தினமும் மனதைக் கவனி - 6: நீங்கள் ரப்பர் பந்தா, மரத்துண்டா?

தினமும் மனதைக் கவனி - 6: நீங்கள் ரப்பர் பந்தா, மரத்துண்டா?
Updated on
2 min read

சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை இளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல; எல்லா வயதினருக்கும் பொருந்தும். வாழ்க்கையில் வெற்றியடைய, அறிவுத்திறன் (Intelligence Quotient - I.Q) மட்டும் போதாது; உணர்வுத்திறனும் (Emotional Quotient - E.Q) தேவை என்று கருதப்படுகிறது. நீங்கள் உணர்வுகளை வென்று மீள்பவரா அல்லது இயலாதவரா என்பதைக் கணிப்பதுதான் உணர்வுத்திறன்.

பெரிய படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர், நல்ல வேலையில் பிரகாசிக்காமல் போவதையும், சுமாராகப் படித்தவர் வாழ்க்கை யில் வெகு உயரத்தை எட்டுவதையும் நாம் பார்க்கிறோம். உணர்வுத்திறன் நன்றாக இருப்ப வர்கள் வாழ்க்கைக் கல்வியை மாணவப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள். இவர் களை மீள் தன்மையுடையவர்கள் என்போம். ரப்பர் பந்து மாதிரி கீழே விழுந்தால் அதே விசையுடன் இவர்கள் எழுந்துவிடுவார்கள். உணர்வுகளால் ஒரு ரோலர் கோஸ்டரில் மாட்டிக்கொள்பவர்கள், மீளும் தன்மை இல்லாதவர்கள். இவர்கள் ஒரு மரத்துண்டு மாதிரி, கீழே விழுந்தால் உதவியின்றி எழும்ப முடியாது. இரண்டாவது ரகத்தினர் தளர்ந்துபோக வேண்டாம். ஒரு உளவியல் ஆற்றாளர் அல்லது வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் உதவியோடு தன்னை ரப்பர் பந்தாகத் தயார் செய்துகொள்ள முடியும்.

பெண்பிள்ளைகளுக்கு உணர்வுவயப்படும் குணத்தால் பாதிப்புகள் அதிகம்! வாழ்க்கைக் கல்வியின் பயிற்சியை விடலைப் பருவத்திலேயே ஆரம்பித்தால், பல பாதிப்புகளைத் தடுக்க முடியும். கல்லூரி மாணவிகளோ இளமை, அழகு, அளவிலா ஆற்றல், சக்தி, அலைமோதும் உணர்வுகள் இவற்றின் கலவை. காட்டாறுபோல் ஓடும் இளமையின் வேகத்துக்கும் சுதந்திரத்துக்கும் கரையும் எல்லைக்கோடும் அவசியம். இதைத் தான் வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுக்கிறது.

பெண்ணின் தேவை இரண்டு

ஒரு பெண்ணுக்கு (ஆணுக்கும்) உணர்வுப்பூர்வமான தேவைகள் இரண்டு:

1. என்மீது அன்பு செலுத்த, கரிசனம் காட்ட ஒருவர் வேண்டும். 2. என்னைத் தன் வாழ்வின் முக்கிய அங்கமாக அவர் கருதவேண்டும். இவை ஒரு துணையைத் தேடவைக்கின்றன. காதல் அனுபவம் இனிக்கிறதா? ரசித்திடுங்கள்; ஆனால் எதுவரை போகலாம் என்கிற எல்லையை நீங்கள்தான் வரையறுக்க வேண்டும். நீங்கள் ரப்பர் பந்தாக இருந்தால் காதலர் எல்லைமீற வற்புறுத்தினாலும், பயமுறுத்தினாலும் அசைந்து கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஏற்றதல்லாத உறவை அகற்றிவிடுவீர்கள். மரத்துண்டாக இருந்தால் அவரை விடவும் முடியாமல், அவருக்கு இணங்கவும் முடியாமல் தவிப்பீர்கள். அவர் உங்களை விட்டுப்போய் விட்டாலோ, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் என்று மனம் அலைபாயும்.

கண்ணை மறைக்கும் காதல்

உடைமை (possessiveness): பொஸசிவ்வாக இருப்பவருக்குக் குடும்பத்தில் பாசம் கிடைக்காததால், அன்புப் பசியினால் ஒரு பாதுகாப்பின்மை இருக்கும். இதமான அரவணைப்பு உங்களிடம் கிடைக்க, நீங்கள் கையைவிட்டுப் போய்விடாமல் இருக்க உங்களை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறார். மொபைல் மூலமாக உங்கள் நடவடிக்கை களைக் கண்காணிப்பார். உங்களை அது மூச்சுத் திணற வைக்கும். திருமணமானால் இது சரியாகிவிடும் என்று கணக்குப் போட்டுவிடாதீர்கள். அநேகமாக பொஸசிவ் மனப்பான்மை மணமானபின் அதிகரித்துத்தான் நான் பார்த்திருக்கிறேன்!

கட்டுப்பாடு (control): உங்கள் காதலருக்கு உங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பது, தனது ஆதிக்க நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளத் தேவையாக இருக்கிறது. ஆரம்பத்தில் பாதுகாப்பாகத் தோன்றிய கட்டுப்பாடு, நாளடைவில் அதிகமாகி, நீங்கள் உடுத்தும் உடையிலிருந்து எல்லாவற்றிலும் ஊடுருவும் போது, உங்களுடைய அடையாளத்தையே தொலைத்துவிட்டு அவருக்குப் பயந்து வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் கனவுகள், எதிர்காலம், கல்வி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும். அவரை விடவும் முடியாமல், கூட இருக்கவும் முடியாமல் தவிப்பீர்கள்.

காதல் தொடரும்...

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in