பெண்கள் 360: ஆண்களை விஞ்சிய அர்ஜுனா வீராங்கனைகள்

பெண்கள் 360: ஆண்களை விஞ்சிய அர்ஜுனா வீராங்கனைகள்
Updated on
2 min read

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்த ஆண்டு தேர்வாகியிருக்கும் 25 பேரில் 13 பேர் பெண்கள் என்பது பெருமிதமளிக்கிறது. விளையாட்டில் ஈடுபடுகிற ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. காரணம், குறிப்பிட்ட சில உள்ளரங்க விளையாட்டுகள் மட்டுமே பெண்களுக்கானவை என்கிற பிற்போக்குத்தனம் இப்போதும் நீடிப்பதுதான். ஆண்களோடு ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் விளையாடினாலும் அதிக எண்ணிக்கையில் விருதுக்குத் தேர்வாகியிருப்பதைப் பெண்களுக்கான அங்கீகாரமாகவே பார்க்க வேண்டும்.

அர்ஜுனா விருதாளர்களில் சீமா புனியா (தடகளம்), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), நிக்கத் ஜரீன் (குத்துச்சண்டை), தீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுசீலா தேவி (ஜூடோ), சாக்‌ஷி குமாரி (கபடி) உள்ளிட்ட 13 பேரில் இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிச் சுடுதல்), ஜெர்லின் அனிகா (காதுகேளாதோருக்கான பாட்மிண்டன்) ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ஜெர்லின் அனிகா, 13 வயதில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். 2017இல் துருக்கியில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அதில் ஐந்தாம் இடம்பிடித்த பின்னடவை இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றதன்மூலம் சமன்செய்தார்.

துப்பாக்கிச் சுடுதலில் ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று அழைக்கப்படும் இளவேனில் வாலறிவன், கடலூரைச் சேர்ந்தவர். பள்ளி அளவிலான குழுப் போட்டியில் வென்றதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வத்துடன் பயிற்சிபெற்றார். 2018இல் சிட்னியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்றதன்மூலம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அதில் வெற்றிபெறவில்லையென்றாலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவருகிறார்.

மருத்துவர்களின் அலட்சியம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த அதிர்ச்சி யைத் தொடர்ந்து பிஹாரைச் சேர்ந்த 24 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிஹாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் முன்னெடுப்பில் 53 கிராமப்புறப் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 24 பேருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அவர்கள் உணர்வுநிலையில் இருக்கும்போதே மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்துள்ளனர். “வலியால் துடித்து அலறியபோது என் கையையும் காலையும் நான்கு பேர் கட்டிலோடு சேர்த்து நான் அசையாத வண்ணம் அழுத்திப் பிடித்துக்கொண்டனர்” என்று பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். மனிதத் தன்மையற்ற இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான பிறகு, விசாரணைக்கு உத்தரவிடும்படி மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் உத்தரவிட்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in