

பள்ளியில் சேர்வதற்கு ஆசையோடு வந்த அந்தச் சின்னப் பெண், ‘அரக்கி’ என்று பழித்து விரட்டப்பட்டார். அதே பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடே திரும்பிப் பார்க்கும் ஆசிரியையாக மாறினார். அவர் நோயலியா கரீய்யா. ‘டவுன் சிண்ட்ரோம்’ குறைபாட்டுடன் பிறந்த நோயலியா, இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் முதல் முன்மாதிரி டீச்சர்!
“நீ குள்ளம், கொஞ்சம் கறுப்பு, முடி அடர்த்தி போதாது, ஆனாலும் ஒரு சுற்று குண்டு..!” – நாம் எவ்வளவு சிறப்பாக மிளிர்ந்தாலும், சாய்வு நாற்காலியில் சரிந்தவாறு தம் விருப்பத்துக்கு ஏற்ப விமர்சித்துத் தள்ளுபர்கள் அதிகம். அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வளவு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை பலருக்கும் இல்லை. படிப்பதற்காக ஆசை ஆசையாகப் பள்ளிக்கு வந்த சிறுமி நோயலியாவையும் அப்படித்தான் அவமானப்படுத்தினார்கள். ‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்புடன் பிறந்த நோயலியாவை, பள்ளி முதல்வரே ‘அரக்கி’ எனப் பழித்து விரட்டியடித்தார்.
நோயல்ல… குறைபாடு
உலகம் முழுக்க வருடத்திற்குச் சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகள் டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மரபு ரீதியிலான பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கிறார்கள். இது குறைபாடுதானே தவிர நோயல்ல. வழக்கமான எண்ணிக்கையிலிருந்து குரோமோசோம் பிறழ்வதன் பலனாக டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள் கருவிலேயே உருவாகிறார்கள். உடல், மன வளர்ச்சியில் நலிவுற்றுப் பிறக்கும் குழந்தைகளுக்கு
ஆதரவும் அரவணைப்பும் அதிகம் தேவை. இயல்பான குழந்தைகளைவிட இரண்டு மடங்கு கூடுதல் கவனிப்பும், பயிற்சியும் தந்தால் அவர்களாலும் படிக்க முடியும். தங்களது அடிப்படை வேலைகளை மற்றவர்களைப் போலவே செய்ய முடியும். ஆனால் கைதூக்கிவிட வேண்டிய நமது மனப்பான்மையில் இருக்கும் கோளாறு, அவர்களை எழ முடியாதபடி முடக்கிவிடுகிறது. இந்த பொதுப் புத்தியின் போதாமை உலகம் முழுமைக்கும் பொருந்தும்.
ஏன் இந்தப் புறக்கணிப்பு?
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சிறுமி நோயலியாவும் அப்படித்தான். தன்னுடைய குறைபாட்டிற்கு, தான் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது என்றபோதும், அதற்கான தண்டனை அந்தச் சின்னப் பெண் மீதே விழுந்தது. நோயலியாவுக்கும் மற்றவர்களைப் போலவே பள்ளிக்குச் செல்ல வேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும் என்று ஆசை. ஆனால், நோயலியாவைப் பள்ளியில் சேர்த்தால் மற்ற குழந்தைகள் பயப்படுவார்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேடிக்கை பார்த்தவர்களும் தங்கள் பங்குக்குப் பூதம் என்று சொல்லி அவமானப்படுத்தினார்கள்.
விரட்டப்பட்ட இடத்தில் தன்னை நிரூபித்திருக்கும் நோயலியா, இதற்காகக் கடந்த தடைகள் ஏராளம். உருவத்தைக் காரணமாக்கி பள்ளியில் படிப்பு மறுக்கப்பட்ட சிறுமிக்குப் பெற்றோரே பாடம் சொல்லித்தந்தனர். மகளின் தொடர் ஆர்வம் பார்த்து வீட்டிலேயே தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களின் அரவணைப்பும் முயற்சியும் வீண் போகவில்லை. பேச்சு, செயல்பாடு, கற்கும் திறன் எனப் படிப்படியாக நோயலியா தனது மரபுக் குறைபாட்டின் பிடியிலிருந்து விலக ஆரம்பித்தார்.
விவரம் தெரியத் தொடங்கியதும் நோயலியாவின் காதில் அவர் அரக்கி என ஏசப்பட்டது எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அந்தப் பள்ளி வளாகமும் அவர் நினைவில் உறைந்து கிடந்தது. இவற்றின் அக உந்துதலில் பள்ளி ஆசிரியையாக மாறத் தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பொறுமையால் கிடைத்த வெற்றி
திறமைகளை வளர்த்துக்கொண்டு ஆசிரியையாக வந்து நின்றவரை பள்ளிகள் மறுபடியும் மறுதலித்தன. தன்னுடைய திறமையைப் பொறுமையாக நிரூபித்தார். நகர மேயர்வரை நோயலியாவின் பெயர் பிரபலமானது. பள்ளி ஆசிரியை ஆன பிறகும் குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து நோயலியாவுக்கு எதிர்ப்பு வந்தது. தன்னை ஏற்காத உலகத்திடம் சோர்ந்து போகாது, தனது செயல்பாடுகளின் வழியே அவர் தன்னை நிரூபித்தார்.
இன்று மழலைகளின் விருப்பத்திற்குரிய ஆசிரியையாக வளையவருகிறார் நோயலியா. கதை, பாட்டு, இசை, விளையாட்டு என்று நோயலியா டீச்சரைக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. சிறு வயதில் முகம், தலை, பருமன் என நோயலியாவின் பழிக்கப்பட்ட உடல்வாகே, இன்று சின்னக் குழந்தைகளின் விருப்பத்துக்கு உரியதாகியிருக்கிறது.
காதுகொடுத்து கேட்போம்
டவுன் சிண்ட்ரோம் பாதிப்புக்கு ஆளானபோதும், சிறப்புப் பள்ளிகளின் ஆசிரியையாகத் தம்மை வளர்த்துக் கொண்டதில் கொலம்பியாவின் பிரையன், காஸாவின் ஹெபாப் என உலகின் பல திசையிலிருந்தும் இளம் பெண்கள் ஒரே தருணத்தில் வெளிப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக இடர்பாடுகளைச் சந்தித்தபோதும், பொதுப்பள்ளி ஒன்றின் ஆசிரியையாகத் தன்னை நிரூபித்த வகையில் உலகம் முழுக்க திரும்பிப்
பார்க்க வைத்திருக்கிறார் நோயலியா. டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் நம்பிக்கை விடிவெள்ளியாகி இருக்கும் நோயலியா கரீய்யா அடிக்கடி சொல்வது இதைத்தான்: “கவனியுங்கள், காது கொடுத்துக்
கேளுங்கள், அது போதும்! என்னைப் போன்றவர்கள் தாமாகத் தங்களது சிரமங்களில் இருந்து விடுபடுவார்கள்”.