இது பெண்களின் மாதம்

இது பெண்களின் மாதம்
Updated on
3 min read

அவன் ஒரு அசுரன். சிறந்த சிவ பக்தன். ஆயினும் அவனை அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஈசனுக்கு. "அசுரனாயினும் பக்தியும் ஞானமும் கொண்ட இவனது பெயர் தட்சிணாயணத் துவக்கத்தில் நிலைக்கட்டும்" என்றாள் பார்வதி தேவி. "அப்படியே ஆகட்டும். அச்சமயம் உனது சக்தி பெருகட்டும். அப்போது உன்னில் நான் ஐக்கியமாவேன்" என்றான் ஈசன். அந்த அசுரனின் பெயர் ஆடி. அவனது பெயர்தான் தட்சிணாயணம் துவங்கும் மாதத்துக்கு வைக்கப்பட்டது. அது அம்பிகையின் மாதம். அவளை வழிபடும் பெண்களுக்கும் சக்தி பெருகும் மாதம். ஒவ்வொரு பெண்ணையும் சக்தியாக நினைத்து வழிபடும் மாதம். ஆடி வந்தால் அடுத்து பண்டிகைகளும் ஒவ்வொன்றாக வந்துவிடும்.

மழைக் காலத்தின் துவக்கமான ஆடி மாத தட்சிணாயண புண்ய காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசைக்குப் பாதை மாறுகிறான். அப்போது சூரியனின் கதிர்களில் சூட்சுமமான சக்தி வெளிப்படுகிறது. இது பயிர்களுக்கு நன்மை பயக்கிறது. சித்திரையில் அறுவடை முடித்த விவசாயிகள், சேமித்த தானியங்கள் தீரும் நிலையில் மீண்டும் ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்தார்கள். இந்த தட்சிணயண சூரியக் கதிரின் ரகசியம் அறிந்துதான், திருச்சிக்கு அருகில் உள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் மூலவர் மீது சூரியக் கதிர்கள் படும் வகையில் சூரியனே இறைவனைத் தனது ஒளியால் பூஜிக்கிறார் எனச் சொல்லும்படி கோயிலைக் கட்டியிருப்பது நமது பண்டைய கட்டிடக் கலையின் சிறப்பு என்றும் சொல்லலாம். இதே போல் சூரிய ஒளி மூலவர் மீது படும் வகையில் பல கோயில்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

மழைக் காலத்தின் ஆரம்பம் ஆனதால் ஆற்றில் புது வெள்ளம் பொங்கிப் பெருகுகிறது. புது வெள்ளம் அழுக்குகளைச் சுமந்து வரும், அதில் குளிப்பது நல்லதல்ல என்பதால், ஆற்றுக்குத் தீட்டு என்ற வார்த்தை அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. நான்காம் நாளுக்குப் பிறகு குளிக்க அனுமதித்திருக்கிறார்கள். ஆடிப் பதினெட்டு மிக உற்சாகமாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு இது தெரியும். வீர நாராயண ஏரிக்கரையில் ஆடிப் பெருக்குக் காட்சிகள் கல்கியின் வர்ணனையில் மிளிரும். ஆடிப் பதினெட்டும் காவிரியும் பிரிக்க இயலாதது. நதிகள் போற்றப்படும் மாதம் இது. பெண்கள் முளைபாலிகைகள் வளர்த்துப் பூஜித்து நதியில் கரைப்பது காவிரிக்குச் செலுத்தும் நன்றி.

கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி வழிபடுவதும், திருமணமானவர்கள் நல்ல கணவன் கிடைத்ததற்கு நன்றி சொல்லி வழிபடுவதும் காவிரிக்கரையில் காலங்காலமாய் நடப்பது இந்த ஆடி மாதத்தில்தான். ஆடிச் செவ்வாய் தேடிக் குளி என்பார்கள். அன்று பெண்கள் எண்ணெய்க் குளியல் செய்வது உத்தமம் எனப்படுகிறது.

அம்பிகை கருக்கொண்டிருப்பதாகக் கருதப்படும் மாதம் ஆடி மாதம்தான். அகிலம் காக்கும் அவளுக்கு, ஆற்றங்கரைகளில் தேங்காய், பழம், மங்கலப் பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள். அவளது மசக்கைக்கு சித்ரான்னங்கள் சமைத்து, அவளுக்கும் படைத்துவிட்டுத் தானும் ஆற்றங்கரையில் அமர்ந்து உண்டு மகிழ்வார்கள்.

