

அந்தக் காலத்தில் வயலுகளுக் கெல்லாம் இயற்கை உரம்தான் போடுவார்கள். அதனால் முள் செடியை மட்டும் விட்டுவிட்டு மற்ற செடிகளையெல்லாம் பிடுங்கி தொளி உழவில் போட்டு மிதித்துவிடுவார்கள். தண்ணீர் உழவாக நாலைந்து உழவு ஆழ அடித்ததற்கும் நெகிழ்ந்துபோய் கிடக்கும் வண்டல் மண்ணிற்கும் இந்தக் குலைகளைப் போட்டு மிதித்தால் இந்தக் குலைகளெல்லாம் தண்ணீருக்குள் அமுங்கிப்போய்விடும். வயலின் மேற்பரப்பில் வெறும் தெளிந்த தண்ணீர்தான் தென்படும். நாற்றை நடுவதற்கும் லேசாக இருக்கும்.
அப்போது ஒருநாள் முழுக்க வேலை செய்தால் எட்டணாதான் (ஐம்பது பைசா) கூலி. ஆனால், இந்தக் கொளைக்கட்டு போடும் காலத்தில் ஒரு கட்டுக்கு ஆறணா என்று கொடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு பெண்ணும் நடுச்சாமத்துக்கே எழுந்து சாணியைக் கரைத்து வாசலை மட்டும் தெளித்துவிட்டு ஓடுவார்கள். அதுவும்கூட சாணியைக் கரைத்து வாசலைத் தெளிக்காவிட்டால் ‘கிருமிகள்’ பரவிவிடுமாம். அதனால் வாசலைத் தெளித்துவிட்டு இடுப்பில் அரிவாளை சொருகிக்கொண்டு ஓடுவார்கள். பிடுங்க முடியாத செடிகளை அறுப்பதற்காகத்தான் அந்த அரிவாள்.
ஒவ்வொருத்தியும் எப்படியும் இன்னைக்கு ஆறு கட்டு, ஏழு கட்டு போட்டுவிட வேண்டும், கையில் இரண்டு ரூபாய் வரையும் சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்கிற வேகத்தில் ஓடுவார்கள். சில வயல்காரர்கள் தங்கள் வயலுக்கென்றே தண்ணீர் பாய்ச்சி மெனக்கெட்டு குலைகளை வளர்த்து வைத்திருப்பார்கள். இங்கே குலைப்பிடுங்கப் போகிறவர்கள் இருட்டில் போய் அந்தக் குலையை அறுத்துவிடுவார்கள். பிஞ்சைக்காரர்கள் அதைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான் மானங்கெட்டு ஊர் கூட்டம் வரை போய்விடுவதும் உண்டு.
பிடுங்கிய குலையை அப்படியே கொண்டுபோய் போடவும் முடியாது. அடித்தட்டு என்று அடியில் விரித்து குருளை என்று அடுக்கி, கொங்கை என்று பக்கவாட்டில் விரித்துக் கட்டுகளை அழகுபடுத்தி கட்டிக்கொண்டு போக வேண்டும். இப்படித்தான் ஒரு நாள் பத்துப் பொம்பளைகள் குலை பிடுங்கப் போயிருக்கி றார்கள். அப்போதெல்லாம் பெரும் சாலைகளில் உயர் அதிகாரிகள் எப்போதாவது குதிரையில் போவதுண்டாம். அவர் போகும்போதும் இவர்கள் கூனி, குறுகி ஒதுங்கி நிற்பார்களாம்.
அப்படி அன்றும் குலை பிடுங்கியிருக்கி றார்கள். அன்றும் ஓர் அதிகாரி குதிரையில் வந்திருக்கிறார். இவர்கள் வழக்கம்போல் ஒதுங்கி நின்றுவிட்டு குதிரை போனபிறகு குலைக்குப் போன ஆட்களை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். ஒருத்தியை மட்டும் காணோம். அவள் பெயர் அழகுராக்கு. உடனே இவர்கள் அழகுராக்கைத்தான் காணோமென்று ஏ… அழகுராக்கு, ஏத்தா அழகுராக்கு பொக்குன்னு (சீக்கிரம்) வா நேரமாச்சி போவணுமில்ல என்று கூப்பிட்டிருக்கிறார்கள். இவர்கள் அழகுராக்கு என்று கூப்பிட்டதும் குதிரையில்போன அதிகாரி திரும்பி வந்திருக்கிறார்.
“என்ன அழகுராக்குன்னு கூப்பிடுதீகளே, அவ அவ்வளவு அழகாயிருப்பாளோ? அவளை நானு பாத்துட்டுத்தான் போக வேண்டும். இன்னும் சத்தமா கூப்பிடுங்கள்” என்று அதட்டல்போட ஒருத்தி ஏ… அழகுராக்கு என்று சத்தமாகக் கூப்பிட்டிருக்கிறாள். உடனே என்னக்கா இந்தா வந்துட்டேன் என்று பரட்டைத் தலையோடு கன்னங்கரேல் என்று அழகுராக்கு வர அதிகாரிக்குக் கோபம் பொறுக்க முடியவில்லை. “பேராம்மா வைக்கீங்க பேரு. இப்ப எனக்கு நேரமில்லை. இல்லாட்டி இப்படிப் பேரு வச்சதுக்குக் குதிரையில இருந்து சாட்டையால நாலு வீச்சு வீசியிருப்பேன்” என்று சொல்லிக்கொண்டே போனானாம்.
இந்தப் பொம்பளைகளுக்கு எதுவும் புரியவில்லை. எடுவட்டப்பய என்ன சொல்லிட்டுப்போறான் என்று சொல்லிவிட்டுக் கட்டைத் தூக்கிக்கொண்டு வந்தார்களாம்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்