன்னும் மாறவில்லை. உடலுக்குள் பொருத்திக் கொள்ளும் வகையிலான டாம்பான்களைச் சிலர் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அவற்றிலும் டயாக்ஸின் போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நடைமுறைக்கு உதவாதவை

இந்தியாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 50 சதவீதத்தினர் இப்போதும் துணிகளைத்தான் மாதவிடாயின்போது பயன்படுத்துவதாக ‘தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5’ தெரிவிக்கிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு, திறந்தவெளிக் கழிப்பிடம் போன்றவற்றால் அவதியுறும் பெண்களின் நிலை மாதவிடாய் நாட்களில் சொல்லொனாத் துயரமாகிவிடுகிறது. சுகாதார மற்ற துணி/நாப்கினைப் பயன்படுத்துவது, நீண்ட நேரத்துக்கு அவற்றை மாற்றாமல் இருப்பது போன்றவற்றால் பிறப்புறுப்பில் எரிச்சல், தடிப்பு, நோய்த்தொற்று போன்றவை தொடங்கி கருப்பை வாய்ப் புற்றுநோய் வரையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். இப்படியிருக்கும் பெண்களை, நாப்கின்களில் இருக்கும் வேதிப்பொருட்களைக் காரணம்காட்டி அவற்றின் பக்கமே வர விடாமல் தடுப்பதோடு, நாப்கின்களைப் பயன்படுத்துவோரை மீண்டும் துணிகளை நோக்கித் தள்ளுகிறோம்.

பெண்களுக்கு இருக்கிற வேலைகளுக்கு நடுவில் மாதவிடாயின்போது பயன்படுத்தும் துணிகளைத் துவைத்து (அதை யாருக்கும் தெரியாமல் துவைக்க வேண்டும் என்கிற கொள்கையுடையோரும் உண்டு), வெயிலில் காயவைத்து மீண்டும் பயன்படுத்துவதற்குள் பலருக்கும் உயிர்போய்விடும். உள்ளாடைகளின் சுத்தம் குறித்தே பெரும்பாலான பெண்கள் இன்னும் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு பெறாத நிலையில் மாதவிடாய்த் துணியை அவர்கள் எப்படிக் கையாளுவார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான துணி நாப்கின்கள் இப்போது பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கின்றன. ஆனால், இவற்றுக்கும் துணிக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. பள்ளி, அலுவலகம் என்று வெளியே சென்றுவிட்டால் இவற்றை எப்படி மாற்றுவது அல்லது அப்புறப்படுத்துவது? அதற்கென இருக்கும் உறையில் போட்டு, வீட்டுக்கு வந்து துவைத்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா?

தரக் கட்டுப்பாடு அவசியம்

இந்த ஆய்வு முடிவு, நாப்கின்களுக்கு மாற்று அல்லது வேதிப்பொருட்கள் இல்லாத நாப்கின்கள் ஆகிய இரண்டு தீர்வுகளில் ஒன்றை நோக்கி உடனடியாக நாம் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. நாப்கின்களின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கவும் நறுமணமூட்டுவதற்கும்தான் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை விடுத்துப் பருத்தித் துணிகளைப் பயன்படுத்தித் தரமான நாப்கின்களைத் தயாரிக்க முடியும். இந்த வகை நாப்கின்கள் சூழலுக்கு உகந்தவையாக இருக்கும். காரணம் ஆண்டுதோறும் மலையளவுக்குக் குவியும் நாப்கின் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால், இப்படி இயற்கைக்கு உகந்த வகையில் நாப்கின்கள் தயாரிக்க அதிக செலவாகும். நாப்கின்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்த தனியாக எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. அதனாலேயே பெரும்பாலான நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் நாப்கின்களில் ஒரு கிலோவுக்குப் பத்து மைக்ரோ கிராமில் தொடங்கி 19,600 மைக்ரோகிராம் அளவுக்கு தாலேட்டுகள் இருப்பதாக டெல்லி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. நாப்கின்களைச் சந்தைப் பொருளாக மட்டும் பார்ப்பதுதான் அவற்றில் கணக்கு வழக்கு இல்லாமல் வேதிப்பொருட்களைச் சேர்க்க வைக்கிறது. நாப்கின்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறித்து அரசு முழுமையாக ஆய்வு செய்து அவற்றுக்குக் கடுமையான தரக்கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும்.

நாப்கின்களுக்கு மாற்றாகச் சொல்லப்படும் துணி நாப்கின்களை எளிதாகக் கையாளும்விதத்தில் வடிவமைக்க வேண்டும். மாதவிடாய்க் குப்பிகளை 0.3 சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்துவதாக ‘தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5’ தெரிவிக்கிறது. அதன் பயன்பாட்டையும் பரவலாக்க வேண்டும். மாதவிடாய்ச் சுகாதாரம் என்றால் என்னவென்றே அறியாத இந்தியப் பெண்கள் ஏராளம். அதனால், கிராமப்புறப் பெண்களையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும். பெண்களின் உடல்நலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய விஷயங்களிலாவது முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் அமர்த்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது ஆண்கள் மட்டுமே விவாதித்துக் கடக்கிற பத்தோடு பதினொன்றாகக் குறுகிவிடும். நாப்கின்களைப் பெண்கள் மட்டுமே பயன்படுத்துவதாலேயே அது ‘பெண்கள் விஷயம்’ என்றாகிவிடாது. அது சமூகத்தின் பிரச்சினையும்கூட. எனவே, அதைச் சீர்செய்ய வேண்டியதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in