ஆடிப் பூரத்தன்று அம்பிகையின் வயிற்றில் முளைகட்டின பயிறைத் துணியில் சுற்றி அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, வம்ச விருத்திக்காக வேண்டிக்கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ஏன் முளைப் பயிறு? அங்கேதான் நம் முன்னோர்களின் அறிவும் ஆற்றலும் நம்மை வியக்க வைக்கிறது. முளை விட்ட ஒரு சிறு பயறின் தோற்றமும், மனித உயிரணுவின் தோற்றமும் ஒன்றாக இருப்பதுதான் வியப்புக்குக் காரணம். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் இருப்பதை இது நிரூபிக்கிறது. கர்ப்பமான அம்பிகைக்கு வளைகாப்பு செய்து வளையல்கள் இடுவதும் ஆடிப் பூரத்தில்தான்.

சூரியன், சந்திரனின் வீடான கடக ராசியிலும், சந்திரன், சூரியனின் வீடான சிம்மத்திலும் பரிவர்த்தனை செய்த சமயத்தில், சுக்லபட்ச (வளர்பிறை) சதுர்த்தியன்று துளசி வனமொன்றில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்ததும் புனிதமான ஒரு ஆடிப் பூரத்தன்றுதான். எனவே, ஆடிமாதப் பூரம் ஆண்டாளுக்கும் விசேஷமானது. ஆடியில் வரும் வளர்பிறை துவாதசி துளசி பூஜைக்கும் விசேஷமானது. ரங்கத்தில் ஆடிப் பூர விழா பிரசித்தி. ரங்கநாதனே காவிரிக் கரைக்கு எழுந்தருளி வந்து காவிரித் தாய்க்கு மஞ்சள், குங்குமம், கருகமணி, ரவிக்கை, பழம், தாம்பூலம், ஆகியவற்றை வைத்து பூஜை செய்து காவிரி நதியில் சமர்ப்பித்துவிட்டுச் செல்கிறார். அன்று மாலையில் ஆண்டாள் அணிந்த மாலையும் அணிகிறார் என்பது சிறப்பு.

ஜமதக்னி முனிவரைக் கார்த்தவீர்யார்ச்சுனன் பிள்ளைகள் கொன்றபோது அவரது மனைவி ரேணுகாதேவி தீ வளர்த்து உயிரை விட முயல, இந்திரன் மழை பெய்வித்துத் தீயை அணைத்தான். ஆயினும், அவளது உடல் வெப்பத்தால் கொப்புளிக்க, ஆடைகள் எரிந்த நிலையில் அவள் வேப்பிலையால் ஆடை அணிந்துகொண்டாள். அவள் உணவுக்காகக் அக்கம்பக்கத்து வீடுகளில் கையேந்தியபோது அவள் உடல் குளிர்ச்சியடையும் விதமாக அரிசி, வெல்லம் , இளநீர், பானகம் ஆகியவை தரப்பட்டன. சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்க அவளே பின்னர் மாரியம்மனாக பூமியில் வாசம் கொண்டு மக்களுக்கு ஏற்பட்ட அம்மை நோய்க்கு மருந்தானாள். அவள் உபயோகித்த பொருள்களைக் கொண்டுதான் இன்றளவும் ஆடிக் கூழ் ஊற்றும் வேண்டுதல் நடக்கிறது. யோசித்துப் பார்த்தால், ஆடி மாதம் பருவ நிலை மாறுவதால், ஏற்படும் பிணிகளுக்கு வேப்பிலையும் இளநீரும், கூழும், பானகமும் சிறந்த மருந்தாக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

பூமிதேவி அம்பிகையாய் அவதரித்த இதே ஆடி மாதத்தில்தான் ஹயக்ரீவரும் அவதரித்திருக்கிறார். மதுகைடபர்களால், கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களைக் குதிரை முகத்தோடு கடலுக்கடியில் சென்று அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டுக் கொண்டுவந்த ஹயக்ரீவரின் ரௌத்ரம் லக்ஷ்மி தேவியின் மடியில் அமர்ந்த பின்தான் தணிந்தது என்கின்றன புராணங்கள். எனவே, ஆடி மாதம் என்பது படிக்கிற மாணவர்களுக்கும் உகந்த மாதம்தான். ஹயக்ரீவர் வழிபாடும் இம்மாதத்தில் நடக்கிறது. அதே போல் காதில் சக்கரம் அணிந்து திருவானைக்காவலில் கோயில் கொண்டுள்ள அகிலாண்டேஸ்வரி மாணவியாக அமர, அவளுக்கு சிவன் உபதேசம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். ஆடி வெள்ளியில் இங்கு செய்யப்படும் வித்யா பூஜையன்று மாணவர்கள் கல்வி வளம்பெற வேண்டிக்கொள்வது வழக்கத்தில் உள்ளது.

‘தி இந்து’ ஆடி மலரில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in