

முப்பது வருடங்களுக்கு முன், மூன்றுமே பெண் குழந்தைகளாகப் பிறந்த காரணத்தால், அந்தப் பெண்ணின் குடிகாரக் கணவர் மறுமணம் செய்துகொண்டார். கைக்குழந்தையுடன் ஏழ்மையில் வாடிய அந்தப் பெண், தன் பெற்றோர் சேமித்த சிறு தொகையை வைத்து மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
தன் நண்பர் மூலம் கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டு, பகுதிநேர வேலையாகக் கைவினைப் பொருட்கள் செய்து விற்க ஆரம்பித்தார். ஏற்கெனவே தையல் கலை பயின்றதால், வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் துணிகள் தைத்துக் கொடுத்து அதன் மூலமாகவும் வருமானம் பெற ஆரம்பித்தார்.
இப்போது, தனது சுயசம்பாத்தியத்தில் சொந்த வீட்டில் வசித்துவருகிறார். மூன்று பெண்களும் செவிலியர் படிப்பு முடித்து, மருத்துவமனையில் வேலைசெய்து வருகின்றனர். அவர்களும் பகுதிநேர வேலையாகத் தங்கள் அம்மாவுக்கு உதவியாகத் தையல், விதவிதமாகக் கைவினைப் பொருட்கள் செய்வது என்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.
அவரிடம் பேசியபோது, “வாழ்க்கையே தலைகீழாகத் தெரிந்தபோது, என் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தேன். அவர்களுக்காகவே என் எண்ணங்களை நல்லவிதமாக மாற்றிக்கொண்டேன். வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதால் கைத்தொழிலைக் கற்றேன். என் மனமும் லேசாக ஆரம்பித்தது. தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி என்று உடலையும் மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறேன். நம் வாழ்க்கையில் நம்மால் இயன்ற வரை பிறருக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் என் குழந்தைகளையும் செவிலியர் படிப்பு பயில வைத்தேன். அவர்களும் வெவ்வேறு கலைகளைக் கற்றுவருகிறார்கள். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள் எல்லாம் வேகவைத்த பிறகு மென்மையாகிவிடும் உருளைக்கிழங்குபோல் என்னை மாற்றவில்லை. அவை என்னை வேகவைத்த பின்னர் கடினமாக மாறும் முட்டை போலவும் மாறவில்லை. அதற்கு மாறாக, பல சோதனைகளைக் கடந்து வந்தாலும் உபயோகமாக புத்துணர்வு அளிக்கும் காபிக் கொட்டையைப் போல இருக்க வேண்டும் என்பதை அவை உணர்த்தின” என்று கூறி அழகாகப் புன்னகைத்தார்.
உண்மையில் அவர் இவ்வளவு சோதனைகளைக் கடந்த பின்னரும் துளிக்கூடக் கர்வமோ, அலட்சியமோ கொள்ளவில்லை. துவண்டுபோய் கவலைப்படவுமில்லை. அடக்கமான வழியில் வாழ்க்கையைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டார். படிப்பு, வேலை, பணம் என்பது மட்டுமே வாழ்க்கை இல்லை. பிறருக்குச் சேவை செய்து, பல அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்வதும்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொண்டேன். இவரது வாழ்க்கை நம் அனைவருக்குமே ஒரு படிப்பினையாக இருக்கும்.
ஏ. சாந்தி, தூத்துக்குடி.