

நடுத்தரக் குடும்பத்துப் பெண் நான். எனக்கெனத் தனி டயட் பின்பற்றாமல், வீட்டில் சமைக்கும் உணவைச் சாப்பிட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியுமா?
- பிரியா, சென்னை.
கற்பகம் வினோத், ஊட்டச்சத்து நிபுணர், சென்னை
பொறுப்புகளுக்கு நடுவே உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளைப் பெண்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்பதே பெரும்பாலான பெண்களின் கவலையாக உள்ளது. இந்த டயட்டைப் பின்பற்றினால் எடை குறையும், அந்த டயட்டைப் பின்பற்றினால் சருமம் பளபளக்கும் என டயட் கலாச்சாரம் துரத்துகிறது. நாள்தோறும் குடும்பத்தினருக்குச் சமைக்கும் உணவு வகைகளைத் தாண்டி டயட் பின்பற்றுபவருக்கெனத் தனியாகச் சமைப்பது எளிதான காரியமல்ல. இதனால், நேரமும் செலவும் இரட்டிப்பாகும். டயட்டைப் பின்பற்றினால் மட்டுமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பதில்லை. காலை எழுவதில் இருந்து இரவு உறங்கும் வரை சில முக்கியமான பழக்கங்களை முறையாகப் பின்பற்றினாலே உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
காலை உணவை 9.30 மணிக்கு முன்பும், மதிய உணவை இரண்டு மணிக்கு முன்பும், இரவு உணவை எட்டு மணிக்கு முன்பும் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. எந்த வேளை உணவையும் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டாம். ஒவ்வொரு வேளைக்கும் விதவிதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளலாம். கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றைப் பொடி, துவையல், குழம்பு அல்லது தொக்கு வகைகளாகச் சமைத்துச் சாப்பிடலாம். நாள்தோறும் மதியம், இரவு உணவின்போது ஒரு கப் காய்கறியைச் சாப்பிடலாம். பொரியல் சாப்பிட முடியாதபோது வெள்ளரி, முள்ளங்கி, கேரட், பீட்ரூட் போன்றவற்றைப் பச்சடியாகச் செய்து சாப்பிடலாம். தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு பழங்களைச் சாப்பிடலாம். அதிக இனிப்பு, கார வகைகள், ஓட்டல் உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.
தண்ணீர், இளநீர், எலுமிச்சைச் சாறு, ரசம், கிரீன் டீ, காபி, டீ, மோர் வகைகளாக நாள்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். தினமும் இரண்டு கோப்பைக்கும் அதிகமாக காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு இரவு 10 முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்லுங்கள். எட்டு மணி நேர உறக்கம் ஆரோக்கியமான உடலுக்கு மிக முக்கியம். இதைத் தவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அன்றாடம் நம் வாழ்வில் இது போன்ற சில பழக்கங்களைப் பின்பற்றி, சரியான உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலே உடலை ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம்..