

நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி?
- எம். கலை, திருச்சி.
ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை.
துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதில் சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த பருப்பு கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரைத்துவைத்தப் பொடி, சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கிவையுங்கள். மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் தயார். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவை கூடும். கூடுதல் வாசனைக்கு முருங்கைக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
எனக்குக் கடந்த ஆறு மாதங்களாக மாதவிடாய் சீராக இல்லை. குறைவாகவும், தேதி மாறியும் வருகிறது. இதற்கு ரத்தசோகை மட்டும்தான் காரணமா?
- கிருபா, தேவிப்பட்டினம்.
சார்மிளா, மகப்பேறு மருத்துவர், திருச்சி.
18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருந்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதலில் உயரம், எடை உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். சிலருக்கு உடல் எடை காரணமாகவும் மாதவிடாய் கோளாறு ஏற்படலாம். உடல் எடை, உயரம் சீராக இருந்து இந்தப் பிரச்சினை ஏற்பட்டால், அவர்களுக்கு ரத்தசோகை இருக்கலாம் என்பது தவறான எண்ணம். அவர்களுக்கு தைராய்டு அளவில் மாறுபாடு இருக்கக்கூடும் என்பதால் ரத்தப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
இந்தக் காலப் பெண்களுக்குக் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. சிலருக்கு அதிக மன அழுத்தம்கூட காரணமாக அமையலாம். டென்ஷனைக் குறையுங்கள். ஆறு மாதங்களாகத் தொடர் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in