வானவில் பெண்கள்: இந்திய வீராங்கனையின் சர்வதேச அடையாளம்

வானவில் பெண்கள்: இந்திய வீராங்கனையின் சர்வதேச அடையாளம்
Updated on
2 min read

சர்வதேச மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான சர்வதேச நடுவராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த மனோன்மணி கமலநாதன். இந்தச் சிறப்பைப் பெறும் முதல் இந்தியப் பெண் இவர்தான்.

கோவை ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களில் உடற்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் மனோன்மணி, கடந்த 16 ஆண்டுகளாகப் பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகச் செயல்பட்டுவருகிறார். டெல்லியில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் நடுவராக இருந்தார். 2011-ல் அமெரிக்காவின் சாக்ரமென்ட்டோ நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர் தடகளப் போட்டியில் நடுவராகப் பங்கேற்றார். 2015-ல் பிரான்ஸ் லியோன் (Lyon) நகரிலும், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பர்த் (Perth) நகரிலும் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டிகளில் தொழில்நுட்ப நடுவராகப் பணியாற்றியுள்ளார். இந்தியா சார்பில் பங்கேற்ற நடுவர்களில் இவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்திய மூத்தோர் தடகள சம்மேளனத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராக இருந்த என்னை, சர்வதேச மூத்தோர் தடகள சம்மேளனம், 2011-ல் சர்வதேச நடுவராக நியமித்தது. அதில் சிறப்பாகச் செயல்பட்டதால், தொடர்ந்து நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று சொல்கிறார் மனோன்மணி.

இவரது குடும்பம் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டது. இவருடைய அம்மாவும் மகளும் தடகள வீராங்கனைகள். குடும்பமும் பள்ளி நிர்வாகமும் அளிக்கும் ஒத்துழைப்பால், பல்வேறு நாடுகளுக்கும் சென்று, நடுவர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டுவருகிறார். நடுவராக மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

நம் நாட்டில் 70 வயதானவர்கள் மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அதேசமயம், வெளிநாடுகளில் 85, 90 வயதானவர்கள்கூடச் சிறப்பாக விளையாடுகிறார்கள். அந்த நாடுகளின் உணவுப் பழக்கம், பயிற்சி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருப்பதால், அவர்களால் பிரகாசிக்க முடிகிறது.

இந்தியாவில் சிறந்த பெண் நடுவர்கள் இருந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. செலவு அதிகமாகும் என்பதும் ஒரு காரணம். வெளிநாடுகளில் உள்ள விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் உயர் தரம் கொண்டவையாக இருக்கின்றன. மனோன்மணி அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்றபோது உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சர்வதேச மூத்தோர் தடகள சம்மேளனம் செய்து கொடுத்திருக்கிறது.

“நம் நாட்டைப் பொறுத்தவரை மிகத் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். விளையாட்டில் உள்ள அரசியல் காரணமாகப் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மட்டுமின்றி, வீரர்கள் பலரும் வேலைவாய்ப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர். வேலை கிடைத்துவிட்டால், பெரும்பாலானோர் சாதனைக்கு முயற்சி செய்வதில்லை. தற்போது விளையாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் பத்து ஆண்டுகளில் விளையாட்டில் மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ வாய்ப்புள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்ய வேண்டுமென்பதே என் லட்சியம்” என்கிறார் மனோன்மணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in