

மும்பையின் சாலையில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துகொண்டி ருந்த தென்கொரியப் பெண்ணி டம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த அந்த யூடியூபர் நவம்பர் 30ஆம் தேதி இரவு லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருக்க, அந்தப் பக்கமாக வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சென்று பேசுகிறார். அவரைத் தன் இருசக்கர வாகனத்தில் வரும்படி அழைக்கிறார். அந்தப் பெண் மறுக்க, அவரது கையைப் பிடித்து இழுத்து வற்புறுத்துகிறார். பிறகு அந்தப் பெண்ணை முத்தமிட முயல்கிறார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோவை ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர அது வைரலானது. அதைத் தொடர்ந்து மும்பை கார் (வடக்கு) பகுதி காவல்துறையினர், தென்கொரியப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மொபின் சந்த் முகமது ஷேக் (19), முகமது நஜிப் அன்சாரி (20) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தென்கொரிய யூடியூபர், ‘அந்த இளைஞர்களிடம் நான்தான் வலிந்து பேசி உரையாடலை நீட்டித்தேன். அதுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்துகொள்ளும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் மனநிலையைத்தான் இது காட்டுகிறது. மும்பை போன்ற நகரத்தில் பலர் பயணிக்கும் சாலையில் வெளிநாட்டுப் பெண் மீது நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் சீண்டல் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
தலைமைப் பொறுப்பில் இடமில்லையா?
ஆக்ஸிஸ் வங்கியின் ‘பர்கண்டி பிரைவேட் ஹுரன் இந்தியா’ நிறுவனம், இந்தியாவில் பெண்களை அதிகமாகப் பணியில் அமர்த்தியிருக்கும் பத்து பெருநிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதில் 2.1 லட்சம் பெண்களுடன் முன்னிலை வகிக்கிறது டாடா கன்சல்டன்சி நிறுவனம். ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 35 சதவீதம். இதற்கு அடுத்தடுத்த இடங்களை முறையே இன்ஃபோசிஸ் (40 சதவீதம்), விப்ரோ (36), ஹெச்.சி.எல் (28), ரிலையன்ஸ் (18) நிறுவனங்கள் பிடித்துள்ளன. சதவீதத்தின் அடிப்படையில் அல்லாமல் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில் அமைந்த பட்டியல் இது. பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் ‘பேஜ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 74 சதவீதத்தினர் பெண்கள். ‘ஹுரன் இந்தியா’ வெளியிட்டிருக்கும் சந்தை மதிப்பு மிக்க 500 இந்திய நிறுவனங்களின் பட்டியலில், நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் 16 சதவீதம். அலுவலகப் பணிகளில் பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்கள்கூட, நிர்வாகக் குழு உறுப்பினர், நிர்வாக இயக்குநர் போன்ற தலைமைப் பொறுப்புகளில் பெண்களை நியமிப்பதில்லை என்பதைத்தான் இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.
திருநங்கையரின் வரலாற்றுப் பெருமிதம்
தெலங்கானாவைச் சேர்ந்த திருநங்கைகள் ரூத், பிராச்சி ஆகிய இருவரும் உஸ்மானியா அரசு பொது மருத்துவ மனையில் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநங்கையர் இருவர் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்படுவது தெலங்கானா வரலாற்றில் இதுவே முதல் முறை. இருவரும் தங்களைத் திருநங்கையராக வெளிப்படுத்திக்கொண்டபோது சமூக விலக்கத் தையும் புறக்கணிப்பையும் சந்தித்தனர். இவர்களது பாலினம், நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அரசுப் பணி, மாற்றத்துக்கான வாய்ப்பாக அமையும். இவர்கள் இருவரும் மருத்துவ உயர் கல்விக்கான நீட் தேர்வை எழுதியுள்ளனர். திருநங்கையரை மூன்றாம் பாலினமாகக் கருதி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2014இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் தங்களைப் பெண்கள் பிரிவின்கீழ்தான் தேர்வு எழுத அனுமதித்ததாக இவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. அதில் திருநங்கையரையும் இணைத்துக் கொள்வதுதான் நியாயம்.
முதல் பெண் நடுவர்
கோஸ்டாரிகாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் தலைமை நடுவராகச் செயல்பட்டதன்மூலம் ஃபிபா ஆடவர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் முதல் பெண் நடுவர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்டெஃபனி ஃப்ரபார்ட். இவருடன் பிரேசிலின் நியூஸா பேக், ஜெர்மனியின் கேரன் தியாஸ் மதினா ஆகிய இருவரும் நடுவர்களாகச் செயல்பட்டனர். உலகக் கோப்பைப் போட்டியில் ஆண்கள் அணியைக் கண்காணித்த முதல் பெண் நடுவர் குழு இது. பிரான்ஸைச் சேர்ந்த ஃப்ரபார்ட், 2021இல் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட்ட முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றவர்.