

கைபேசி, இணையதளம், தொலைக் காட்சி, போதைப் பொருள்கள் இவையும் பதின்ம வயதினரை ஆட்டிப் படைக்கும் மாயைகள்தாம். உணர்வுகளால் உந்தப்பட்டு வழிதவறாமல் இருக்க வேண்டுமானால், உணர்வுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசவேண்டும். நமது எண்ணங்களில் இருந்துதான் உணர்வுகள் வருகின்றன. அவை எண்ணங்களை மேலும் தீவிரமடையச் செய்யும்போது, உணர்வுகளின் வீரியம் கூடுகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக, அடிப்படையில் எண்ணங்கள் தாம் மூலகாரணம்.
எதிர்மறை எண்ணங்கள், உங்கள் எதிரி. தனது உண்மையான தகுதியைவிடத் தன்னைக் குறைத்து மதிப்பிடும் பெண்கள் எதையுமே எதிர்மறையாகத்தான் பார்ப்பார்கள். ‘நான் அழகாக இல்லை; அதனால்தான் ஆண்கள் என்னைப் பார்ப்பதில்லை’, ‘நான் மண்டு, என்னால் மார்க் வாங்கவே முடியாது’, ‘இன்று என் பிரசன்டேஷனை ஒரு தோழி மட்டமாகப் பேசிவிட்டாள்; நான் ரொம்ப வேஸ்ட்’… இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள்தாம் வருத்தம், ஏமாற்றம், எரிச்சல், கோபம், அவமானம், பயம், பதற்றம், குற்றவுணர்வு, பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளின் பிறப்பிடம்.
முதலில் மனத்தைக் கவனியுங்கள். எண்ணங்கள் சங்கிலித் தொடராக வரும். எண்ணங்களையும் அதிலிருந்து வரும் உணர்வுகளையும் பிரித்துப் பார்க்கப் பழகுங்கள். தீங்கு விளைவிக்கும் எண்ணங்களைக் களையெடுங்கள். தெருவில் தேங்கி இருக்கும் நீர் நாளடைவில் மண்ணுடனும், வேறு குப்பைகளுடனும் சேர்ந்து அழுக்கான குட்டையாக மாறி நாற்றமெடுக்க ஆரம்பிக்கும். அதுபோல், எதிர்மறை எண்ணங்கள் சேரச்சேர மனம் நாற்றமெடுக்கும் குட்டையாகிவிடும். அந்தக் குட்டையில் எப்படி நல்ல செடி வளரும்? தேவையற்ற எண்ணங்களைச் சேர விடாதீர்கள். எப்படி? எண்ணங்களைக் கவனிக்கும்போதே, நேர்மறை எண்ணங்களை மனத்தில் போட்டுக்கொண்டே இருந்தால், எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடும். எந்த எண்ணத்தை அடிக்கடி மனத்தில் நிறுத்துகிறீர்களோ, அது உங்களை விடாது.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். கயலுக்கு இன்று பரீட்சை. சரியாகப் படிக்காததால் எழும் எண்ணங்கள்: ‘நான் தேர்வுக்குச் சரியாகவே படிக்கவில்லை. நான் படிக்காதது தேர்வில் வந்துவிட்டால்? ஃபெயில்தான். அப்பா சத்தம் போடுவாரே’ போன்ற அடுக்கடுக்கான எண்ணங்கள் பதற்றத்தை ஏற்படுத்தும். சங்கிலித் தொடராக எண்ணங்கள் போகும் முன், இரண்டாவது சங்கிலியிலேயே வெட்டிவிட வேண்டும். நான் படிக்காதது வந்துவிட்டால் என்பதை, ‘எனக்குத் தெரிந்த பதில்களை எழுதுவேன்; பாஸ் மார்க்கூடவா வாங்க மாட்டேன்? இப்போது எழுதாமல் இருப்பது முட்டாள்தனம்’ என்று நேர்மறை எண்ணங்களைக் கொண்டுவரும்போது பதற்றம் மறையலாம்.
ஒவ்வொரு முறையும் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அவற்றுக்கு எதிரான நேர்மறை எண்ணங்களைக் கொண்டு நிறுத்த முடியும். அதனால், வளமான எண்ணங்களை உடையவருடன் பழகுங்கள். பல கருத்துள்ள சொற்பொழிவுகளைக் கேளுங்கள். கருத்துள்ள வாசகங்களை அழகிய போஸ்டர்களாகச் செய்து உங்கள் அறையில் மாட்டிவைத்து அடிக்கடி படியுங்கள். நல்ல கருத்துகளும் எண்ணங்களும் நிறைந்திருக்கும் மனத்தில் வேண்டாதவற்றுக்கு இடம் ஏது?
இவற்றையெல்லாம் பின்பற்ற முடிய வில்லையா? எதிர்மறை எண்ணங்கள் வரும்போது, அதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனத்தில் உள்ளது எழுத்தாக உருமாறிவிடும்போது, எதிர்மறை எண்ணங்கள் மறையும். அல்லது அந்த நேரத்தில் உங்களைக் களைப்படையச் செய்யும் விதத்தில் உடற்பயிற்சி, நடனம், ஓவியம் என்று ஏதோவொன்றில் ஈடுபடுங்கள். அது எதிர்மறை எண்ணங்களைத் தூக்கியெறிய உதவும். இல்லா விட்டால் இவை மனத்தில் சேரச் சேர பாரத்தைச் சுமப்பீர்கள். பாரத்தோடு பயணம் எப்படி ருசிக்கும்? உணர்வுகளுக்கு நீங்கள் அடிமையாக வேண்டாம்.
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.