ஜானகி அம்மாள் - 125: நாம் கொண்டாட மறந்த தாவரவியலாளர்

ஜானகி அம்மாள் - 125: நாம் கொண்டாட மறந்த தாவரவியலாளர்
Updated on
2 min read

‘நீங்கள் எல்லா மலர்களையும் கொய்து விடலாம், ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது’ என்றார் பாப்லோ நெருடா. அதுபோன்றதுதான் கேரளத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ஈ.கே.ஜானகி அம்மாளின் புகழும். அவர் மறைந்துவிட்டாலும் ஒவ்வொரு வசந்தத்திலும் மலரும் மலர்கள் அவரை நினைவுகூர்கின்றன. ஆனால், தான் வாழும் காலத்தில் மட்டுமல்ல; அதற்குப் பிறகும் அவ்வளவாகக் கொண்டாடப்படாதவர் ஜானகி அம்மாள்.

தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சர்ரே கவுண்டியின் வீதிகளில் நவம்பர் மாதம் முழுவதும் பூத்துக் குலுங்கும் இளஞ்சிவப்பு மலர்கள் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவை என்பது வெகுசிலருக்கே தெரியும். ஜானகி அம்மாள், தன் 60 ஆண்டு கால தாவரவியல் ஆராய்ச்சியின்போது இங்கிலாந்தில் நட்டுவைத்த மலர்கள் இன்றைக்கும் பூத்துக்குலுங்குகின்றன. ஆயிரக்கணக்கான பூக்கும் தாவர வகைகளின் குரோமோசோம்கள் குறித்து இவர் ஆராய்ந்துள்ளார். தாவரவியல் துறையில் ஜானகியின் பங்களிப்பைப் பெருமிதப்படுத்தும் வகையில் வெள்ளை நிறத்தில் மலர்ந்து சிரிக்கும் மலருக்கு இவரது பெயரை (Magnolia Kobus Janaki Ammal) வைத்துள்ளனர்.

“ஜானகி அம்மாள், தாவர மரபணு ஆராய்ச்சியாளர் (Cytogeneticist) மட்டுமல்ல; அவர் கள உயிரியலாளர், தாவரப் புவியியலாளர், தாவரவியலாளர், தாவர இனப்பெருக்க ஆராய்ச்சியாளர், தாவர இனவரை வியலாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்பவர்” என்று தெரிவித்துள்ளார் சாவித்ரி ப்ரீத்தா. ஜானகி அம்மாள் குறித்து மூன்று கண்டங்களுக்குப் பயணம் செய்து 16 ஆண்டுகள் ஆய்வு செய்து Chromosome Woman, Nomad Scientist: E.K. Janaki Ammal, A Life 1897-1984 என்கிற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். ஜானகி அம்மாளின் 125ஆம் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் புத்தகத்தை சாவித்ரி வெளியிட்டுள்ளார். “பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய நூல்கள் நம்மிடையே மிகக் குறைவு. அவற்றிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகளைப் பற்றியவையே அதிகம். ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர் களைப் பற்றிய புத்தகங்களைத் தேடித்தான் கண்டடைய வேண்டியுள்ளது” என்று குறிப்பிடும் சாவித்ரி, அந்தக் குறையைப் போக்கும்விதமாகவே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

தாவர நேசம்

1897 நவம்பர் 4 அன்று தெலிச்சேரியில் (தற்போதைய தலச்சேரி) ஜானகி பிறந்தார். இவருடைய தந்தை ஈ.கே. கிருஷ்ணன், பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட சென்னை மாகாண உயர் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகப் பணியாற்றியவர். ஜானகிக்கு ஆறு சகோதரர்கள் ஐந்து சகோதரிகள். பிள்ளைகள் கலைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஜானகியின் பெற்றோர் விரும்ப, ஜானகியோ தாவரவியலைத் தேர்ந்தெடுத்தார். தாவரவியலில் இளநிலைப் படிப்பை சென்னை ராணி மேரி கல்லூரியிலும் ஹானர்ஸ் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார். திருமணமா, மேல்படிப்புக்கான நிதிநல்கையா என்கிற கேள்வி எழுந்தபோது ஜானகி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். முதுநிலைப் படிப்பை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

ஜானகி கத்திரிக்காய்

சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சில காலம் பணியாற்றியவர், முனைவர் பட்டப் படிப்புக்கு நிதிநல்கை பெற்று 1931இல் மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அந்தக் காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயில்வதே பெரும்சாதனையாக இருந்தபோது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் இணைந்த ஜானகியின் திறமை அசாத்தியமானது. அங்கே தாவரவியலில் கலப்பினம் குறித்த ஆய்வின்போது இவர் உருவாக்கிய கத்திரிக்காய் வகைக்கு ‘ஜானகி கத்திரிக்காய்’ எனப் பெயரிட்டார்.

முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். நம் மண்ணில் அதிக விளைச்சலைத் தருகிற கரும்பு ரகங்களைக் கலப்பின முறையில் உருவாக்கினார். பின்னர் லண்டனில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார். அங்கே பணியில் சேர்ந்த முதல் பெண் இவர்! இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஜெர்மானியப் படைகள் லண்டன் நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின. அந்த நாட்களில் போர் விமானச் சத்தம் கேட்டால் சட்டென்று கட்டிலுக்குக் கீழே பதுங்கிவிடும் ஜானகி, காலையில் உடைந்த ஜன்னல் கண்ணாடிச் சில்லுகளைப் பெருக்கியள்ளிவிட்டுத் தன் ஆய்வைத் தொடர்வாராம்! அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

எல்லையற்ற பயணம்

அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பையேற்று இந்தியா திரும்பிய ஜானகி, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். அதன் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். இந்தியாவின் சிறு கிராமங்களுக்கெல்லாம் பயணித்து ஏராளமான உள்நாட்டுத் தாவர வகைகளை ஆவணப் படுத்தியுள்ளார். தாவர வகைகளைச் சேகரிக்க 1948இல் நேபாளத்துக்குச் சென்ற முதல் பெண் இவர். சூழலியல், பல்லுயிர்த்தன்மை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட அவர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராகவும் விளங்கினார். கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கில் நீர்மின் நிலையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்தார்.

ஜானகியின் காலத்தில் அவரைப் போன்று தேர்ச்சியுடன் தாவரவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட ஆண் ஒருவரைக்கூடக் குறிப்பிட முடியாத அளவுக்கு நிகரற்று விளங்கினார். வாழ்நாள் முழுவதும் தாவர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர், மதுரவாயலில் உள்ள தன் ஆய்வுக்கூடத்தில் 87ஆவது வயதில் இறந்தார். பிறப்பால் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி, இந்தியாவில் தான் பணியாற்றிய இடங்களில் சாதிய, பாலினரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளார். ஆனால், அவற்றை அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. நிற்காத நதியாக ஓடிக்கொண்டே இருந்தார். அதுவே தாவரவியல் துறையில் அவரைத் தன்னிகரற்ற மலராக நிலைநிறுத்தியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in